அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் மருதாணி போடும் பழக்கம் உள்ளவள். மருதாணி பூசுவது சரியா? அதை எந்த நாளில் பூசவேண்டும்? அதற்கென்று தனியாக நாள் உள்ளதா? என்பதை எனக்கு விளக்கமாக கூறவேண்டும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
இப்படிக்கு,
நித்ய ஸ்ரீ,
டெல்லி.
கைவிரல்களிலும், கால்களிலும் செம்பஞ்சி குழம்பு என்ற மருதாணி பூசுவது நமது இந்திய பண்பாட்டின் தனிச் சிறப்பான பழக்கமாகும். மிக குறிப்பாக கூறுவது என்றால், இள மஞ்சள் நிறத்தில் உள்ள தமிழ் பெண்ணின் விரல்களில் சிவப்பான மருதாணி பூசி இருக்கும் அழகை சங்க கால தமிழ் இலக்கியங்கள் துவங்கி, தற்கால இலக்கியங்கள் வரையில் ரசனையோடு பேசுகின்றன.
மருதாணி பூசிய நகங்களில் நோய் தொற்று இருக்காது. நகங்களில், மருதாணி ஏற்படுத்தும் குளிர்ச்சியால் உடம்பு முழுவதும் சூடு ஏறாமல் மீதமான நிலையில் பாதுகாக்கும். மருதாணி பூசிய கரங்களால் உணவு சமைக்கும் போது, அந்த உணவில் தனியான சுவை மிளிரும். இன்றைய பெண்கள் மருதாணி இலை அரைத்து பூசுவதற்கு சோம்பேறித்தனப்பட்டு இரசாயனப் பொடிகளை பூசிக் கொள்கிறார்கள். இது உடம்பிற்கும் நல்லதல்ல. அவர்கள் சமைக்கும் உணவுக்கும் நல்லதல்ல.
கோலம் போடுவதனால், எப்படி பெண்களின் கலா ரசனையோடு அறிவுக் கூர்மையும் அதிகப்படுகிறதோ அது போலவே, மருதாணியை பலவித அலங்காரத்தோடு பூசுவதனால் அறிவும் செழுமை அடைகிறது. குடும்பத்தில் கொந்தளிக்கும் பிரச்சனைகள் சற்று நிதானமும் அடைகிறது. எனவே நமது பெண்கள் மீண்டும் மருதாணி பூசும் வழக்கத்தை கொண்டு வந்தால் அதை வரவேற்பதில் எந்த தயக்கமும் தேவை இல்லை.
மேலும் வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமை மற்ற விரத நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் மருதாணி பூசலாம். மிக குறிப்பாக புதன், வியாழன் மற்றும் சனி போன்ற நாட்களில் மருதாணி பூசினால் குடும்பத்தில் விருத்தியும், மகிழ்ச்சியும் புதிய ஆடை, ஆபரண சேர்க்கையும் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது.