அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு நாற்பது வயதாகிறது. தொழிலும், குடும்பமும் நன்றாகவே இருக்கிறது. இருந்தாலும், சிறிய வயது முதற்கொண்டே சொந்தமாக கார் ஒன்று வாங்க வேண்டுமென்று நினைத்து கொண்டிருக்கிறேன். இன்றுவரை வாங்க முடியவில்லை. எனது வருட வருவாயின் படி, கார் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. நினைத்தால் ஒருவாரத்தில் புதியதாகவே வாங்கிவிட முடியும். இருந்தாலும், என்னால் அது முடியவில்லை. அதற்கென்று முயற்சி எடுத்தால், எதாவது தடை வந்து கொண்டே இருக்கிறது. இது எதற்காக என்று யோசித்து பார்த்தபோது என் நண்பர் ஒருவர் ஜாதகப்படி வாகன யோகம் இல்லை என்றால், கார் வாங்க முடியாது. எனவே உங்களுக்கு அந்த யோகம் இருக்கிறதா? இல்லையா என்று பாருங்கள் என்று கூறுகிறார். இதுவரை நான் ஜோதிடர்களை அணுகி பழக்கமில்லை. முதல்முறையாக உங்களது இணையதளத்தை பார்த்து உங்கள்மீது மதிப்பு கொண்டு, என் ஜாதகத்தை அனுப்பி இருக்கிறேன். தயவு செய்து பார்த்து சொல்லவும்.
இப்படிக்கு,
வேணுகோபால் சங்கர்,
சென்னை.
ஒரு ஜாதகத்தில், நான்காம் இடத்து அதிபதியும், பத்தாமிடத்து அதிபதியும் பரிவர்த்தனை பெற்று லக்கனத்தில் உச்சம் பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்கு ஒருவாகனம் அல்ல. பல வாகனங்கள் சொந்தமாக இருக்கும். இது ஜோதிட விதி. தப்பித் தவறி கூட இந்த விதி யாருக்கும் மாறி அமையாது.
ஆனால், இதே போன்ற ஜாதக அமைப்புடைய ஒருவரை மூன்று வருடத்திற்கு முன்பு பார்த்தேன். உங்களிடம் எத்தனை வாகனங்கள் இருக்கிறது என்று நான் கேட்கவும் அவர் பாவம், நான்கு சிங்கத்திடம் அகப்பட்டுக் கொண்ட ஒற்றை மான் போல, பரிதாபமாக விழித்தார் வாகனமா? அப்படி எதுவும் எனக்கு இல்லை. என் அண்ணா கொடுத்த சைக்கிள் ஒன்று தான் என்னிடம் இருக்கிறது என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று என்பது எனக்கு புரியவில்லை. ஒருவேளை இவர் தவறான ஜாதகத்தைக் கொண்டு வந்திருக்கிறாரா அல்லது பிறந்த நேரத்தை தவறாக கணித்து எழுதி இருக்கிறார்களா? என்று ஆராய்ந்து பார்த்தேன். அப்படி எதுவும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.
அவர் ஜாதகத்தை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்யும் போது, ஒரு உண்மை தென்பட்டது. பலவிதத்தில் அவர் ராஜயோகம் பொருந்திய நபராக இருந்தாலும் கூட பூர்வ ஜென்ம அடிப்படையில் சில தோஷங்கள் இருப்பதாக அறிய முடிந்தது. அந்த தோஷ நிவர்த்திக்காக தக்க பரிகாரங்கள் பலவற்றையும் அவர் செய்து இருக்கிறார். ஆனாலும் எந்த பலனும் இல்லை.
நான் யோசித்தேன். இனி இவருக்கு பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி தேடுவதை விட, இவர் ஆத்மாவை சலவை செய்யும் பரிகாரத்தை தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அவரது சென்ற ஜென்மத்து கர்மாவை தடுக்கும் மந்திரம் ( அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை ) ஒன்றை குறிப்பிட்ட காலம் உபாசனை செய்து வருமாறு அறிவுறுத்திக் கொடுத்தேன். அவரும் என் மீது அளவற்ற நம்பிக்கை உடையவர். நான் சொன்னதை தட்டாமல் செய்து வந்தார்.
ஒரு வருடத்தில், அவரது தோஷம் சற்று விலகியது. பழைய கார் ஒன்றை வாங்கி வாடகைக்கு விட்டார். ஒன்று இரண்டானது. இரண்டு படிப்படியாக வளர்ந்து, இன்று பதினைந்தை தொட்டு விட்டது. வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை கனக்கச்சிதமாக செய்து வருகிறார். இந்த வருடம் புதிய வீடு கூட கட்டி இருக்கிறார்.
உங்கள் ஜாதகத்திலும், ஏறக்குறைய கிரகங்கள் அப்படியே இருக்கிறது. அதனால், வாகன யோகம் உங்களுக்கு ஜாஸ்தியாகவே உண்டு. இருந்தாலும், சிறிய தடை எதோ ஒன்று இருந்து, உங்கள் வாய்க்காலில் தண்ணீர் ஓடாமல் தடுத்துக் கொண்டு நிற்கிறது. ஒருமுறை என்னை வந்து சந்தியுங்கள். அந்த தடுப்பை எடுக்க முடிந்ததை செய்வோம்.