Store
  Store
  Store
  Store
  Store
  Store

சும்மா இருப்பதில் என்ன சுகம்...?

கிருஷ்ணன் சுவடு 6

  ண்ணன் உலக மாந்தர்கள் அனைவரும் விடிவதை கண்குளிர காணவேண்டும் என்பதற்காக, எல்லோருக்கும் பொதுவான கீதையை நமக்கு தந்தார். கண்ணன் தந்த கீதையை கர்ம யோகத்தை போற்றுகின்ற நூலென்று சொல்பவர்கள் உண்டு. அது ஞான யோகத்தை தான் பறைசாற்றுகிறது என்று வாதிடுபவர்களும் உண்டு. அது அகிம்சையை பேசுகிறது. அது உடலையும், மனதையும் உறுதி செய்வதை பேசுகிறது. சமூக நலனை பற்றி பேசுகிறது என்று பலரும் தங்களது எண்ணங்களுக்கும், அறிவுக்கும் ஏற்றவாறு விளக்கம் தருகிறார்கள்.

கீதையில் இவை அனைத்துமே இருக்கிறது. கீதையில் இல்லாதது எதிலுமே இல்லை என்று சொல்லுகிற அளவிற்கு, கீதை பூரணமானது. ஆனால், கீதையில் உள்ள ஞானயோகம், கர்மயோகம், ராஜயோகம், சமூகவியல் அனைத்துமே இறுதியாக ஒரே ஒரு முடிவை நோக்கியே நம்மை அழைத்துச் செல்கிறது. அது சாட்சாத் பர பிரம்மனான வாசுதேவ கிருஷ்ணனின் பாதார விந்தங்களில் பரிபூரணமாக சரணடைவது. மோட்சத்தை, முக்தியை அனுபவிப்பது என்பதாகும். எனவே கீதையை மோட்ச சாஸ்திரம் என்று அழைத்தால் அதுவும் அழகாகத்தான் இருக்கும்.

போர்க்களத்தில் அர்ஜுனன் நிற்கிறான். அவனது மனம் குழப்பமடைகிறது. எதிரே எதிரிகளாக நிற்கும் ஒவ்வொரு மனித ஜீவனையும் உற்றுப் பார்க்கிறான். இவர்கள் அனைவருமே அவனது இரத்தத்தோடு சம்மந்தப்பட்டவர்கள். இவனுக்கு தோளோடு தோள் நின்று ஒத்தாசை செய்கின்ற, பங்காளிகள் ஆசை வசப்பட்டு தர்மம் இது, அதர்மம் இது என்று பாகுபாடு தெரியாமல் மூடத்தனமாக ஆயுதங்களை தரித்துக் கொண்டு போர்க்களம் வந்துவிட்டவர்கள். விவரம் தெரியாத இவர்களை விபரம் தெரிந்த நான் கொல்வதா? எனது இரத்தம் சிந்துவதற்கு நானே காரணமாவதா? என்று யோசித்து மனம் குழம்பி நான் போர் புரிய மாட்டேன் என்று காண்டிபத்தை கீழே போட்டுவிட்டு தேரில் உட்கார்ந்து விடுகிறான்.

கலவரப்பட்டு கலங்கிய பார்த்தன் முன்னால் பரந்தாமன் நிற்கிறான். அப்போது தான் புத்தம் புதிதாக மலர்ந்த பூவைபோல சிரிக்கிறான். சின்னக் குழந்தை ஒன்று சிங்கரமாக நகைப்பது போல, சிரித்த முகத்தோடு நிற்கிறான். திக்கு தெரியாமல் துக்கப்பட்ட, பாண்டு புத்திரன் கண்ணனின் கால்களிலே விழுகிறான். நான் தவிக்கிறேன், துடிக்கிறேன். இன்னது செய்வ தென்று தெரியாமல் பரிதவிக்கிறேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாம் மயக்கமாக இருக்கிறது. உன்னைத் தவிர எதையும் என்னால் நம்பமுடியவில்லை. உன்னையே கதி யென்று உன்னிடமே சரணடைகிறேன். என்னை ஏற்றுக் கொள். உறவினனாக என்னைப் பார்க்காமல், உன் சீடனாக பார். ஒன்றுமே தெரியாத அப்பாவி ஒருவனாக என்னை பார். எனக்கு தக்க வழிகாட்டு உன் சொற்படி நடக்கிறேன் என்று சரணடைகிறான்.

