மாதவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கடவுள் ஒருவர் தானே! அவருக்கு ஒரு கோவில் போதாதா? தெருத் தெருவாக கோவிலை கட்டிவைத்து, அதில் வகை வகையாக சுவாமிகளை வைத்து வழிபாடு செய்வது ஏன்?
படிப்பு வரவில்லையா? சரஸ்வதியை வணங்கு என்கிறான் ஒருவன். தேவையில்லை ஹயக்ரீவரை வணங்கு என்கிறான் வேறொருவன். எதை எடுப்பது, எதை விடுவது அது ஒரு பெரிய குழப்பம். ஒரே காரியத்திற்கு இரண்டு சாமிகளா?
காசு கிடைக்கவில்லை என்றால், ஜென்மம் சேர வேண்டும் என்றால், மகா லஷ்மியை வணங்கு என்கிறான். சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கு என்கிறான். மனம் போன போக்கெல்லாம், வித விதமான கடவுள்களை காட்டுகிறார்கள். இதுவே பெரிய குழப்பம் அல்லவா?
ஒரு சாமியை வணங்குவதா? பல சாமியை கும்பிடுவதா? எது சரி? எது தப்பு? இரண்டில் எதோ ஒன்று சரியாக இருந்து. தவறானதை தேர்ந்தெடுத்து செய்தால் அதுவும் தவறு தானே என்று, மூளையை போட்டு கசக்கி கசக்கி குழம்பி போனான் மாதவன்.
கடைசியில் அவனுக்கு ஒன்று தோன்றியது. நம்ம மூளை மிகவும் சின்னது. ஆண்களுக்கு மூளையின் எடையோ ஒரு கிலோ நானூறு கிராம் தான் என்று அமெரிக்கா காரன் ஆராய்ச்சி பண்ணி சொல்கிறான். அது மற்றவர்களுக்கு சரியாக இருக்கலாம். அவர்கள் மண்டை சற்று பெரிது. ஆனால், நம் மண்டை கத்திரிக்காய் அளவு தான் இருக்கிறது என்று நினைத்து, புதிய ஞானோதயத்திற்கு அவன் வந்தான்.
சிறிய வயதிலிருந்தே அவனுக்கொரு பழக்கம். காற்றாடி சுற்றுவது எப்படி என்று அவனுக்கு தெரியாததனால், அம்மாவிடம் கேள்வி கேட்பான். அம்மாவும் அவளுக்கு தெரிந்தவரையில் பதிலை சொல்லுவாள். ஆனால், ஒரு வயதிற்கு மேல் அம்மாவிடம் கேட்கமுடியாத கேள்விகள் சிலவும் மாதவனுக்கு வரும்.
கல்யாணம் ஆகும் வரையிலும் சாதாரண வயிறோடு இருக்கும் மாலதி அக்கா, கல்யாணம் ஆன சில காலத்திலேயே வயிறு பெரிதாகி ஒரு குழந்தையை பெற்றாளே அது எப்படி? என்று அவனுக்கு தோன்றியது. அதை போல நேற்று வரை தன்னோடு விளையாடிய கல்பனாவை பெரிய மனுஷி ஆகிவிட்டாள் என்று, மூலையில் உட்கார வைத்தார்களே அது ஏன்? என்றெல்லாம் கேள்விகள் தோன்ற, அம்மாவிடம் கேட்டுப் பார்த்தான். அவள் துடைப்ப கட்டையால் அடிக்க வந்தபிறகு, இதை அம்மாவிடம் கேட்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டான்.
அன்று முதல் தனது கேள்விகளை, தன் நண்பன் கோபாலிடம் தான் கேட்பான். கோபால் ஒன்றும் பெரிய மனுஷன் இல்லை. அவன் அப்பா வாத்தியார் என்பதனால், இவனுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுப்பார் அதனால் அவன் எதைக் கேட்டாலும் கோவில் மணி போல டான் டான் என்று பதிலை சொல்லுவான்.
இப்போது கோபாலுக்கும், தலை நரைத்து விட்டது. மாதவனுக்கும் தலைநரைத்து விட்டது. ஆனாலும், மாதவன் பார்வையில் கோபால்தான் அறிவாளி. நாலா விஷயங்களை அறிந்தவன், தெரிந்தவன், திறமைசாலி. எனவே அவனிடமே இந்த கடவுள் கேள்வியை கேட்டு விட வேண்டுமென்று கேட்டும் விட்டான்.
