அன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்களது இணையதளத்தை படித்த நாள் முதல் இன்றுவரை பலவிதமான புது விஷயங்களை கற்றவண்ணம் இருக்கிறேன் வாழ்க்கையில் அவைகளை பயன்படுத்தி இன்பம் பெற்றவனாகவும் இருக்கிறேன் நீங்கள் பல கடினமான கேள்விகளுக்கும் சூட்சமான சந்தேகங்களுக்கும் கூட மிக தெளிவாக சாதாரண அறிவு பெற்றவர்கள் கூட புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கம் தருகிறீர்கள் அதற்காக உங்களை கோடிமுறை வணங்கினாலும் தகும் ஐயா எனக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் இருக்கிறது நமது நாட்டை இந்தியா என்று அழைக்கிறோம் அது அந்நியர்கள் நமக்கு கொடுத்த பெயர் என்று விலக்கிவிட்டாலும் பாரதம் என்ற ஒரு அழகான பெயரை பல ஆயிரம் ஆண்டுகளாக நமது நாடு அலங்காரமாக சூடிவுள்ளது பரதன் என்ற மன்னன் ஆண்டதனால் இதற்கு பாரதம் என்ற பெயர் வந்தது என்று நிறைய கதைகள் சொல்கிறார்கள் எனது சந்தேகம் என்னவென்றால் பாரதம் என்றால் என்ன பொருள்? அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன? என்பது தான் இதை தயவு செய்து அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக விளக்குங்கள்
இப்படிக்கு
அசோக்குமார் சிங்
சென்னை
பாரதம் என்ற சொல்லை எடுத்து கொண்டு வடமொழி இலக்கணத்திற்குள் புகுந்து பாணினி முனிவரோடு சண்டைபோட்டு பொருளை கூறுவேன் என்று நிச்சயம் நீங்கள் நினைக்க வேண்டாம் பாணினியின் இலக்கண வட்டத்திற்குள் நுழைந்து விட்டால் வெளிவருவது மிகவும் கஷ்டம் விளக்கம் சொல்லபோன நானும் அதை கேட்கபோன நீங்களும் மூச்சி திணறி போவேமே தவிர அவ்வளவு விரைவில் தெளிவை பெற்றுவிட மாட்டோம் காரணம் தொல்காப்பியத்தை போலவே பாணினியும் மாபெரும் சமுத்திரம்
பொருளை உணர்ந்து கொள்ளாமலே பலவார்த்தைகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம் உப்புக்கும் சீனிக்கும் இருக்கும் வார்த்தைகளை தப்பிதமாக சொல்வதென்றால் வயிறு ஒன்றும் கெட்டுபோகாது ஆனால் நோய்தீர்க்கும் மருந்துக்கான பெயரின் பொருளை அறியாமல் இருந்தால் அது உயிரை கெட்டுபோக வைத்துவிடும் உயிர் போன்றது தான் தேசமும் குழந்தைகளும்
பலர் தங்கள் குழந்தைகளுக்கு ஒன்றிரெண்டு எழுத்துக்களை இணைத்து ஒரு சத்தம் வருமாறு வார்த்தையை உருவாக்கி பெயர்களை வைத்து விடுகிறார்கள் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டால் வைத்தவனுக்கும் புரிவதில்லை அழைப்பவனுக்கும் தெரிவதில்லை பிறகு குழந்தையின் பாடு திண்டாட்டம் தான் இன்று நமது தேசமும் அப்படிதான் இருக்கிறது பாரதநாட்டின் பெருமையை முனிவர்கள் கூறினார்கள் பாரதி பாடினான் காந்தி போற்றினார் என்று நாம் நாள்தோறும் பேசுகிறோமே தவிர அதன் பொருளென்ன அந்த பொருளால் நாடுபெற்ற சிறப்பென்ன என்பதெல்லாம் நம்மில் பலருக்கு தெரியாது பலர் யோசிப்பதும் கிடையாது.
பாரதம் என்ற வார்த்தைக்கு போகுமுன் அதன் வேற்சொல்லை, பார், பாரம் என்ற சொற்களை சற்று ஆராய்வோம் பார் என்றால் பார்வையை மட்டும் அது குறிக்காது இந்த உலகத்தையும் அது குறிக்கும் பாருலகம் என்று சொல்வோம் அல்லவா அதாவது மிகப்பெரிய உலகம் என்பது இதன் உண்மையான பொருள் அதே போல பாரம் என்பது கனம், பளு, அதிக எடை என்ற பொருளையும் குறிப்பதாகும் எனவே இந்த இரண்டு வேற்சொல்லும் அனைத்தையும் தாங்குவது அனைத்தையும் உள்ளடக்கியது என்ற பொருளை மறைபொருளாக சுட்டுவதாகவும் கொள்ளலாம்
இனி மகாபாரதம் என்ற இதிகாசத்தில் வருகின்ற அர்ஜுனனுக்கு பாரத என்ற பெயர் இருப்பதை அறிவோம் அந்த வார்த்தை அவனுக்கு ஏன் பெயராக கொடுக்கப்பட்டது என்றால் சம்சார பந்தத்தை தாங்கி கொண்டிருப்பவன் என்ற பொருள்படவே கொடுக்கப்பட்டதாக வியாசர் சொல்வதை கருத்தில் கொள்ளவேண்டும் எனவே பரத பாரத என்ற வார்த்தைகள் தாங்குவது என்ற பொருளையே தருகிறது இதை ஏன் ஒருநாட்டின் பெயராக வைக்கவேண்டும் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து தர்மங்களையும் தாங்கி நிற்கும் பூமி என்ற பொருளிலேயே பாரதம் என்ற பெயர் நமது தேசத்திற்கு கொடுக்கபட்டிருக்கிறது இது சரிதானா என்பதை வரலாற்று புத்தங்களை திறந்து வைத்து கொண்டு ஆய்வு செய்து பாருங்கள் சரிதான் என்பது புலப்படும்.