அன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம். எனது கனவில், அடிக்கடி ஆடுகள் வருகிறது. அவைகள் சண்டைபோட்டுக் கொள்வது போன்றும், என்னை துரத்துவது போலும் சில நேரங்களில், ஆட்டுக்கறியை நான் உண்பது போலும் கனவுகள் வருகின்றன. அதற்கான காரணம் என்ன? என் வாழ்வில் நடக்கப்போகும் எதோ ஒன்றை ஆடுகள் கனவில் வந்து உணர்த்துகின்றனவா? தயவு செய்து எனக்கு விளக்கம் தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
கிருஷ்ணவேணி,
தேனி.
மனிதனுடைய பார்வையில், ஆடுகள் தென்பட்டால் பாவம் அவைகளுக்கு தான் அபாயம். ஜல்லிக் கட்டுகளில் காளைமாடுகள் துன்புறுத்தப்படுவதாக சொல்லி நீதிமன்றம் கூட தலையிட்டு காளைகளுக்கு ஓய்வு கொடுத்திருக்கின்றது. ஆனால், தினசரி லட்சக்கணக்கில் ஆடுகள் கொல்லப்படுவது எந்த விலங்கின ஆர்வலருக்கும், நீதிமன்றங்களுக்கும் தெரியவில்லை போலும். ஒருவேளை மனிதனின் நாக்கு ருசிக்காக விலங்குகளை கொல்வது நியாயம் என்று நினைக்கிறார்கள் போலும்.
நமது இதிகாசங்களும், புராணங்களும், சாஸ்திரங்களும் ஆடுகளுக்கு மிக முக்கியமான இடத்தினை கொடுத்துள்ளது. வேதங்கள் கூட ரோமங்களை தானம் கொடுக்கும் ஆடுகளை புகழ்ந்து பாடுகின்றன. தாந்தீரீக சாஸ்திரங்களில், ஆடுகளை பலிகொடுக்க வேண்டும் என்று கூறப்படுவது மனிதனின் காம உணர்ச்சியை உருவகப்படுத்தியே சொல்லப்பட்டது. அதாவது ஒரு ஆடு பள்ளத்தில் விழுந்து எழுந்து போனால் பின்னால் வருகின்ற அனைத்து ஆடுகளும் சிறிது கூட யோசிக்காமல் அந்த பள்ளத்தில் விழுந்தே போகும். காமம் என்பதும் அப்படித் தான் ஒருமுறை கெட்டுவிட்டாலும் மறுமுறையும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் கெடும் அது தான் ஆடும், காமமும் ஒன்று என்பதன் பொருளாகும்.
மற்றபடி, நிறைய ஆடுகளை கனவில் கண்டால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் துன்பங்கள் மறையப் போகிறது. செய்தொழில் விருத்தியடைய போகிறது, மேன்மைகள் பல வரப்போகிறது என்று அர்த்தமாகும். ஆட்டுக்கறியை உண்பது போல கனவு கண்டால், வெகுநாட்களுக்கு முன்பு தொலைந்து போன பொருள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், எதிர்பாராத விருந்தும் அமையும் என்பது பொருளாகும். ஆடு அறுப்பவனை கனவில் பார்த்தால் குடும்பத்தில் உள்ள முதியவர்கள் எவருக்கேனும் மரணம் வரப்போவதாக பொருள். என்று கனவு சாஸ்திரம் சொல்கிறது.