Store
  Store
  Store
  Store
  Store
  Store

கண் நோயை தீர்க்கும் கார்த்திகை பெளர்ணமி !


    டந்த காலத்தை அசைபோட்டு பார்ப்பதில் அலாதியான சுகமுண்டு. அதுவும் நமக்கு பிடித்தமான, நாம் விருப்பத்தோடு அனுபவித்த பொருட்கள் இன்று இல்லாத போது, அதை நினைத்து நினைத்து ஏக்கத்தோடு சிந்தனை வானில் பறப்பது தனித்தன்மையான சுகமென்றால் அது மிகை இல்லை. என் பாட்டியின் வீடு மிகவும் சிறியது தான். பச்சை மண்ணை பிசைந்து உருட்டி கட்டிய சுவரும், பனை ஓலையில் வேய்ந்த கூரையும், கதவுகள் கூட பனை மரத்தை இளைத்து செய்திருந்த விதமும் எளிமையானது மட்டுமல்ல அழகானதும் கூட. நான் அந்த வீட்டில் தான் பிறந்தேன். சாணம் போட்டு மெழுகிய தரையில் நடு முற்றத்தில் வானத்தை பார்த்து படுத்திருந்த அந்த நாட்கள் இனி கனவிலும் வராது. காரணம் அந்த வீடு இப்போது இல்லை. நாகரீகம், வளர்ச்சி, வசதி என்ற பெயர்களால் அது காணாமலே போய்விட்டது. ஆனாலும், நினைவுகள் சாவதில்லை.

அந்த வீட்டில் ஒருநாள், மாலைநேரம் என் பாட்டி கதவுகளை கழுவி பல இடங்களில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, அலங்காரம் செய்து கொண்டிருந்தார். இப்படி வருடதிற்கு ஒருமுறை செய்வது அவர் வழக்கம். கடந்த காலங்களில் ஏன் அப்படி செய்கிறீர்கள் என்று கேட்க எனக்கு தோன்றியது இல்லை. காரணம், என் வயது குறைவாக இருக்கலாம். இப்போது ஏனோ அந்த கேள்வியை கேட்க எனக்கு தோன்றியதும் கேட்டும் விட்டேன். திண்ணையில் என் கூட வந்து உட்கார்ந்த பாட்டி ஒரு கதை சொல்ல துவங்கினார். ரொம்ப காலத்திற்கு முன்பு மாவேலி அப்படின்னு ஒரு ராஜா, நம்ம நாட்ட ஆட்சி செய்தாரு. அவரு ரொம்ப நல்லவரு. மக்கள் எல்லோரும் எல்லா காலத்திலேயும் சந்தோசமா இருக்கணும்னு ஆசை பட்டாரு. அதற்காக எவ்வளவோ நல்ல காரியங்கள செய்தாரு. ஆனாலும், மாவேலி ராசாவுக்கு மனசுக்குள்ள ஒரு கர்வம் இருந்துச்சு.

என்ன மாதிரி நல்லவன் யாரு இருக்கா? நல்லதையே செய்றேன். உயிரே போனாலும், கொடுத்த வாக்க காப்பாத்துறேன். கடவுள் கூட என்ன மாதிரி சொன்னா சொன்னப்படி இருக்கிறது இல்ல. அப்படிங்கிற கர்வம் மாவேலிகிட்ட அதிகரிச்சு போச்சு. இத அடக்கறதுக்கு பகவான் வாமன அவதாரம் எடுத்து வந்தாரு. மூன்றடி மண்ணு எனக்கு தானமா வேணும்னு கேட்டாரு. கோடிக்கணக்கில் தங்கமா கேட்டா கூட, ஒரு நொடியில என்னால தரமுடியும் மூன்றடி நிலமா தரமுடியாது என்ற எண்ணத்துல அளந்து எடுத்துக்கோ அப்படின்னு சொன்னார். பகவான் ஓரடியால பூமியையும், மறு அடியாள வானத்தையும் அளந்துட்டு மூணாவது அடி எங்கே வைக்கிறது னு கேட்டாரு. மாவேலியின் கர்வம் போச்சு. என் தலையில கனம் ஏறி போனதுனால அகங்காரப்பட்டு தப்பு பண்ணிட்டேன் என்ன மன்னிக்கனும்னு தலைகுனிஞ்சி நின்னாரு. தப்பு செய்தா ராஜா என்றாலும் தண்டனை உண்டு தானே? அதனால பகவான் மவேலியை சிறையில் போட்டுட்டாரு. மாவேலி ராசா கடைசியா ஒரே ஒரு விண்ணப்பம் வச்சாரு.