நடக்கவேண்டியது மகா யுத்தம் எதிரிகள் அனைவரும், ஆயுத தாரிகளாக கூடிவிட்டார்கள். சரம் சரமாக கணைகள் பறந்து, வானத்தை இருள் மயமாக்க துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தோள் சிலிர்த்து ஆவேசத்தோடு சண்டையில் இறங்க வேண்டுமே தவிர, தலை கவிழ்ந்து குழம்பி கிடக்க கூடாது. எனவே உன் மயக்கதிற்க்கான காரணத்தை பின்னால் சொல்கிறேன். இப்போது நீ சண்டைபோடு என்று, அர்ஜுனனை கண்ணன் தூண்டிவிட்டிருக்கலாம். அவன் மறுத்தால் கூட, கட்டளை போட்டு கட்டாயப்படுத்தி இருக்கலாம். ஆனால், பகவான் அதை செய்யவில்லை. சங்க நாதம் முழங்கும் யுத்த களத்தில், எழு நூறு ஸ்லோகங்களுக்கும் அதிகமான கீதையை ஓத துவங்குகிறான்.

வேதவித்தை, நிஷ்காமிய கர்மம், முக்குணங்களின் வேகம், இந்திரிய கட்டுப்பாடு, ஈஸ்வர பக்தி, சக மனித தர்மம், ஞான யோகத்தின் வழிமுறை, நிலையில்லாத சொர்க்கம், நிரந்தரமில்லாத யாகம், தயாவான மனதை தரும் தானம், தர்மத்தையே தரிசிக்க செய்யும் தவம் போன்ற பல விஷயங்களை கூறி இறுதியாக மோட்சத்திற்கான  வழியை, சரணாகதியை பேசி கீதையை நிறைவு செய்து பாண்டு புத்திரனுக்கும் அவனைப் போன்ற பல்லாயிர புத்திரர்களுக்கும் வாழ்க்கை என்றால் என்ன?  அதில் போராட்டம் என்பது யாது?  என்ற விளக்கங்களை ஞான சூரியனை போல் தருகிறார்.

அர்ஜுனனோடு எத்தனையோ முறை, அவர் தனிமையில் உரையாடி இருக்கிறார். அர்ஜுனனும் இதை போன்ற மன கலக்கத்தை எத்தனையோ முறை அடைந்தும் இருக்கிறார். அப்போதெல்லாம் கூறாத பகவத் கீதையை இப்போது, இந்த இடத்தில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடத் தயாராக, குருதி பூமியில், குருட்ஷேத்திர மண்ணில், சொல்ல வேண்டிய அவசியம் என்ன?  கண்ணன் கீதையில் கூறுகிறான். எப்பொழுதெல்லாம் பூமியில் தர்மம் குலைந்து, அதர்மம் தலைவிரித்து ஆடுகிறதோ அப்போது நான் வருவேன். துஷ்டர்களை அழிக்கவும், இஷ்டர்களை காக்கவும் யுகந்தோறும் நான் பிறப்பேன் என்று அறிவிக்கிறான். தனது அறிவிப்பை மெய்பிப்பதற்காக துஷ்டர்களை சம்காரம் செய்யவேண்டிய காலம் நெருங்கிவிட்டதே உணர்ந்து இங்கே அவன் கீதையை பேசுகிறான். இதுதான் சரியான நேரம். பசிக்கும் போது தான் உணவு தேவை. வலிக்கும் போது தான் மருந்து தேவை. யுத்தம் என்பதும் வலி தான் அந்த வலிக்கு ஒரே மருந்து கீதை தான்.

துவாபர யுகம் முடியும் காலம் நெருங்கிவிட்டது. துரியோதனன் போன்ற தீயவர்கள், பூமியெங்கும் மலிந்து விட்டார்கள். பூமி மாதா சுமைதாங்காது தள்ளாடுகிறாள். மண்ணின் பாரம் தீர்க்க, விண்ணிலிருந்து பூமிக்கு வந்த கிருஷ்ணன், தீய அரசர்களை பொசுக்குவதற்கு நேரம் குறித்து விட்டான். பாரத போர் துவங்கி விட்டது. சமூக சீர்திருத்தத்தின் அவசியம் கருதி பயிர்களுக்கு நடுவில் முளைத்திருக்கும் களைகளை பிடுங்க வேண்டிய பணியும் ஆரம்பித்து விட்டது. இயற்கையாக உருவான வர்ணாசிரம தர்மம் என்ற சமூக அமைப்பில் பிராமண தர்மத்தை வேதியன் விட்டு விட்டான். நாட்டை காக்கும் நற் பண்பை சத்ரியன் தொலைத்து விட்டான். பொருள் சேர்ப்பதே பிராதானம் என்று வைசீகன் சுயநலம் மிக்கவனாக ஆகி விட்டான். உழைப்பதற்கு உழவன் தயாராக இல்லை எல்லாம் மாறிவிட்டது.