கோபால் சொன்னான். மாதவா நம்ம வீட்டில் சாக்கடை அடைத்துக் கொண்டால் யாரிடம் சொல்லுவோம்?
துப்புரவுத் தொழிலாளியிடம்.
தெருவில் விளக்கு எரியவில்லை என்றால், யாரிடம் சொல்லுவோம்?
பஞ்சாயத்து மெம்பரிடம்.
ஏரி உடைத்துக் கொண்டு போவதாக இருந்தால்?
தாசில்தாரிடம் முறையிடுவோம்.
இப்போது நன்றாக யோசி! துப்புரவு தொழிலாளி, பஞ்சாயத்து மெம்பர், தாசில்தார் இவர்கள் எல்லாம் யார்? யாருடைய பிரதிநிதி?
மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்கள் எல்லோரும், அவரவர் வேலையை செய்பவர்கள் தானே? பிறகு இவர்கள், எப்படி மற்றவர்களுடைய பிரதிநிதியாக வரமுடியும் என்று அவனுக்கு தோன்றியது. எனவே கோபாலிடம், நீனே பதிலைச் சொல். எனக்கும் ஒன்னும் விளங்கவில்லை என்று அவனிடமே விட்டுவிட்டான்.
கோபாலன் பேசினான்
சாக்கடையை சுத்தம் செய்வது, தெருவிளக்கு ஏற்றுவது, ஏரி உடைப்பை தடுப்பது என்று தனித்தனியான பணிகளாக இவைகள் தெரிந்தாலும் பொதுவாக இவைகள் அனைத்துமே அரசாங்கத்தின் வேலை. அரசாங்கத்தின் தலைவர் யார்? ஜனாதிபதி. ஜனாதிபதியின் மக்கள், கடமைகள் தான். ஆனால், இவை ஒவ்வொன்றையும் செய்ய அவரா வரமுடியும்? அதற்காகத்தான் அவரது பிரதிநிதிகளாக இந்த பணியாளர்கள் வேலைசெய்கிறார்கள்.
மாதவனுக்கு லேசாக புரிந்தது போல் இருந்தது. ஜனாதிபதி வேலையை மற்றவர்கள் செய்வது போல, கடவுள் வேலையை மற்ற தெய்வங்கள் செய்கிறார்களா? அப்படியென்றால் கடவுள் என்பது வேறு. இந்த தேவதைகள் என்பது வேறா? கோடிக்கணக்கில் வேலைகள் இருப்பதனால், அதை செய்ய கோடிக்கணக்கில் தேவதைகள் உண்டா? என்று கோபாலிடம் குழந்தை போல் கேட்டான்?
இல்லை. கடவுளும், ஜனாதிபதியும் இந்த இடத்தில் தான் மாறுபடுகிறார்கள். ஜனாதிபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதன். அதனால், அவருக்கு பல மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது. கடவுள் அப்படி அல்ல. அவர் சகல சக்தி வாய்ந்தவர். எனவே அவர், ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு தேவதை போல தனது ஆற்றலை வெளிப்படுத்தி, உலக இயக்கத்தை நடத்துகிறார். அதனால் தான், கடவுளை சிருஷ்டி கர்த்தா என்கிறோம். சிருஷ்டி என்பது படைத்தல் மட்டுமல்ல, பாதுகாப்பதும் கூட.
கோபால் சொன்னது மாதவனுக்கு விளங்குவது போல் தோன்றினாலும், முழுமையாக புரியவில்லை. ஒருவேளை, அதை புரிந்துகொள்ள இன்னும் அதிகமாக சிந்திக்க வேண்டுமோ? என்று தோன்றியது. கோபாலிடமே இந்த கேள்வியை கேட்டான். இதை விரிவாக புரிந்து கொள்ள நான் இன்னும் அதிகமாக சிந்தனை செய்யவேண்டுமா என்று?
கோபால் சிரித்தான். சிந்தனையில் தெளிவு வராது. நன்றாக குழப்பிக் கொள். குழம்பிய குட்டை தெளிவடையும் வரை காத்திருப்பது போல, பொறுமையாக உன் குழப்பங்கள் தீரும் வரை. அது, அதனுடைய எல்லையை தொடும் வரை காத்திரு. அப்போது நீரோடை தெளியும். தண்ணீருக்கு அடியில் உள்ள இரகசியங்கள் புரியும் என்றார்.