அன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். எனக்கு கடந்த பத்து வருடமாக, தினசரி கனவில் ஏதாவது ஒரு வடிவில் பாம்பு வருகிறது. என்னை துரத்துவது போலும், கடிப்பது போலும், என் கழுத்தில் மாலையாக தொங்குவது போலும் வித்தியாச வித்தியாசமான கனவுகள் வருகிறது. மேலும் மாதத்தில் இரண்டு முறையாவது நேரடியாக பாம்பை பார்த்து விடுகிறேன். வருடத்தில் பல நாட்கள் என் வீட்டிற்குள் பாம்புகள் வருகிறது. குறிப்பாக என் படுக்கை அறையில் படுக்கையின் மேலே, பலமுறை பாம்புகள் வந்திருக்கின்றன. முதலில் இவைகளை எல்லாம் யதேச்சையாக நடப்பதாக நான் நினைத்தேன். ஒருமுறை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது, சம்மந்தமே இல்லாத ஒரு வயதான பெண் வந்து, நீ நாகத்திற்கு கேடு செய்திருக்கிறாய். நாகம் உன்னை பழிவாங்க துரத்துகிறது. சரியான பரிகாரம் செய்து தப்பித்துக் கொள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள். அன்று முதல் எனக்கு பயமாக இருக்கிறது. என்ன பரிகாரம் செய்வது என்றும் எனக்கு தெரியவில்லை. தயவு செய்து குருஜி அவர்கள் வழிகாட்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
மனோகரன்,
கனடா.
படம் எடுத்து ஆடுகிற நாகப் பாம்புகளை ஆபரணமாக கொண்டு, அம்பலத்தில் ஆடுபவர் சிதம்பரத்து சிற்சபேசனான சிவபெருமான். ஆல கால விஷத்தையே அமிர்தமாக உண்ட எம்பெருமான், நாகத்தின் சாபத்தையும், தோஷத்தையும் நீக்க வல்லவராக இருக்கிறார்.
தமிழ் மாதத்தில் திரயோதசி திதியில், பிரதோஷம் வரும் அன்றைய தினம் மாலை நேரத்தில், சிவபெருமானை வழிபட்டால் பாம்பணையின் மேல் அனந்த சயனத்திலிருக்கும் மஹா விஷ்ணுவையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும், நாகராஜனையும், நாகவம்சத்தையும் வழிபாடு நடத்தியதற்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அன்றைய தினம், வில்வ தளங்களால் பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்து, சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால், சகலவிதமான நாகதோஷங்கள் விலகுவதோடு சாபங்களும் விலகும். வெளியூர் சென்றாலும் பிரதோஷ வழிபாட்டை மாதத்தில் இரண்டு முறை தட்டாமல், தவறாமல் செய்தால் நிச்சயம் பலன் உண்டு.