ஐயா, வணக்கம். குடும்பம் நடத்துகிற வீட்டில், மகாபாரதம் படிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். இது சரியான கருத்து தானா? என்று கூறவும்.
இப்படிக்கு,
நரேந்திரன்,
வியாசர்பாடி.
வேதங்களில், உபநிஷதங்களில், பிரம்ம சூத்திரத்தில், பகவத் கீதை யில் சொல்லப்படுகிற தத்துவங்கள் அனைத்தும், மகாபாரத நிகழ்வுகளில் வாழ்க்கை முறையாக வருகிறது. மகாபாரதம் என்பது படித்து, சுவைத்து, ரசித்து, உபன்யாசம் செய்யும் கருத்துக்கள் மட்டுமல்ல அது வாழ்க்கை நெறியாகும்.
தர்மம் என்னவென்று தெரிந்தால், தான் அதை கடைபிடிக்க முடியும். தர்மத்தை இன்ன இடத்தில் தான் அறிய முடியும் என்றில்லை. எங்கே வேண்டுமானாலும், எதிலே வேண்டுமானாலும் அறியலாம். மகாபாரதமும், தர்மமே இந்த தர்மத்தை வாழுகிற வீட்டில் வைத்து அறியக் கூடாது என்பது அறியாமையாகும்.
சண்டைகள் நடக்கும் இடத்தை மட்டும் யுத்த களம் என்று அழைக்க முடியாது. நகர்தல் என்பது, முன்னேற்றம் என்பது, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது என்பது எங்கெல்லாம் இருக்கிறதோ அவையெல்லாம் யுத்தகளமே ஆகும். அந்த வகையில் குடும்பம் என்பதும், வாழ்க்கை என்பதும் ஒருவித போர்க்களமே ஆகும். இந்த போர்க்களத்தில் உயிர்கள் வேண்டுமானால், மடியாமல் இருக்கலாம். ஆனால், வாழ்க்கை துயரங்கள் தோல்விகள் இங்கே மடிவது இயற்கை.
மேலும், மகாபாரதம் ஐந்தாவது வேதம். வேதம் படிப்பதற்கு வீடு தடையல்ல. வீட்டை வீடாக வைத்திருப்பதே வேதத்தின் மிக முக்கிய விதியாகும். அந்த விதியை மிக எளிமையாகச் சொல்லும் அற்புத படைப்பு மகாபாரதம். எனவே தாரளமாக பாரதத்தை வீட்டில் படிக்கலாம்.