Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆசையை நிறைவேற்றிய அமிர்ததாரா !



     ஜிலாதேவி இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். நானும் உங்களைப் போன்ற வாசகர்களில் ஒருத்தி தான். எனக்கு, இந்த இணையதளத்தை படித்ததன் மூலம் கிடைத்த நம்பிக்கையும், குருஜியிடம் தனிப்பட்ட வகையில் நான் பெற்ற தீட்சையின் மூலம் கிடைத்த பலனையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள பிரியப்பட்டு இந்த கடிதம் எழுதுகிறேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

நான் தென்மாவட்டத்தை சேர்ந்தவள். எங்கள் சமூகத்தில் பெண்களுக்கு திருமணம் முடித்து கொடுப்பது என்றால் மிகப்பெரிய கஷ்டம். காரணம், பெண் படித்திருக்கிறாளா? அறிவுடையவளாக இருக்கிறாளா? நல்ல குணவதியா? குடும்பத்தை அரவணைத்து நடத்துவாளா? என்பதை எல்லாம் பார்ப்பதை விட நிறைய நகை போட்டு வருவாளா? ஐம்பது பவுன், நூறுபவுன் என்று கொண்டுவருவாளா?  லட்சக்கணக்கில் வரதட்சணை பணம் கிடைக்குமா? என்பதை தான் பார்ப்பார்கள் கஷ்டப்பட்டு உயர்ந்த படிப்பை பெண்ணுக்கு கொடுத்தாலும், குறைந்தபட்சம் அறுபது பவுன் போடமுடியவில்லை என்றால், திருமணம் நடத்துவது பெரிய சிரமம்.

எங்கள் பகுதி பெண்களும், தமிழ்நாட்டில் மற்றபகுதி பெண்களை விட நகைகளின் மீது மிக அதிகமாக ஆசை கொண்டவர்கள். அடுத்த வேளை சாதம் வடிக்க அரிசி இருக்கிறதா என்று நினைப்பதை விட, காது, மூக்கில் புதியதாக போட்டுக்கொள்ள நகை இல்லையே என்று நினைத்து கவலைப்படுபவர்கள் தான் அதிகம். நானும் அப்படிப்பட்ட ஒரு சாதாரண பெண் தான். திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்த போது, நகைக்காக நான் கண்ட கனவுகள் அதிகம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, எட்டுமணி வரை உட்கார்ந்து பீடி சுற்றுவேன். அதன்பிறகு அவசர அவசரமாக கல்லூரிக்கு செல்வேன். அங்கேயும் பாடம் இல்லாத ஓய்வு நேரத்தில், டப்பாவில் கொண்டுசென்ற பீடி தூளை வைத்து வேலை செய்வேன். வீட்டுக்கு வந்தபிறகும் இரவு பதினொரு மணி வரை பீடி சுற்றுவேன்.

இது தவிர சீட்டுபோட்டு பணம் சேர்ப்பது சின்ன சின்ன பொருட்களை வாங்கி, விற்று லாபம் சம்பாதிப்பது என்று சம்பாத்தியத்திற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்வேன். நம்பினால் நம்புங்கள். திருமணத்திற்கு முன்பு, என் சொந்த சம்பாத்தியத்தில் பத்துசவரன் நகை வாங்கி வைத்திருந்தேன். என் அப்பா நஞ்சை நிலத்தை விற்று மேலும் இருபத்தி ஐந்து சவரன் நகை போட்டு, ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் கொடுத்து, எனக்கு திருமணம் செய்து வைத்தார். என் கணவர் B.Com., வரையிலும் படித்திருந்தாலும், வேலைக்கு போகாமல், சென்னையில் சொந்தமாக மளிகைக்கடை நடத்தினார். நல்ல வியாபாரம் நடந்தது. அதில் வருகின்ற லாபத்தை வைத்தும் நகைகளை வாங்கினேன்.

மளிகைக்கடை நடத்துவதை விட, பழைய இரும்புக்கடை நடத்தினால் அதிகலாபம் சம்பாதிக்கலாம் என்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் கூறிய அறிவுரையை ஏற்று சென்னை ராமாபுரத்தில் பழைய இரும்புக்கடை துவங்கினோம். ஆரம்பத்தில் இரண்டு வருடங்கள் மிக நன்றாகவே தொழில் நடந்தது. கடையில் ஐந்து வேலைகாரர்கள். சென்னையில் சொந்த வீடு என்று வசதிகள் அதிகரித்தது. எப்படியாவது கஷ்டப்பட்டு கார் ஒன்று வாங்கிவிட வேண்டுமென்று என் வீட்டுகாரர் மிகவும் ஆசைப்பட்டார். எனக்கும் கார் மீது ஆசையும், கனவும் வளர்ந்தது. சாதரணமான ஒரு பெண்ணுக்கு இருக்கும் நியாயமான ஆசை எனக்கும் இருந்ததில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் யாரையும் கெடுக்க நினைக்கவில்லை. சம்பாதித்து முன்னேற நினைத்தோம். ஆனால், இது சில மனிதர்களுக்கு பிடிக்கவில்லை.