நல்லதோ கேட்டதோ நாட்டு மக்கள் பேர்ல அன்பு வச்சிட்டேன். என் மக்கள நான் வருசத்துல ஒரு முறையாவது வந்து பாக்கணும். அதற்கு பகவான் வரம் தரனும்னு கேட்டாரு. அகங்காரம் பிடித்தவரா இருந்தாலும், மாவேலி நல்ல ராஜா தானே. அதனால பெருமாள் அவருக்கு கேட்ட வரத்த கொடுத்தாரு. அதனால கார்த்திகை மாசத்தில இன்றைய நாளில ராத்திரி நேரம், மாவேலி சக்கரவர்த்தி நாடு நகரத்த, தெரு தெருவா வந்து பார்ப்பாரு அவரு பார்க்கும் போது மக்கள் ஆனந்தமா இருப்பதாக காட்டிக்க வேணும் அதனால் தான் கதவில மஞ்சள் பூசி பொட்டு வச்சு பூஜை செய்றோம் அப்படின்னு விளக்கம் கொடுத்தாங்க. பாட்டி சொன்ன இதே கதையை தான் நாகர்கோவிலில் ஆவணி மாதம் வரும் ஓணம் பண்டிகைக்கு பெரியம்மா சொன்னங்க அதே கதைய. இப்ப நீங்க சொல்றீங்க. உண்மையிலேயே மாவேலி ராஜா வருவது ஆவணி மாதமா? கார்த்திகை மாதமா? என்று நான் பாட்டியிடம் கேட்கவும் அவர்கள் என்னை முறைத்ததும் இன்னும் மறந்து போகவில்லை. எது எப்படியோ கேரளாவில் ஆவணி மாதம் வரும் மாவேலி தமிழ் நாட்டிற்கு நடந்து வருவதற்கு சிறிது காலம் பிடிக்கும் இல்லையா? அதனால் தான் இரண்டு மாதம் சென்று கார்த்திகையில் வருகிறாரோ என்னவோ? என்று நான் மனதை தேற்றிக் கொண்டேன்.

கார்த்திகை மாதம் பெளர்ணமி தினத்தில், பகவான் விஷ்ணு மாவேலி சக்கரவர்த்திக்கு வரம் அளித்து ஆட்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது. நாம் கடவுளிடம் சென்று அவருடைய அனுக்கிரகத்தை பெறுவது ஒருவகை என்றால், கடவுளே நம்மிடம் வந்து தனது அனுக்கிரகத்தையும் தந்து தன்னுடைய தாசானு தாசனாக ஆட்கொள்வது என்பது வேறொரு வகை. இந்த இரண்டாம் வகை மிகச்சிறந்தது. எல்லோருக்கும் கிடைக்காதது. அது அசுர குலத்தில் பிறந்தாலும், தனது நற்பண்புகளால் உயர்ந்த மாவேலிக்கு தவம் செய்யாமலே, விரதங்களை அனுஷ்டிக்காமலே, பகவானால் வலிந்து கொடுக்கப்பட்டது. அதனால் தான் அந்த நாளை திருகார்த்திகை திருநாள் என்று இன்று வரை கொண்டாடுகிறோம்.

கார்த்திகை மாத பெளர்ணமி வானத்திற்கு மட்டும் வெளிச்சம் தருவது அல்ல. வானத்தை போல, எல்லை இல்லாமல் கிடக்கின்ற நமது மனதிற்கும் வெளிச்சம் தருகிற நாளாகும். அது மழைக்காலம் என்பதனால், சீதோஷ்ணநிலை மிக சிறப்பாக இருக்கும். உஷ்ணத்தில் உருவான விஷக் கிருமிகள் அழிந்து கொண்டே இருக்கும் இந்த நேரத்தில், பகவத் சிந்தனையை நாம் மேற்கொண்டால், மிக உயர்ந்த நிலையை அடையலாம். அன்று வீடு தோறும் ஏற்றப்படுகிற தீபங்கள், ஒவ்வொருவர் மனதிலும் ஏற்றப்படும் ஞான  தீபங்களாகும். கார்த்திகை பெளர்ணமி அன்று கண் நோய் இருப்பவர்கள் ஆலயங்களுக்கு தீப தானம் செய்தால் கண் நோய் மறைந்து தீட்சண்யமான பார்வை கிடைக்குமென்று நம்பிக்கை இருக்கிறது. கார்த்திகையில் பெய்கின்ற கனமழை பெளர்ணமி தினத்திற்கு பிறகு குறையும் என்றும் கூறுவார்கள். மழை குறைகிறதோ என்னவோ பெளர்ணமி வழிபாட்டிற்கு பிறகு மனதிலுள்ள சுமை கண்டிப்பாக குறைகிறது.




Contact Form

Name

Email *

Message *