குருஜி அவர்களுக்கு வணக்கம். என் பெண் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. அவள் பிறந்தநாள் முதல் இன்று வரையில், சளித்தொல்லையில் அவதிப்படுகிறாள். மூச்சிரைப்பு வருகின்ற நேரத்தில், குழந்தையை பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது. வெயில் வந்தாலும், குளிர் வந்தாலும் அவளுக்கு ஆகாது. பலவித மருந்துகள் பார்த்துவிட்டோம். எங்கள் ஊரில், ஒரு ஜோதிடர் இதற்கு ஒரு பரிகாரம் உண்டு. ஆனால், அது தனக்கு தெரியாது. தெரிந்தவர்களிடம் விசாரித்து பார்த்து செய்யுங்கள். நோய் குணமாகும் என்கிறார். அதைப்பற்றிய விபரம் உங்களுக்கு தெரிந்திருந்தால், தயவு செய்து கூறி என் குழந்தையின் துன்பத்தை அகற்றுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
கெளசல்யா,
சென்னை.
ஆஸ்துமா என்பது மிகவும் கொடிய நோய். அது ஏன் எதற்காக வருகிறது என்று நமக்கு தெரியும். எல்லோருக்கும் அந்த நோய் வந்துவிடுவது கிடையாது. யாருடைய ஜாதகத்தில், சந்திரன் எட்டாம் இடத்தில் இருக்கிறதோ அல்லது விருச்சிக ராசியில், நீசம் அடைந்தாலோ இந்த நோய் அவர்களை கண்டிப்பாக ஏதாவது ஒரு வயதில் தாக்கும்.
இதிலிருந்து விடுபட திங்கள் கிழமைகளில், நவக்கிரகங்களில் சந்திரனை வெள்ளை மலர் கொண்டு வழிபட வேண்டும். தேய்பிறை சதுர்த்தி திதியில் மா விளக்கு போட்டு, அங்காள பரமேஸ்வரியை தொடர்ந்து வழிபட்டால் படிப்படியாக இந்த நோய் அகன்றுவிடும்.
இவைகளை செய்ய முடியாதவர்கள், தங்கத்தில் அல்லது சுத்தமான வெள்ளியில் தாயத்து செய்து அதனுள் இரசாயன உரத்தில் வளராத பச்சரிசியை உரலில் இடித்து மாவாக்கி மேற்குறிப்பிட்ட தாயத்தினுள் அடைத்து நடுமார்பில் உரசுவது போல, அணிந்துகொள்ள வேண்டும். இப்படி செய்தாலும், நோய் விரைவில் அகன்றுவிடும். மிக சுலபமான இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் உண்டு.