திருட்டு பொருட்களை வாங்குகிறோம் என்று, போலியான புகார்களை எங்கள் மீது கொடுத்து, நிறைய போலீஸ் கேஸ்களை நாங்கள் சந்திக்கும்படி செய்துவிட்டார்கள். ஒருபுறம் போலீஸ் தொல்லை, இன்னொருபுறம் எதிரிகளால் தொல்லை. கோர்ட் கேஸ், லஞ்சம் கொடுத்தல் என்று பல வகையிலும் எங்கள் பணம் பறந்து போனது. வீட்டை விற்றோம். கையில் வைத்திருந்த சேமிப்பு பணங்களை இழந்தோம். கழுத்தில் உள்ள தாலி தவிர அனைத்து நகைகளையும் அடகு வைத்தோம். அதன்பிறகு முற்றிலுமாக விற்றும் விட்டோம். நகை மீது ஆசை கொண்ட எனக்கு பித்து பிடித்தது போல ஆகிவிட்டது. பல இரவுகள் உறக்கம் இல்லாமல் அழுதேன்.

என் கணவர் என்னை தேற்றுவார். குடித்து அழிக்கவில்லை. தவறான வழியில் போகவில்லை. என்றாவது ஒருநாள் நம்மால் சம்பாதிக்க முடியும், பழையபடியும் உயர முடியும். நீ கவலைப்படாதே என்று என்னை ஆறுதல் படுத்துவார். என் தாய் - தந்தையரும் அவர்களால் முடிந்த உதவிகளை எனக்கு செய்தார்கள். இந்த நேரத்தில் வெளியில் சென்று விட்டு வந்த என் கணவர் மீது ஆட்டோ ஒன்று மோதியது. சரியாக இடுப்பில் அடிபட்டதனால் மிகவும் பாதிப்பு அடைந்துவிட்டார். நிறைய கடன்வாங்கினேன். யார் யாரிடம் எல்லாமோ கையேந்தினேன். கடைசியில் எதுவும் இல்லாத சூழலில் என் திருமாங்கல்யத்தை விற்று கணவருக்கு வைத்தியம் பார்த்தேன். அவர் மட்டும் எழுந்துவிட்டால் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன்.

என் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள். படிக்கும் பருவத்திலேயே பணம் சேர்த்து நகை வாங்குவதில் ஆர்வம் கொண்டிருந்த நான், சம்பாதித்து கைநிறைய பணம் வரும்போது எவ்வளவு நகைகளை வாங்கியிருப்பேன். எப்படியெல்லாம் என் ஆசை கனவுகள் ஓங்கி இருக்கும். அத்தனை ஆசை இருந்தும். இறுதியில் மாங்கல்யம் கூட தங்கம் இல்லாமல் வெறும் மஞ்சள் கயிறாக ஆகிப்போன பிறகு, நான் எப்படி உடைந்து போயிருப்பேன். அந்த துயரத்தை என்னால் எழுத முடியவில்லை. நகைக்காக ஒரு பெண் இத்தனை ஏங்குவாளா என்று நிறையப்பேர் யோசித்திருக்கலாம். மோகம் பிடித்தவள் இவளென்று திட்டியும் இருக்கலாம்.

நல்லவேளை என் கணவர் ஆறுமாதத்தில் பழையபடி நன்றாக நடமாட துவங்கிவிட்டார். அவரால் தனியாக வியாபாரத்தை கவனிக்க முடியாது என்பதனால், நானும் அவருக்கு உதவியாக வேலை செய்தேன். இந்த நேரத்தில் தான் குருஜி அவர்கள் காசு தரும் மந்திரம் என்ற தலைப்பில் பதிவை வெளியிட்டு அமிர்ததாரா மஹா மந்திர தீட்சையை பற்றி எழுதி இருந்தார். இதை என் தொலைபேசியில் படித்தேன். அவரது வார்த்தைகள் எனக்கு ஆறுதலை மட்டும் தரவில்லை. புதிய நம்பிக்கையை தந்தது. மனிதரால் ஆகாத காரியம், தெய்வத்தால் ஆகும் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். குருஜியின் வார்த்தைகள் எனக்கு தெய்வத்தின் வார்த்தைகளாக பட்டது.

