கிருஷ்ணன் சுவடு 4
இறைவன் ஒருவன். அவன் வானத்தில் இருக்கிறான். வானத்திற்கு அப்பாலும் இருக்கிறான். பூமியில் இருக்கிறான். பூமிக்குள்ளேயும் இருக்கிறான். பூமியாகவும் இருக்கிறான். இப்படி அவன் இல்லாத இடம் என்பதே இல்லை. நோக்கும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருளென்று, அவனை ஞானிகள் பாடுவது இதற்காகத் தான். கண்ணில் தெரியும் காட்சி, தெரியாத காட்சி, காதுகளில் கேட்கும் ஒலி, கேட்காத ஒலி, புலன்கள் அறியும் பொருள், அறியாத பொருள் அனைத்துமே அவனே. அத்தகைய சர்வ வியாபியாகிய இறைவன் பூமிக்கு வருவானா? மனிதர்களோடு மனிதராய் நடமாடுவானா? திசை தெரியாமல் தடுமாறும் நெஞ்சங்களுக்கு நல் வழிகாட்ட துணை இருப்பானா? என்று ஆயிரம் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்கும் நமக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கிறது.
நமது புராணங்களும், இதிகாசங்களும் தர்ம சாஸ்திரங்களும் இறைவன் பூமிக்கு வருவான். மனிதனருகில் மனிதரைப் போலவே நடமாடுவான். அவன் பெயர் அவதார புருஷன் என்கிறது.. அவதாரம் என்றால் என்ன? அவதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு மேலே இருந்து கீழே இறங்கி வருதல் என்பது பொருளாகும். அவதார புருஷன் என்றால் மேலே மிகவும் மேலே மனிதர்களால் எட்டிப்பிடிக்க முடியாத மாபெரும் உயரத்தில் இருந்து நமக்காக மண் மீது புழுதிபடிய வாழ்வதற்காக இறங்கி வந்த பரமாத்மா என்பதாகும். எதற்காக பரமாத்மா இறங்கி வரவேண்டும்? இறைவன் என்ற நிலையில் சகலவிதமான திருக்கோலத்தில் அவனுடைய சந்நிதானத்திலேயே இருக்க வேண்டியது தானே. மனித ஜென்மங்களை திருத்த வேண்டுமென்றால், இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால், உட்கார்ந்த இடத்திலேயே ஒரே நொடியில் செய்து விடலாமே? அதை செய்யாமல் எதற்காக இறங்கி வரவேண்டும்?
சர்வ வல்லமே பொருந்திய நானே! சர்வலோகத்தை படைத்த நானே!! உனக்காக இறங்கி வருகிறேன் என்றால், அற்ப மானிடன் நீ! எம்மாத்திரம் உன் ஆணவத்தை விட்டு இறங்கு. உன் ஆசையை விட்டு இறங்கு. உன் மோகத்தை விட்டு இறங்கு. என்று நமக்கு பாடம் புகட்ட இறங்கி வருகிறான். அது மட்டுமல்ல, மனித சரீரத்தை தற்காலிகமாக பெற்ற அவன் அந்த சரீரத்திற்கு சம்பளமாக சில துயரங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறான் அது ஏன்? கடவுளாகிய நானே மாமிச வடிவத்தில் வந்து விட்டால், துக்கப்பட்டு ஆகவேண்டும். விதைத்த விதையை, அறுத்தாக வேண்டும். நீயும் அப்படிதான் விதி என்ற வட்டத்திலிருந்து ஓடிவிட முடியாது. கர்மா என்ற நீதிதேவனின் சட்டத்தை உன்னால் மீறி விட முடியாது. படு நன்றாக படு. அவமானப்படு. ஆடை துவைக்கப்படுவது போல், அலைகளில் அகப்பட்ட துரும்பு பாறைகளில் மொத்தப்படுவது போல், துக்கப்படு. அப்போது தான் உன் ஆத்மாவின் அழுக்கு வெளுக்கும். பிறவியின் வினை வெந்து மடியும் என்றும் நமக்கு உணர்த்தவே.
