Store
  Store
  Store
  Store
  Store
  Store

சாகும் வரை நோய் வராமல் தடுக்க !




ன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடத்திற்கு பிறகே ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு இப்போது மூன்று வயதாகிறது. இறைவனின் அருளாலும், உங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசிர்வாதத்தாலும், மிக நன்றாகவே இருக்கிறான். ஒரு மனிதனுக்கு ஆயுள், ஆரோக்கியம், அறிவு, செல்வம் போன்றவைகள் இறைவன் கொடுக்கின்ற வரம் என்று எனக்கு தெரியும். இருந்தாலும், மனிதர்களாகிய நாமும் அதை பெறுவதற்கு தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். அதனால், என் மகனை சிறிய வயது முதற் கொண்டே இயற்கை வழியில் ஆரோக்கியம் உடையவனாக வளர்க்க வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்கு உங்களது அறிவுரையும், வழிகாட்டுதலும் இருந்தால் சிறப்பாக இருக்குமென்று கருதுகிறேன். எனவே இந்த ஏழையின் குரலுக்கு செவி சாய்த்து வழிகாட்டுமாறு மண்டியிட்டு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சாம்பசிவம்,
சென்னை.




மது நாட்டில் ஆதி காலத்தில், அஸ்வினி குமாரர்கள் என்ற மருத்துவ ஞானிகள் வாழ்ந்தார்கள். அவர்களை தெய்வங்களாக வேதங்களும் போற்றுகின்றன. அஸ்வினி குமாரர்கள் மருத்துவ துறையில் இன்றளவும் வியப்படையும் வண்ணம் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். அறுவை சிகிச்சை என்பதே அவர்களால் தான் முதல் முதலில் உருவாக்கப்பட்டது என்றால், அவர்களின் திறமையை நினைத்துப் பாருங்கள்.

அவர்கள் மனித உடம்பில் நீர், நெருப்பு, காற்று ஆகிய மூன்று பூதங்களின் கைவரிசையால் தான் சுகமும், சுகக் கேடும் ஏற்படுகிறது என்கிறார்கள். அதாவது வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று சக்திகளின் ஏற்ற இறக்கத்தால் தான் நோய்கள் வருவதும், போவதும் நடைபெறுகிறது என்பது அவர்களின் கருத்து.

நாமும் நமது அனுபவத்தை சற்று ஆழ்ந்து சிந்திப்போமேயானால் அஸ்வினி குமாரர்களின் முடிவை நிச்சயம் ஏற்றுக்கொள்வோம். உடம்பு குளிர்ச்சி அடைந்தால், அதாவது கபம் அதிகமாகிப் போனால் சளிபோன்ற தொல்லைகள் ஏற்படுவதும், வாதம் அதாவது வாய்வு அதிகரித்தால் உடல்வலி அதிகப்படுவதும், சூடு அதாவது பித்தம் அதிகரித்தால், கண் எரிச்சல், சிறுநீர் உபாதை போன்றவைகள் வருவதையும் காண்கிறோம்.

ஆயுர்வேத மருத்துவர்கள் கூட, இந்த தோஷங்கள் ஒரு உடம்பில் எப்படி இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே சிகிச்சை அளிக்கிறார்கள். சித்த வைத்தியத்தில் நாடி பிடித்து பார்ப்பதே வாத, பித்த, சிலேத்துமத்தை அறிந்து கொள்வதற்கு தான். இந்த மூன்றும் சரியாக, சமமாக இருந்தால் எந்த தொல்லையும் இல்லை. ஏதாவது ஒன்று கூடி குறைந்தால், நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்ற வண்டி உட்கார்ந்து விடுகிறது. எனவே சிறிய வயது முதல் இந்த மூன்றையும் சமமாக வைத்துக் கொண்டோம் என்றால் எந்த சிக்கலும் கிடையாது.

நீர், நெருப்பு, காற்று ஆகிய மூன்று தன்மைகளை சீராக வைத்து கொள்வதற்கு பெரியளவில் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. சிறிது முயற்சி செய்தாலே போதுமானது. அதிகாலையில் இஞ்சியை இடித்து சாறெடுத்து, சற்று நேரம் பாத்திரத்தில் கலங்காமல் வைத்தால் சிறிய வெள்ளைப்படலம் அடியில் தங்கிவிடும் மேலே தெளிவாக இருக்கும். இஞ்சி சாற்றை இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, சிறிது தேனில் கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

மதியம் சுக்குப் பொடியை அரைத் தேக்கரண்டி இதமான சுடுநீரில் கலந்து குடிக்கவும். சுக்கைப் பொடி செய்யும் போது கவனம் தேவை. காரணம் சுக்கின் மேலே ஒட்டி இருக்கும் அதன் தோல் உடம்புக்கு தேவையில்லாதது. எனவே சுக்கை வாங்கியவுடன், அதில் சற்று அதிகமாக சுண்ணாம்பு தடவி, வெயிலில் காய வைத்து அதன் பிறகு சுண்ணாம்பு எரியும் அளவிற்கு நெருப்பில் காட்டி, கத்தியை வைத்து நன்றாக சுரண்டி, சுத்தப்படுத்திய பிறகே சுக்கைப் பொடி செய்து பயன்படுத்த வேண்டும்.

இரவில் உறங்கப் போவதற்கு கால்மணி நேரத்திற்கு முன்பு கொட்டை எடுத்து விட்டு பொடி செய்த கடுக்காயை சுக்குப் பொடி போலவே, வெந்நீரில் கலந்து குடித்து விட வேண்டும். இதை மட்டும் தினசரி பழக்கப்படுத்தி விட்டால், சாகும் காலம் வரையிலும் பெரிய நோய்கள் என்பதே வராது. இதை தான் நம் முன்னோர்கள், காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்று வழக்கப்படுத்தினால், விருத்தரும் குமரர் ஆவர் என்று சொல்லியிருக்கிறார்கள்.







Contact Form

Name

Email *

Message *