அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். அட்சயதிருதியை அன்று புதிய நகைகள் வாங்க வேண்டுமென சொல்லப்படுகிறது. அப்படி நல்ல நாளில் வாங்கிய நகையை எந்த நாட்களில் அணிந்தால் சிறப்பானதாக இருக்கும்?
இப்படிக்கு,
சுமதி,
திண்டிவனம்.
தங்க நகை என்பது அலங்கார பொருள் என்று உலகம் முழுவதும் கருதப்பட்டு வந்தாலும், நமது இந்தியாவில் மட்டும் நகை என்பது அலங்கார பொருளாக மட்டுமே பார்க்கப்படுவது இல்லை. வீடு, வாசல் மற்றும் நிலம் போல நகையும் சொத்தாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக நகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்றால், அவைகளை சிறுக சிறுக வாங்கி சேமித்து விடலாம். மற்ற சொத்துக்களை அப்படி சேர்க்க இயலாது.
நமது வீட்டு பெண்களை மணமுடித்து கொடுக்கும் போது, அவர்களுக்கு நாம் சிரமப்பட்டாலும் சற்று அதிகமான நகைகளை கொடுத்தனுப்புகிறோம். அதற்கு காரணம் இந்து குடும்பங்களின் வழக்கப்படி, பெண்ணிற்கு அசையாத சொத்துக்களில் பங்கு கொடுப்பது இல்லை. அதனால், பெண்ணானவள் புறக்கணிக்கப்பட்டவளாக ஆகி விடக்கூடாது. அவளுடைய எதிர்காலத்திற்கு கணவன் ஆயிரம் சம்பாதித்தாலும், பிறந்த வீட்டு சொத்தாக குண்டுமணி நகையாவது இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணமே காரணமாகும்.
இப்படி சொத்தாக கருதப்படுகிற நகை, நல்லநாளில் வாங்கப்பட வேண்டும் என்பது விதி. நல்ல நாளில் வாங்கப்பட்டாலும் அதை பயன்படுத்த துவங்குகிற நாள் பொருளை இழக்கும் நாளாக இருக்கக்கூடாது. ஒன்றை ஒன்பதாக அதிகப்படுத்தும் நாளாக இருக்கவேண்டும் என்பது எதிர்பார்ப்பது இயற்கை. அதற்கு நமது ஜோதிட சாஸ்திரம், பாடுபட்டு வாங்கிய தங்க நகைகளை சனிக்கிழமைகளில் முதல்முறையாக அணிய வேண்டும் என்று கூறுகிறது.
மேலும், அஸ்வினி, ரோகினி, மிருகஷீரிடம், பூசம், அஸ்தம், சித்திரை, அனுஷம் மற்றும் ரேவதி ஆகிய எட்டு நட்சத்திரங்களில் ஒன்றாவது பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி மற்றும் பெளர்ணமி ஆகிய திதி அன்று வந்தால், அன்றைய தினத்தில் புது நகைகளை அணிவது பல வகையிலும் நல்லது. மேலும் மேலும் நகைகளை வாங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமல்ல அடிக்கடி அடகு வைக்க நேரிடுகின்ற நகையை இதே போன்ற தினத்தில் அணிந்தால், மீண்டும் அந்த நகை அடகு கடை செல்லாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகள் வெறும் கருத்துக்கள் அல்ல. அனுபவத்தில் கண்ட உண்மைகளாகும். எனவே தாரளமாக இந்த நாட்களை பயன்படுத்தலாம்.