அவதாரத்தின் நோக்கம் இது மட்டுமல்ல. இன்னும் இருக்கிறது. குழந்தை பெறுகிறோம். அந்த குழந்தை நமது இரத்தத்தாலும், மாமிசத்தாலும் உருவானது தான் என்றாலும், அதை பார்க்கும் போதெல்லாம் ஆனந்த பரவசம் நமக்குள் ஊற்றெடுத்து ஓடுகிறது. குழந்தையை அணைப்பது இன்பம். தோளில் சாய்ப்பது இன்பம். இடுப்பில் சுமப்பது இன்பம். விரல்பிடித்து நடக்க வைப்பது இன்பம். அது ஓடினால் இன்பம். ஆடினால் இன்பம். பாடினால் இன்பம். குழந்தையின் ஒவ்வொரு செயலுமே நமக்கு இன்பம். இந்த இன்பத்தை விட்டு விட்டு குழந்தையை அணைக்கும் சுகத்தை விட்டு விட்டு காசு, பதவி அழைத்தாலும் தாசியின் மடி வலைவீசினாலும் அங்கே நாம் போவோமா? ஒரு நல்ல மனிதன் தாயின் பாதங்களிலும், குழந்தையின் விரல் நுனியிலும் சொர்க்கத்தை காண்பான். அந்த நல்ல மனிதனை போன்றவன் தான் இறைவன்.
இறைவனுக்கு நாம் குழந்தை இறைவனால், படைக்கப்பட்ட ஜீவன் நாம் அவன் எங்கோ இருந்து சூட்சமக் கயிற்றை அசைக்கிறான். நாம் ஆடுகிறோம். இருட்டிலும், வெளிச்சத்திலும் அவனே நம்மை வழி நடத்துகிறான். கல்லும் முள்ளும் குத்தி கீழே விழுந்தால் வேலும், அம்பும் பாய்ந்து இரத்தம் வடிந்தாலும், கன்னியரின் வளைகரங்கள் அணைத்தாலும், பதவியின் நாற்காலிகள் நமக்கு வரவேற்பு சொன்னாலும், அத்தனையும் இறைவன் கொடுத்த கொடை என்று அவனையே நினைக்கிறோம். அவனுக்காகவே வாழ்கிறோம். அப்படி நம்மை அவன் வாழ வைக்கிறான். அவன் சொற்படி எல்லாம் நடக்கும் மனித குலத்தோடு ஒட்டி உறவாட உலகத்தின் தகப்பனுக்கு ஆசை பிறக்கிறது. அதனால், அவன் அவதாரம் எடுக்கிறான்.
இறைவனான நாராயணன் எடுத்தது எத்தனையோ அவதாரங்கள். மோகினி அவதாரம், நர நாராயணன் அவதாரம், வியாச அவதாரம், கபில அவதாரம், புத்த அவதாரம் என்று எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால், அவைகளில் பத்து அவதாரங்கள் மட்டும் வைதீக நெறிப்படி சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. மற்றவைகளை விட, தசாவதாரங்களை சிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று நமக்கு தோன்றுகிறது. மோகினி அவதாரம் தேவர்களை காக்க எடுத்தது புத்த அவதாரம். தத்துவத்திற்காக எடுத்தது இவைகளில் குறிப்பிட்ட ஒரே நோக்கம் மட்டும் தான் உண்டு. ஆனால், சிறப்பான பத்து அவதாரங்களில் ஒரு நோக்கம் மட்டுமல்ல, அத்தனை நோக்கங்களும், உலகம் சார்ந்ததாக, பிரபஞ்சம் சார்ந்ததாக, விஞ்ஞானம் சார்ந்ததாக இருக்கிறது.
அப்படி சிறப்பு வாய்ந்த பத்து அவதாரங்களில், பரிபூரண அவதாரமாக ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே கருதப்படுகிறது அது ஏன்? மச்சமாக மாதவன் வந்தபோது கடவுளின் அதீத சக்தி மட்டுமே வெளிப்பட்டது. நரசிம்மம் வரையிலும் அது தான் கதை ராமனாக அவன் அவதாரம் செய்தபோது தான் இறைவன் என்பதை பலநேரங்களில் மறந்துவிட்டான். அதனால், தான் தசரதன் இறந்த போது கண்ணீர் விட்டு அழுதான். ஜானகியை தொலைத்து விட்டு தேடி அலைந்தான். உலகத்தவர் நம்பிக்கைக்காக சீதையை, தீக்குளிக்க வைத்தான். தனது தம்பிமாருக்கு தண்டனை கொடுத்ததற்காக சரயு நதியில் மூழ்கினான். ஆனால், கிருஷ்ண அவதாரம் மனிதனாக வாழ்ந்தாலும் தான் இறைவன் என்பதை மறக்காத அவதாரம் பிறந்த நிமிடம் முதல், வேடனின் அம்பு பட்டு உடல் சட்டையை உதிர்த்த நிமிடம் வரை சிரிப்பை மட்டுமே முகத்தில் கொண்ட அவதாரம்.
