குருஜி அவர்களுக்கு, நமஸ்காரம். சில வருடங்களுக்கு முன்னால், எனக்கு ஏற்பட்ட விபத்து ஒன்றினால், தரையில் உட்கார முடியாத நிலை இருக்கிறது. சந்தியாவந்தனம் போன்ற நித்திய கர்மாக்களை செய்வதற்கு ஆசைப்படுகிறேன். கீழே உட்கார முடியாத நிலையில், அவைகளை செய்யலாமா? அப்படி செய்வது சாஸ்திர குற்றம் ஆகாதா? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
இப்படிக்கு,
சந்திர சேகரன்,
டெல்லி.
நின்று கொண்டு காயத்ரி செய்வதில், எந்த தவறும் கிடையாது என்று நினைக்கிறேன். காரணம், சூரியனுக்கு அர்க்கயம் கொடுத்து, காயத்ரி ஜபத்தை துவங்கும் போது, சூரியன் கண்ணுக்கு தெரியும் நேரம் வரையில், நின்று கொண்டு காயத்ரி ஜபம் செய்ய வேண்டுமென்று சாஸ்திரம் சொல்கிறது.
சாதாரண மனிதனே நின்று கொண்டு செய்யும் போது முடியாதவர்கள் செய்வதில், எந்த குற்றமும் கிடையாது. மேலும், ஹிந்து சமயத்தின் மிகப்பெரிய ஆச்சாரியார்களில் ஒருவரான ஸ்ரீ மத்வாச்சாரியார் ததஸ்து உப விஷேத வா என்கிறார். அதாவது நின்ற நிலையிலே அமர்ந்த நிலையிலேயே ஜபத்தை தொடரலாம் என்பது இதன் பொருளாகும்.
இந்த இடத்தில், ஸ்ரீ மத்வரின் கருத்தை ஏன் சொல்கிறேன் என்றால், மத்வர் சம்பிரதாயங்களுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுப்பவர் அப்படிப்பட்ட ஆச்சார சிரேஷ்டரே இதற்கு அனுமதி அளிக்கும் போது மற்றவர்களின் கருத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்ல வந்தேன்.