கலியுகம் துவங்குவதற்கு முன்பே, அதன் இருண்டமுகம் வெளிவர ஆரம்பித்து விட்டது. யாகங்கள், தானங்கள், தர்மங்கள் அனைத்துமே எதையாவது ஒரு பயனை நோக்கி செய்யப்பட்டதே தவிர, இறைவனை நோக்கி நடத்தப்படவில்லை. உதாரணமாக சொர்க்கம் வேண்டினால் நீ காமக்கொடூரனாக இருந்தாலும் பரவாயில்லை. கொலை பாதகச் செயலை தினம் தினம் நடத்தினாலும் பரவாயில்லை, ஜோதிஸ்ட்டாம யாகம் செய். எந்த தடையும் இல்லாமல் சொர்க்கத்தை அடையலாம். புத்திரன் வேண்டுமா கவலை இல்லை. புத்திர காமேஷ்டி யாகம் செய். உலகத்தையே விலைக்கு வாங்கும் செல்வம் வேண்டுமா? அதற்காக குபேரனை நோக்கி யாகம் செய். என்று அழிந்து போகும் உலகப் பொருளுக்காக ஆன்மீக நோக்கங்கள் சீரழிக்கப்பட்டு கொண்டிருந்தன. அரசர்களும், தன வந்தர்களும், யாகங்கள் செய்வதை கடமையாக நினைத்தார்கள். பெருமையாக கருதினார்கள். வேதம் ஓதும் பிராமணர்கள் நாத வடிவான பிரம்ம தியானத்தை மறந்து, பொருளை நோக்கி ஓடினார்கள். செல்வந்தர்களை துதிபாடினார்கள்.

ஏழைகள், செல்வம் இல்லாதவர்கள் என்பதனாலே புறக்கணிக்கப்பட்டார்கள் இதை மகாபாரத யுத்தம் துவங்குவதற்கு முன்பே தர்மபுத்திரன் சொல்கிறான். யாகங்களை செல்வந்தர்கள் மட்டுமே செய்வதற்கு தகுந்ததாக மாற்றி இருப்பது, துர்பாக்கிய நிலை. யாகங்கள் தங்களது நிஜமான லட்சியத்தை நோக்கி மாறவேண்டும் என்கிறான். இதற்காக மோட்சம் அடைவதற்கு செல்வம் செலவாகும் யாகத்தை தவிர்த்து, ஏழைகளும், திக்கற்றவர்களும் பயன்படக் கூடிய வேறு ஏதாவது வழி இருக்கிறதா? என்று பிதாமகர் பீஷ்மரிடமும் கேள்வியை வைக்கிறான். பீஷ்மர் கூட தான் ஒன்றுமே அறியேன் என்று கைவிரிக்கிறார். இந்த நேரத்தில் தான் கண்ணன், கீதையில் சொல்கிறான். யாகங்கள் வேண்டாம், அலங்கார பூஜைகள் வேண்டாம், தானதர்மங்கள் கூட தேவையில்லை. என்னை நினை. என்னில் சரணடை. நானே சகலமமுமான நாராயணன். உனக்கு நிரந்தர சுகம் தரும் தகுதி என்னிடம் மட்டுமே இருக்கிறது என்று, அனைவருக்கும் அழைப்பு விடுகிறான்.

யாகத்தை மட்டுமே நடத்தி, விரும்பியதை சாதித்துவிடலாம் என்று நினைப்பவர்களின் கூட்டம் ஒருபுறம் என்றாலும், யாகங்கள், வைதீக தர்மங்கள், அனைத்தையும் விட்டு விடு. உலக வாழ்க்கை என்பது, துன்பம் நிறைந்தது. கர்மாவை செய்கின்ற வரை பிறப்பு தொடரும். எனவே பிறக்காமல் இருக்க, கர்மா செய்யாதே. உலக வாழ்க்கையை உதறி விட்டு மனிதனாக பிறந்த அனைவரும், சந்நியாசிகளாக மாறிவிடுங்கள் என்று யதார்த்தமான வாழ்க்கைக்கு முற்றிலும் முரணாக சிலர் பிரச்சாரம் செய்து, சராசரி மக்களை மதி மயங்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் கண்ணன் கீதையில் சொன்னான். செயலை செய். ஒருபோதும் கைவிடாமல் செயலை செய்து கொண்டே இரு. செயல்படுவதற்காகவே பிறந்தவன் நீ. உன் சிருஷ்டி அதற்காக மட்டுமே நடந்திருக்கிறது. பிறவி நோக்கத்தை கைவிட்டு விட்டு, சும்மா இருக்காதே. செயலையும், செயலால் வருகின்ற பலனையும் எனக்கே அர்ப்பணம் செய். எப்போதும் மாறாத இன்பத்தை அனுபவிப்பாய் என்று கீதையின் வாசகத்தால் சிந்தை தெளிவித்தான்.








Contact Form

Name

Email *

Message *