குருஜி அவர்களுக்கு, வணக்கம். இறை வழிபாட்டில் மலர்களை பயன்படுத்துவது ஏன்?
இப்படிக்கு,
உஜிலாதேவி வாசகி சாந்தி,
சுவிடன்.
இறைவனின் படைப்பில் மிக அபூர்வமானதும், அழகானதும் மலர்கள். பூமித் தாயின் மாறாத புன்னகையை மலரத் துடிக்கும் மலர்களில் காணலாம். ஒரு குழந்தையின் விழிகளை போல, மலர்ந்திருக்கும் மலர்களை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தாலே கல்லும் கனிந்துவிடும், முள்ளும் மலர்ந்துவிடும்.
மனிதன் தான் கண்டவற்றில், தான் அனுபவித்தவற்றில் மிக உயர்ந்த பொருளையே இறைவனுக்கு அர்பணிக்க விரும்புகிறான். மனித குலம் இதுவரை கண்ட பொருள்களிலேயே மிக உயர்ந்ததாக இருப்பது மலர்கள் மட்டும் தான். நாகரீகம் தெரியாத காட்டு மனிதன் கூட, கடவுளை வணங்க வேண்டுமென்றால் மலர்களைத் தான் நாடுகிறான்.
மலர்களில் மனிதனின் ஆத்மா இருக்கிறது. மலர்களில் மனிதனின் இதயம் இருக்கிறது. மலர்களில் மனிதனின் சிந்தனை இருக்கிறது. அதனால், தான் தன்னை முழுமையாக அர்பணிப்பது போல மனிதன் மலர்களை இறைவனுக்கு காணிக்கையாக்குகிறான்.
வெள்ளைநிற மலர்கள், நமது வேண்டுதலை கடவுளிடம் உடனே சொல்லும். மஞ்சள் நிற மலர்கள் நமது நன்றியை கடவுளிடம் சொல்லும். சிவப்பு நிற மலர்கள் நமது துயரத்தை கடவுளிடம் சொல்லும்.
அதனால், உங்கள் கண்ணீர் துடைக்கப்பட வேண்டுமென்றால், சிவப்பு மலர்களால் இறைவனை வழிபடுங்கள். உங்கள் பிரார்த்தனை இறைவனின் செவிகளில் விழ வேண்டுமென்றால், வெள்ளை மலர்களைக் கொண்டு அவனுக்கு ஆராதனை செய்யுங்கள். கேட்டதை இறைவன் கொடுத்துவிட்டால், அவனுக்கு நன்றி என்று நீங்கள் பறை சாற்ற வேண்டுமென்றால் மஞ்சள் நிற மலர் கொண்டு அவன் பாதங்களை அலங்கரியுங்கள்.