வரலாற்றை ஆர்வத்தோடு படிக்கும் எவரும் அலெக்ஸாண்டர் பிறந்த செய்தி கேட்டு, அவனது தந்தை பிலிப் சொன்ன வாசகங்களை மறந்திருக்க மாட்டார்கள். மன்னன் பிலிப்பிடம் அவனுக்கு குழந்தை பிறந்திருக்கிற செய்தி சொன்னவுடன், அவன் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்தான். எனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்பதை விட, என் குடும்பத்திற்கு வாரிசு கிடைத்திருக்கிறது என்பதை விட, இந்த நாட்டிற்கு வருங்கால மன்னன், தற்போதைய இளவரசன் உதயமாகி இருக்கிறான் என்பதை விட, அறிவில் சிறந்த அரிஸ்டாட்டில் வாழுகிற காலத்தில் ஒரு மனிதன் பிறந்திருக்கிறான் என்பதே மிகப் பெரிய சிறப்பு என்பது தான் அந்த அறிவிப்பு.
அதாவது கிரேக்க மன்னனும், கிரேக்க மக்களும் அரிஸ்டாட்டிலை எந்த அளவிற்கு உயர்ந்த பீடத்தில் வைத்து கொண்டாடினார்கள் என்பதற்கு இதுவே சரியான சான்று. சாதாரணமாக பல மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள் காலவெள்ளத்தில் மறைந்தும் போகிறார்கள். யாரோ ஒருசிலர் மட்டும் தான் மாமனிதராக உயர்ந்து நின்று, தன்னை சார்ந்த மக்களுக்கும், தேசத்திற்கும் பெருமை சேர்க்கிறார்கள். இப்படி உலகம் முழுவதும் போற்றி புகழக்கூடிய, தலையில் தூக்கிவைத்து கொண்டாடக் கூடிய மேதைகளில் பலர் இந்தியாவில் பிறந்திருக்கிறார்கள்.
மாமன்னன் சந்திரகுப்த மெளரியனை உருவாக்கி, அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் சட்ட நூலை உலகுக்கு தந்த விஷ்ணு குப்த கெளடில்ய சாணக்கியன், சாம்ராட் அசோகன், சக்கரவர்த்தி விக்ரமாதித்தன், மகாகவி காளிதாசன், கெளதமபுத்தர், மகாவீர், சக்ரவர்த்தி அக்பர், சுவாமி விவேகனந்தர், ராஜாராம் மோகன்ராய், திருவள்ளுவர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதி என்று எத்தனையோ சரித்திர புருஷர்களை வரிசையாக அடுக்கிக்கொண்டே வரலாம். இவர்ளின் வரலாற்றை ஏடுகளில் படித்திருக்கிறோமே தவிர அவர்களை நேரில் தரிசனம் செய்யும் பாக்கியம் நம்மில் பலருக்கும் கிடைத்ததில்லை.
நீண்ட நெடிய இந்திய வரலாற்றில், ஒரே ஒரு சரித்திர புருஷரையாவது பார்க்க வேண்டும் அவரோடு பேச வேண்டும் அவரைத்தொட்டு உறவாட வேண்டும் என்று நம்மில் பலருக்கும் அடங்காத ஆசை உண்டு. ஆனால் அத்தகைய சரித்திர புருஷர் ஒருவர் நேற்றுவரை நம்மோடு வாழ்ந்திருக்கிறார். நாம் அவரை இரண்டு கண்களால் தரிசனம் செய்திருக்கிறோம். அவர் பேசுவதை கேட்டிருக்கிறோம். அவரிடம் மிக நெருக்கமாக நெருங்கி உரையாடி இருக்கிறோம். அவரை தொட்டும் மகிழ்ந்திருக்கிறோம். ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வருகின்ற சரித்திர நாயகர்களில் ஒருவர்களில் இவரும் ஒருவரென்று சந்தேகப்படாமல், வாதங்களை நிகழ்த்தாமல், ஆமோதித்து இருக்கிறோம். அத்தகைய சரித்திர நாயகன் அப்துல்கலாம் காலாமாகி விட்டதாக நமது அரசாங்கம் அறிவிப்பு செய்திருக்கிறது. அது அரசாங்கத்தை பொறுத்தவரை ஒரு நடைமுறை சடங்காக இருக்குமே தவிர உண்மை நிலை அதுவல்ல.
சாதாரண மனிதர்களுக்கு தான் மரணம் உண்டே தவிர, அப்துல்கலாம் போன்ற ஆதர்ஷன புருஷர்களுக்கு மரணம் என்பது எப்போதுமே கிடையாது. நேற்றுவரை இந்தியாவில் உள்ள இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்ன கலாம், இன்று சொர்கத்தில் இருக்கும் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல சென்றிருக்கிறார். மண்ணை விட்டு விண்ணுக்கு அவர் சென்றுவிட்டாலும், அவரது பணி இந்த நாட்டில் எப்போதுமே நிலைத்து நடந்து கொண்டே இருக்கும். பொதுவாக பெரிய மனிதர்களை போற்றி புகழும் நாம், அவர்களது காலத்திற்கு பிறகு அவர்களின் புகழை வைத்து கொள்கிறோமே தவிர, அவர்களது கருத்துக்களை மறந்து விடுகிறோம். கலாம் விஷயத்தில் அது நடக்காது. காரணம், அவர் கண்ட கனவு நடைமுறைக்கு சாத்தியமுள்ள கனவு. நாம் விரும்புகிறோமோ இல்லையோ ஒருநாள் மனிதகுலம், குறிப்பாக இந்திய சமூகம் அடைந்து அனுபவிக்கும் கனவாகும்.
அப்துல்கலாம் மதங்கள் என்ற சிறிய வட்டத்திற்குள் அகப்படாத வண்ணமயில். அரசியல் என்ற காடுகளில் வாழ்ந்தாலும் தனக்கென்று பதவியை தேடாத சோலைக் குயில். புதிய புதிய கருத்துக்களை நோக்கி உற்சாகத்தோடு துள்ளி பாய்ந்த புள்ளிமான். அவரது சிரிப்பு காய்ந்து கருகிப்போகும் மலர்களின் சிரிப்பல்ல. எப்போதும் மலர்ச்சியோடு இருக்கும் நிலவின் சிரிப்பு. அவரது அறிவு காலந்தோறும் ஒளி வீசுகிற அருணோதயம் அவர். அன்பு என்ற மகா சமுத்திரத்தில் அணுகுண்டு கூட மெளனமாகி விடும். அவர் தமிழ்நாட்டில் பிறந்த ஒட்டுமொத்த உலகத்தின் புதையல். இந்தியாவில் வாழ்ந்த சர்வேதேச சமூகத்தின் லட்சியக் குறியீடு. மரணமே இல்லாத பிரபஞ்சம் அவர். பிரம்மத்தில் இருந்து வந்து மீண்டும் பிரம்மத்திலே சென்று ஐக்கியமாகிவிட்ட ஞானச் சுடர். அத்தகைய மஹா ஜீவன் தனது உடலை இப்போது விட்டு விட்டாலும் அவரது உயிரும், உயிரை விட மேலான அவரது கருத்துக்களும், இந்திய குழந்தைகளுக்கு எப்போதுமே வழிகாட்டியாக இருக்கும். இதுவே நாம் அவருக்கு செலுத்தும் நிஜமான அஞ்சலியாகவும் இருக்கும்.