நான் கடவுள் என்பதை கிருஷ்ணன் மட்டுமே அறிந்து வைத்திருந்தான். அந்த நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. தான் கடவுள் என்பதை தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும், அறிவுறுத்தியே வாழ்ந்தான். கெளரவசபை யில் துரியோதனன் உள்ளிட்ட அனைவரின் முன்னிலையில் நானே உலகத்தின் மூலப் பரம்பொருள் என்ற விஸ்வரூப தரிசனத்தை கண்ணன் காட்டினான். இதே தரிசனம் அவனிடம் நாரதரும், உதங்க மகரிஷியும், அர்ஜுனனும் பெற்றிருக்கிறார்கள். கடைசியாக மாவீரன் கர்ணனும், விஸ்வரூப தரிசனத்தை பெற்றான். கண்ணன் கடவுள் என்பது அவன் வாழும் போதே எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் கிருஷ்ண அவதாரம் பரிபூரண அவதாரம் என்று போற்றப்படுகிறது. ராம அவதாரம் அருள்நிறைந்ததாக இருந்தாலும், சிறிது குறைவுடனே இருக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாரத்தை மகாபாரதத்தில் உள்ள ஆதிபர்வதம் என்ற பகுதி மிக அழகாக சொல்கிறது. வெகுகாலத்திற்கு முன்பு, வானுலகில் தேவர்களால் தோற்கடிக்கப்பட்ட அசூரர்கள், பூமியில் சண்டைபோட்டு மண்டை உடைப்பதில் ஆர்வம் உடைய அரசகுலங்களில் தோன்றினார்கள். மக்களை மறந்து, மனசாட்சியை மறந்து, மனுதர்மத்தை மறந்து கொடுங்கோல் செய்தார்கள். இதனால், பூமியெங்கும் அதர்ம காற்று வீசியது. அராஜகப் பதாதைகள் பட்டொளி வீசிப் பறந்தன. பூமியின் பாரமும் கூடியது. அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீ நாராயணனை தேவர்கள் வேண்டினார்கள். நாராயணனும், யதுகுலத்தில் வசுதேவரின் புத்திரனாக ஸ்ரீ கிருஷ்ணர் என்ற திருப்பெயரோடு தோன்றினார் என்று கிருஷ்ணனின் பூமி வருகைக்கு முத்தாரம் பதிக்கிறது.
துவாபர யுகத்தின் முடிவில் அவதாரம் எடுத்த ஸ்ரீ கிருஷ்ணன், எந்த சங்கல்பத்தை எடுத்துக் கொண்டான் என்பதை ஸ்ரீ விஷ்ணு புராணம் நமக்கு தெளிவு படுத்துகிறது. அநீதி கும்பல் நிறைந்த பூமியின் பாரம் குறைக்கப்பட வேண்டும். அதற்காக மாபெரும் யுத்தம் நிகழவேண்டும். தன்னை நாடியவர்களும், தர்மத்தின் வழியில் நின்றவர்களும் காக்கப் படவேண்டும். தனது வாழ்வின் வழியாக தர்மங்களும், தத்துவங்களும் போதிக்கப்பட வேண்டும். தனது லீலா வினோதங்கள் பக்தி மார்க்கத்தை உலகம் முழுவதும் உருவாக்க வேண்டும். அதனால், மனிதனாக பிறந்தாலும், மனிதத் தன்மையோடு வாழ முடியாத கடைசி ஜீவனும், இறைவனின் பாதங்களை தொடுகின்ற தகுதியை பெறவேண்டும் என்பதே ஸ்ரீ கிருஷ்ணனின் முழுமையான நோக்கமாகும். இதற்காகவே அவன் பூமியில் பிறந்தான்.
ஸ்ரீ கிருஷ்ணனின் பிறப்பில் லீலைகள் மட்டுமல்ல, தத்துவங்கள் மட்டுமல்ல, உபதேசங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைக்கு தேவையான யுத்திகளும் காட்டப்படுகிறது. அவைகள் அனைத்துமே சிறிது சிறிதாக அறிந்து கொண்டு, அவனது ஆதாரங்களை சரித்திரப்பூர்வமான ஆதாரங்களை தேடுவோம்.