குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு இப்போது சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது. சுக்கிரன் அள்ளி அள்ளி கொடுப்பார் என்று, பலர் கூறியதை நம்பி என் கழுத்தில் கிடந்த நகைகள், கணவர் சேமித்து வைத்திருந்த பணம், எல்லாவற்றையும் முதலீடாக போட்டு வீட்டிலேயே சிறிய மளிகை கடை துவங்கினேன். கடை துவங்கி ஆறு மாதத்திலேயே வெற்றிகரமாக இழுத்து மூடி விட்டேன். பணமும் போனது, நகையும் போனது. போதாக் குறைக்கு வியாபார நஷ்டத்தால் புதிய கடனும் வந்து சேர்ந்தது. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். கணவர் என்னை கடிந்து ஒரு வார்ததை சொல்லவில்லை என்றாலும், அவர் பார்க்கும் பார்வை என்னை கொல்கிறது. இதிலிருந்து மீண்டு வர வழியை சொல்லுங்கள். நன்றியுடையவளாக இருப்பேன்.
இப்படிக்கு,
உங்கள் வாசகி,
காஞ்சனாதேவி,
கோவை.
சுக்கிர திசை வந்துவிட்டாலே நிறைய பேர் அதிர்ஷ்டம் கூரையை பிளந்து கொண்டு கொட்டப்போவதாக கனவு காண்கிறார்கள். இது முற்றிலும் மிக தவறுதலான நம்பிக்கையாகும். ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரன் நல்ல கிரகம்தான் என்றாலும், அது இருக்கும் இடத்தை பொறுத்து தான் பலனை தரும்.
உதாரணமாக, மூன்று, ஆறு, பதினொன்று ஆகிய இடங்களின் அதிபதிகள் கெட்ட பலனையே தருவார்கள். ஆனால், இந்த இடங்களில் பாவ கிரகங்கள் போய் உட்கார்ந்தால், நல்ல பலன் பெறலாம். இந்த அம்மையார் ஜாதகத்தில், சுக்கிரன் பதினோராம் இடத்து அதிபதியாக இருப்பதனால், சுக்ர திசை நல்ல பலனை நிச்சயமாக தராது.
அதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. கீழ்க்காணும் ஆஞ்சநேய மந்திரத்தை, தினசரி நூற்றியெட்டுமுறை சொல்லி வந்தால் கெடுதியான ஜாதக திசை நல்ல பலனை தரும்.
ஓம் ரீம் ராம் ராம் ஆஞ்சநேய
ராம் ராம் மம சர்வ சத்துரு
சங்கட நாசாய நாசாய ராம் ராம்
ஸ்ரீம் ஓம்
மனதிற்குள் ஆஞ்சநேயரை ஆழமாக தியானம் செய்து, இந்த மந்திரத்தை சொல்லிவாருங்கள். நிச்சயம் நல்லபலன் நடக்கும். இழந்தவைகளும் மீண்டும் கிடைக்கும்.