குருஜி அவர்களுக்கு, வணக்கம். என் பெண் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. இதுவரை அவளுக்கு நிறைய நகைகள் வாங்கி போட்டு விட்டேன். நகைகள் அனைத்தும் எதாவது ஒரு வகையில் காணமல் போய்விடுகிறது. தங்கமோ, வெள்ளியோ அவள் உடம்பில் தங்குவது இல்லை. இதனால் அவளுக்கு வருங்காலத்தில் தங்க நகைகள் போடும் அதிர்ஷ்டமே இல்லாமல் போய்விடுமோ? என்று நான் அஞ்சுகிறேன். தயவு செய்து என் குழந்தைக்கான பரிகாரத்தை கூறி அருளுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
கெளசல்யா,
திண்டிவனம்.
நம்ம ஊரு பெண்களுக்கு ஒரு பெரிய சாபம் இருக்கு. தங்க நகைகளை அடுக்கடுக்கா போட்டால் தான் மதிப்பு மரியாதை கிடைக்கும் என்று தப்பா நினைத்து கொண்டு இருக்காங்க. உண்மையில மதிப்புங்கிறது நகையில இல்ல. நம்ம புத்தியில இருக்கு.
ஆளும் அழகா இருந்து, கோயில் சிலை மாதிரி நகைகளும் போட்டு, அறிவு மட்டும் தேய்ந்து போன நிலா மாதிரி இருக்குதுன்னு வச்சிக்கிங்க என்ன பிரயோஜனம். தனக்கும் லாபம் இல்லாம, பிறருக்கும் லாபம் இல்லாம அம்மிக்குழவி மாதிரி இருக்கும் ஒரு வாழ்க்கை நல்லவா இருக்கும்.
எனவே குழந்தைகளை நல்லா படிக்க வைக்கணும்னு கவலை படுங்க. ஒழுக்கமா வளர்க்கனும்னு கவலை படுங்க. வருங்காலத்துல நல்ல வாழ்க்கைய அமைத்து கொடுக்கணும்னு கவலைபடுங்க. அதை விட்டுட்டு நகை நட்டுக்கு கவலைப்பட்டால் அது நல்லதில்லை.
இருந்தாலும் காதுல ஒரு கம்மலும், கழுத்துல சின்னதா ஒரு செயினும், கையில வளையலும் போட்டு பார்த்தா பெண் குழந்தை லட்சணமாதான் இருப்பா. அதனால நீங்க நகை நட்டு தொலைந்து போகாமல் இருக்கணும்னா புதிய நகைகளை சனிக்கிழமையில் குழந்தைக்கு போடுங்க,
அது முடியலனா அஸ்வினி, ரோகினி, அனுஷம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வருகிற நாளில் புதிய நகைகள் வாங்கி, குழந்தைக்கு போட்டா அது எப்போதும் கழட்டாமல் தொலைந்து போகாம நிரந்தரமா இருக்கும்.