சுவாமிஜிக்கு நமஸ்காரம். நான் இரு சக்கர வாகனத்தில், செல்லும் போது அடிக்கடி சிறிய அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் காயம், எலும்பு முறிவு கூட வந்து விடுகிறது. இரு சக்கர வாகனம் வேண்டாம். பேருந்திலோ, வாடகை வண்டியிலோ செல்லலாம் என்றால், என் வேலையும், வசதியும் அதற்கு இடம் தரவில்லை. எனவே, விபத்துகளை தடுக்க சிறிய பரிகாரங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
இப்படிக்கு,
கங்காதரன்,
டெல்லி.
விபத்துகள் இப்படித்தான் ஏற்படும் என்று உறுதிபட எவராலும் கூற இயலாது. நடக்க வேண்டியச் சூழல் இருந்தால், யார் தடுக்க நினைத்தாலும், நடந்து விடும். வண்டி வாகனத்தில் பயணம் செய்தால், தான் விபத்து ஏற்படும் என்று இல்லை. நடந்து போனால் கூட சர்வ சாதரணமாக விபத்து நடந்து விடுகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால், சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்களில், நூற்றுக்கு தொண்ணூறு பேர் சிறிய பாம்பைக் கூட நசுக்காமல், பயணம் செய்யத்தான் நினைப்பார்கள். ஆனால், அவர்களையும் மீறி அது நடக்கும் போது, அதற்கான சூத்திரக்கயிறு வேறு எங்கோ இருக்கிறது என்பது புரிகிறது.
வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, குலதெய்வ வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு மிகவும் அவசியம். அவைகளை முறைப்படி செய்து வந்தாலே, பெரிய விபத்துகள் தடுக்கப்படும் இருந்தாலும், தமிழுக்கு இலக்கணம் தந்த, அகத்திய முனிவர் ஓம் ஸ்ரீம் சிவோகம் என்ற மந்திரத்தை மனதிற்குள் பயண நேரத்தில் உச்சரித்துக் கொண்டே வந்தால், ஆபத்துகள் இல்லாமல் பயணிக்கலாம் என்று கூறுகிறார். நீங்களும், இந்த மந்திரத்தை உச்சரித்துப்பாருங்கள் நல்ல பலன் கண்டிப்பாக கிடைக்கும்.