குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். நான் உங்கள் இணையதளத்தை ஒரு வருடமாக தொடர்ந்து படித்து வருகிறேன். இந்து மதம் சம்மந்தமாகவும், நமது தமிழர்களின் பண்பாட்டு சம்மந்தமாகவும், பல தெளிவான விரிவான விளக்கங்களை கொடுத்து வருகிறீர்கள். அவைகளை படிக்கும் போது மனதிற்கு இதமாகவும், அறிவுக்கு தெளிவாகவும் இருக்கிறது.
நாம் இப்போது சென்னையில் இருக்கிறேன் என்றாலும், என் சொந்த ஊர் தருமபுரி பக்கத்தில், உள்ள மிகச் சிறிய கிராமம் ஆகும். அங்கே தான் எனது பெற்றோர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒருமுறை ஊரில், என் தம்பியின் கால்களில் கண்ணாடி ஓடு ஒன்று குத்திவிட்டது. அதனால், ஏற்பட்ட இரத்தப்போக்கு அதிகமாக இருந்ததனால், அவனை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல ஆயத்தமானோம். அந்தநேரம் எங்கள் கைகளில் சுத்தமாக பணம் இல்லை.
பக்கத்து வீட்டில் சென்று அவசரத்திற்கு கடன் கேட்டேன். அவர்கள் மாலைநேரம் என்பதாலும், அன்று வெள்ளிக்கிழமை என்பதனாலும், பணம் தர மறுத்துவிட்டனர். பல அவசரமான நேரங்களில், எல்லாம் அவர்கள் உதவி செய்து இருக்கிறார்கள். இருந்தாலும், அந்த நேரத்தில் அவர்கள் உதவாதது எனக்கு மனவருத்தத்தை தந்தது. பிறகு எப்படியோ சிகிச்சை செய்து விட்டோம் என்றாலும், இந்த சம்பவம் என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது.
எனக்கு தெரிந்த சிலரிடம் கேட்டதற்கு, வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுத்தால் வீட்டில் உள்ள லஷ்மி கடாட்சம் போய்விடும். அதனால் தரமாட்டார்கள். அது சரியான வழக்கம் தான் என்று சொல்கிறார்கள். தயவு செய்து நீங்கள் இதற்கு விளக்கம் தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
பவித்ரா,
சென்னை.
ஆதிகாலத்தில் மின்சாரம் கிடையாது. சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டாலே இருட்டு வந்துவிடும். இருட்டை போக்குவதற்கு, மனிதன் பயன்படுத்துகிற விளக்குகள் பெரிய அளவில் வெளிச்சத்தை தரும் என்று கூற இயலாது. குருட்டு விளக்கிலே பழகி விட்டதனால், அவர்களுக்கு அது பெரிய சிரமமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த மாதிரியான சூழலில் வீட்டுக்குள் இருந்து பணத்தை எடுத்து கொடுப்பது சற்று கடினம். அதுவும் வெள்ளிக்கிழமை என்றால், சுவாமிக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி முடித்திருப்பது அக்கால குடியானவர்களின் பழக்கமாகும். மாலையில் சாமி கும்பிட்ட பிறகு, அடுத்த வேலையை செய்வது என்றால், சூரியன் வந்தால் தான் நடத்துவார்கள் அதுவரை வாய்திறக்க மாட்டார்கள்.
மேலும் பணம் வெள்ளிக்கிழமை என்பதெல்லாம், உணர்வுகளோடு சம்மந்தபட்ட விஷயம். பணத்தை தெய்வமாக நினைக்கும் போக்கு இருப்பதனால், எந்தெய்வம் நல்ல நாளில், தன்னைவிட்டு மற்றவர்களிடம் சென்றுவிடுமோ என்ற அச்சம் இருப்பது இயற்கை தான். அதனால் ஏற்பட்டது தான் இந்த பழக்கம்.
இன்று வெளிச்சம் வந்துவிட்டது. பகலுக்கும், இரவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எனவே யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம், வாங்கலாம். இதில் வெள்ளிக்கிழமை கொடுக்கமாட்டேன் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். இதில் மத கருத்துக்கு இடமில்லை. ஆனாலும், உயிருக்கு ஆபத்து என்று வரும் போது உடனடியாக காப்பாற்றப்பட வேண்டியது உயிரே தவிர, மற்றவைகள் அல்ல. எனவே ஆபத்து, அவசரம் என்றால் வெள்ளிக்கிழமை என்றாலும், அர்த்தஜாமம் என்றாலும், பணம் கொடுக்கலாம் இதில் சாஸ்திர தடையில்லை.