குருஜி அவர்களுக்கு, வணக்கம். நெல் வயலில் செருப்பு காலோடு நடக்க கூடாது என்று சொல்வது ஏன்? சேறும், சகதியுமாக இருக்கும் பகுதியில் வெறும் காலோடு நடப்பது ஆரோக்கிய குறைபாடு இல்லையா?
இப்படிக்கு,
மயில்சாமி,
கோபிசெட்டிபாளையம்.
கோபியில் பிறந்துவிட்டு இப்படி ஒரு கேள்வி கேட்பதே சரியா? என்பது என் பதிலாகவும், கேள்வியாகவும் வைக்கலாம். ஆனால், தனிப்பட்ட மயில்சாமிக்கு மட்டும் விளங்க வைப்பது என் வேலை என்றால், அது சரியாக இருக்கும். இவரைப் போன்று கேள்விகள் உள்ள பலருக்கும், பதில் சொல்ல வேண்டும் என்பதனால், அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதனால், எனக்கு தெரிந்த வரையில் பதிலைச் சொல்கிறேன்.
இன்று உலகில் ஏற்பட்டிருப்பது தகவல் தொழில்நுட்ப புரட்சி. இதுவும் இல்லாமல் மனிதனது தலைமுறை முன்னேற்றம் காண்பதற்கு பல புரட்சிகள் நடந்திருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இயந்திர புரட்சி, தொழில் புரட்சி என்று எத்தனையோ புரட்சிகளை அவர்கள் பட்டியல் இடலாம். இந்த புரட்சிகளை எல்லாம் விட மிகச்சிறந்த புரட்சி, மனித சமுதாயமே முன்னுக்கு வர அஸ்திவாரமாக இருந்த புரட்சி எதுவென்றால் விவசாய புரட்சி தான்.
நேற்று வரை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், ஓடி ஓடி வேட்டையாடி வயிற்று பசியை தீர்த்துக்கொண்ட மனிதன், ஒரு இடத்தில் நிலையாக உட்கார்ந்து பசியாறுவதற்கு பண்பாட்டை வளர்ப்பதற்கும், அறிவியல் கண்டுபிடிப்புகளை நடத்துவதற்கும், விவசாய புரட்சியே துணையாக இருந்திருக்கிறது. உலகத்தை கெடுக்காத, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத யாருக்கும், தீங்கு செய்யாத ஒரே புரட்சி வேளாண் புரட்சியே.
அதனால் தான், உலகம் முழுவதும் ஏர் பிடித்து உழுகின்ற உழவர்கள் பயிரையும், பயிரை விளைவித்து தரும் நிலத்தையும், தெய்வமாக கருதினார்கள். நாம் வழிபாடு செய்யும் இடங்களுக்குள், செருப்போடு போகக்கூடாது என்பது இந்திய பண்பாடு. விவசாயி வழிபடும் கோவில், கழனி. அதில் காலணியோடு போனால், அவனது தெய்வத்தை அவமானப்படுத்திய படு பாதகச் செயல் நம்மை பாவமாக துரத்தும். பசுவையும், பிராமணனையும் கொன்றால் கூட ஏற்படாத பிரம்மஹத்தி தோஷம், சோறுபோடும் நிலத்திற்குள் காலணியோடு நடந்தால் ஏற்படும் என்பது எனது கருத்து.
நெல் விளையும் பூமி என்பது கிருமிகள் வாழும் சாக்கடை அல்ல. நமது பசியை ஆற்றும் பூக்கடை அது. எனவே, அதில் வெறுங்காலோடு நடந்தால் நிச்சயம் ஆரோக்கிய குறைவு ஏற்படாது. உடல் முழுவதும் சர்க்கரை நோய் பற்றிகொண்டவன் கூட, திருப்பதி பிரசாதத்தை நம்பிக்கையோடு உண்டால் எந்த தொல்லையும் ஏற்படாது. அதே போல் நிலம் என்ற கோவில், உனது பக்தி என்ற நம்பிக்கையை கண்டிப்பாக மதிக்கும். உன்னை காப்பாற்றும். எனவே, தாய்மையை, பூமியை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். பக்திப் பூர்வமாக அணுக கற்றுக் கொள்ளுங்கள். இன்பம் என்றால் என்னவென்று தெரியும்.