என் குறைகளை எதுவுமே குருஜியிடம் கூறாமல், மந்திர தீட்சை எடுத்து கொண்டேன். பசியாக இருந்தவளுக்கு அறுசுவை உணவு கிடைத்தது போல, குருஜி கொடுத்த மந்திரத்தை ஆர்வத்தோடு சொல்லி வந்தேன். சில நாட்களில் அந்த மந்திரம் என் இரத்தத்தில் கலந்து விட்டது என்றே சொல்லலாம். தூங்கும் நேரத்தை தவிர, எல்லா நேரத்திலும் மந்திரம் என்னையும் அறியாமல் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. வெளிச்சத்தை நோக்கி முன்னேறுவது போல, நானும் மந்திரத்தை உறுதியாக பிடித்துக்கொண்டே இருந்தேன். இந்த நேரத்தில் எனக்கு பணம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நகைகள் வாங்கமுடியவில்லை என்றாலும் கவலை இல்லை. மந்திர தீட்சையால் நான் எப்போதும் பெறாத மன நிம்மதியை மன நிறைவை இப்போது பெற்றிருக்கிறேன் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனாலும் என் வேகம் அதிகரித்தது.

இந்த நேரத்தில், என் கணவருக்கு தொழிலில் ஒரு சிறிய லாபம் ஏற்பட்டு எனக்கு கால் சவரனில் மாங்கல்யம் வாங்கி தந்தார். நூறு சவரன் நகை கிடைத்தாலும் கூட எனக்கு வராத சந்தோஷமும், ஆனந்த கொண்டாட்டமும் அப்போது வந்தது. அதற்கு முன்பு ஆனந்த கண்ணீரை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். என் கணவர் தந்த மாங்கல்யத்தை தொட்டு பார்த்த போது தான் அந்த ஆனந்த கண்ணீர் எப்படி இருக்கும் என்பது எனக்கு புரிந்தது. இந்த சந்தோஷத்தை இந்த புதிய நம்பிக்கையை எனக்கு தந்தது. குருஜி கொடுத்த மந்திர தீட்சை நான் அவரை நன்றியோடு வணங்கினேன். பக்தியோடு போற்றினேன். நான்பெற்ற இன்பத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காகவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

அமிர்ததாரா மஹா மந்திரம் பாலைவன பயணிக்கு, தாகத்திற்கு தண்ணீர் தருவது போல, முதலில் நம்பிக்கை தருகிறது. பிறகு, சாந்தி தருகிறது. அதன்பிறகு முயற்சியில் வேகம் தருகிறது. முடிவில் பலனை கைமேல் தருகிறது. இதை என் அனுபவம் வாயிலாக உணர்ந்து கொண்டேன். இனி எனக்கு நகை மீது மோகம் வருகிறதோ இல்லையோ? நான் முன்னேறிவிடுவேன். பலருக்கும், பயனுள்ள நிழலாக வளர்ந்து விடுவேன். என்னாலும் பத்துபேருக்கு வாழ்க்கை கொடுக்கும் அளவிற்கு உழைக்க முடியும், உயர முடியும் என்ற நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தருகிறது. குருஜியின் அருளால் நிச்சயம் ஜெயிப்பேன்.

இப்படிக்கு,
முத்துலட்சுமி,
இராமாபுரம்.

(அமிர்ததாரா மகாமந்திர தீட்சையின் மூலம் நன்மைகளை பெறுகின்ற சகோதரி முத்துலஷ்மி போன்றோர்களுக்கு குருஜியின் ஆசிர்வாதம் எப்போதும் தொடரும்)


  அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை பெற்று அதனால் பலன் அடைந்த பலர் இதே போன்ற கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது ஊர் பெயரையும், தன் பெயரையும் சரிவர குறிப்பிடாததனால் அவர்கள் கடிதங்களை இங்கு பிரசுரிக்க இயலவில்லை. எனவே அமிர்த தாரா தீட்சையில் பயன் அடைந்தவர்கள் மற்றும் மந்திர தீட்சையின் மூலம் அனுபவங்களை பெற்றவர்கள் அனைவரும்  தங்களை பற்றிய தெளிவான விபரத்தோடு கடிதங்களை அனுப்புமாறு வேண்டுகிறோம்.






Contact Form

Name

Email *

Message *