மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். நான் ஆங்கில மொழி பாடத்தில், எம்.ஏ படித்துள்ளேன். என் படிப்பிற்கான வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. வேலை இல்லாமல் பெண் தரவும் யோசிக்கிறார்கள். முப்பத்தைந்து வயது ஆன பிறகும் வேலை இல்லாமல் இருப்பது, கவலையாக இருக்கிறது. என் கவலை எப்போது தீரும்? எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும் என்று கணித்து கூறவும்.
இப்படிக்கு,
மகேஷ்குமார்,
திண்டுக்கல்.
இப்போது வெளிவந்த +2 தேர்வு முடிவில், நல்ல மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவன் என்னிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தான். அடுத்து என்ன படிக்கப் போகிறாய்? படித்துவிட்டு, என்ன செய்ய போகிறாய் என்று கேட்டேன். கணிப்பொறி துறையில், பொறியியல் படிக்கப் போவதாகவும், படித்த பிறகு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்ய போவதாகவும், மகிழ்ச்சியோடு சொன்னான்.
சிறிய பையனின் கபடமில்லாத ஆசையை, வேறு வார்த்தைகள் சொல்லி காயப்படுத்தி விடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில், அவனை வாழ்த்தி அனுப்பினேன். ஆனாலும், அவனையும் அவனை போன்ற வேறு இளைஞர்களையும் நினைக்கும் போது, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. படிப்பு என்பது வாழ்க்கைக்கு வழிகாட்ட கூடியதே தவிர வயிற்றை வளர்ப்பதற்கு உதவக்கூடியது அல்ல என்ற நியாயம் பலருக்கு தெரியவில்லையே என்று தோன்றியது.
இன்றைய மக்கள் பலர், படிக்க வேண்டும் வேலைக்கு போகவேண்டும் சம்பளம் வாங்கவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நாமே ஏன் சம்பளம் கொடுப்பவர்களாக உயரக் கூடாது என்று நினைப்பதற்கு சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள். தொண்டு செய்வது நல்லது தான். ஆனால் கூலிக்காக தொண்டு செய்வது முன்னேற்றத்திற்கு அடையாளம் அல்ல. பத்து லட்சரூபாய் சம்பளம் வாங்கினாலும் அதன் பெயர் கூலிதான். வெறும் பத்து ரூபாய் சொந்தமாக சம்பாதித்தால் அதன் பெயர் லாபம். லாபம் பெரியதா? கூலி பெரியதா? என்று சுய கெளரவம் உடையவர்கள் நினைத்து பார்த்தால் புரியும்.
வேலைக்காக படிக்காதீர்கள். படித்துவிட்டு வேலை செய்வதும், உறங்கி கொண்டு உணவு உண்பதும் ஒன்று. வேலை என்பது ஆர்வத்தின் அடிப்படையில், திறமையின் அடிப்படையில், அனுபவத்தின் அடிப்படையில் அமையவேண்டும். அப்படி அமைந்தால், அது தான் வெற்றி என்ற பேழையின் சாவியாக இருக்கும். மேலும் நான் இன்ன துறையில் படித்திருக்கிறேன். எனக்கு அந்த துறையில் தான் வேலை வேண்டும் என்று நினைப்பது இன்னொரு முட்டாள் தனம்.
கிடைக்கும் வேலையை செய். அப்படி செய்து கொண்டே, நீ விரும்பும் வேலையை நோக்கி நகர்ந்து போ. அது தான் சிறந்த வழி. விரும்பியதை கிடைக்கும் வரை காத்திருப்பேன் என்றால், காலச் சக்கரத்தில் நீ நசுங்கி விடுவாய். ஆங்கிலம் படித்தவன் கலப்பை எடுத்து, ஆழ உழுதால் மண் நெகிழ்ந்து கொடுக்காமல் மல்லுக்கு நிற்காது. உழைப்பவன் எவன் உழுதாலும் மண் நெகிழும். எனவே படித்தவன் என்ற கர்வத்தை விட்டு விட்டு உழைப்பவன் என்ற பட்டத்தை சூட்டிக் கொள்.
மேலும் பரிகாரம் வேண்டும் என்ற கேள்வியை கேட்டதனால், அதற்கும் பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். உடனடியாக வேலை கிடைக்க, நீங்கள் பிறந்த கிழமையில் வருகிற பிரதோஷம் அன்று, சிவாலயம் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள். சிவனுக்குரிய காயத்திரி மந்திரத்தை ஜெபித்து வாருங்கள். வேலை கிடைக்கிறதோ இல்லையோ? கிடைத்த வேலையை செய்வோமே என்ற நல்ல புத்தி உடனே பிறக்கும். அதனால், நல்லதும் நடக்கும்.