குமாரபுரத்தில், சூரிய வெளிச்சம் எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டது. குஞ்சும், குருமானமாக அடைக்கப்பட்டிருந்த, கோழிகள் சிறகுகளை விரித்து சோம்பல் முறித்து, இரைதேட துவங்கி விட்டது. பக்கத்து மரங்களிலும், கூரைகளின் மீதும் தூங்காமல், தூங்கிய சேவல்கள் தரையிறங்க ஆரம்பித்து விட்டன. வாசல் கூட்டி பெருக்கும் பெண்களின் வளையல் ஓசையும், கொலுசு சத்தமும் கேட்கத் துவங்கிவிட்டது. ஏர் உழுவதற்கு, மாடுகளோடு விவசாயிகள் கிளம்பிவிட்டார்கள் என்பதற்கு அறிகுறியாக மாடுகளின் மணியோசை காலைநேரத்து பூபாளமாக வீதியெங்கும் கேட்டது.
கணேசனின் மனைவி, சாணம் கரைத்து கடையின் முன்னால் கொண்டுவைத்து விட்டு முட்டியை பிடித்து கொண்டு மூச்சு வாங்கினாள். உன்னை காலையிலே தண்ணீரை தொடாதே, பேசாமல் படுத்து கிட என்று எத்தனை நாள் சொல்வது. பனியில் நிற்காதே வீட்டுக்கு போ என்று மனைவியை அதட்டிய கணேசன், கரைத்த சாணத்தை கடைக்கு முன்னால் தெளிக்க ஆரம்பித்தான். தனது இயலாமையை எண்ணி வருத்தம் இருந்தாலும், கணவனின் பராமரிப்பால் நெகிழ்ந்து போன நாகம்மை பார்த்து செய்யுங்க என்று அக்கறையோடு சொல்லிவிட்டு கடைக்கு பின்னாலிருந்த வீட்டுப்பக்கம் நகர்ந்தாள்.
சாணம் தெளித்து, பெண்பிள்ளை மாதிரி குனிந்து, உட்கார்ந்து கணேசன் கோலம் போடும் போது நவ்வலடியாள் வந்து நின்றாள். அவளை பார்த்தவுடன், அவசர அவசரமாக கோலத்தை முடித்து விட்டு, வாங்க அக்கா டீ போடனுமா? இட்லி எடுத்து வைக்கணுமா? என்று பணிவோடு கேட்டான். கணேசனை ஏற இறங்க பார்த்த நாவலடியாள் அதிகாரமாக நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள். அவளிடம் யாரும் எதுவும் குறுக்கே பேசிவிட முடியாது. தப்பித் தவறி பேசினாள். அவள் வாயிலிருந்து, வந்து விழும் வார்த்தைகள் முடைநாற்றம் வீசும். ஊர் பெரியதனக்காரர் கூட நவலடியாளை கண்டால் இரண்டடி ஒதுங்கி கொள்வார்.
நவலடியாளுக்கு நிஜப்பெயர் என்னவென்று நிறையபேருக்கு மறந்தே போய்விட்டது. செந்தாமரையோ, செல்வகனியோ நினைவில் இல்லை. அவளிடம் போய் யார் கேட்பது? என்று தயங்குவார்கள். நவலடியாளுக்கு செந்த ஊர் குமாரபுரத்து பக்கத்திலிருக்கும் நவலடி. அவளை இந்த ஊருக்கு கல்யாணம் முடித்து கொடுத்தார்கள். அவளை கட்டிய மாப்பிளை பால்பாண்டி. வாயில்லா அப்ராணி. கல்யாணம் முடிக்கும் போது அவருக்கு கொஞ்சம் வயசு ஏறிப் போச்சு. கையில் நாலு காசும், பத்து ஏக்கர் நிலம் இருந்ததனால் இவளை அவருக்கு கட்டி வைத்து விட்டார்கள். நவலடியில் அவள் ஒன்றும் பணக்கார வீட்டு பெண் இல்லை. வீட்டில் அடுப்பு எரிய வேண்டுமென்றால், அவள் தகப்பன் மண்வெட்டியை தூக்கிக் கொண்டு கூலி வேலைக்கு போகவேண்டும்.
ஆரம்பத்தில், நவலடியாள் அமைதியாகத்தான் இருந்தாள். இரண்டொரு மாதத்தில் பால்பாண்டியோடு கோபித்துக் கொண்டு, பிறந்த வீட்டுக்கு போய்விட்டாள். பால்பாண்டி அவளை கூட்டிவர போனபோது நீ ஆண்பிள்ளை இல்லை. உனக்கு புருஷனாக இருக்கும் தகுதி இல்லை. உன்னோடு வாழ்வதை விட பனைமரத்து மட்டையோடு வாழலாம் என்று சொன்னாளாம். அவள் அப்பனும், பால்பாண்டியும் கெஞ்சிக் கூத்தாடி குமாரபுரத்துக்கு கூட்டி வந்தார்களாம்.
அன்றுமுதல், பால்பாண்டி நவலடியாளின் கட்டளையை ஏற்கும் சேவகனாகி விட்டான். அவள் சொன்னதை தட்டாமல் செய்வதே தனது கடமை என்று நம்பவும் துவங்கி விட்டான். தன்னை பெற்ற தாய்க்காரியை, மனைவியோடு சேர்ந்து அடித்து உதைத்தது ஆகட்டும். தாய்க்கு கொள்ளி கூட போடாமல் புதைத்த செயலாகட்டும். எல்லாம் நவலடியளின் கட்டளைப்படியே நடந்தது. புருஷனை அடக்கி, அவள் அக்கம்பக்கத்து வீட்டாரை சும்மா வைக்கவில்லை. வாய்க்கு வந்தபடி திட்டுவது. சந்தர்ப்பம் கிடைத்தால், நோஞ்சான்களை போட்டு அடிப்பது என்று மேற்கு தெருவில் ஒரு ராஜாங்கமே நடத்தி வந்தாள். அவளைக் கண்டால் ஊரே நடுங்கும் போது, கணேசன் மட்டும் நடுங்காமல் இருப்பானா? உங்கள் கட்டளை என்ன மகராணி என்று கேட்பது போல அவள் முன்னால் நின்றான்.
அடுப்பு மேடையில் கிடந்த தீப்பெட்டியிலிருந்து, குச்சி ஒன்றை எடுத்த அவள், காது குடைய துவங்கினாள். கண்களை இறுக்கி மூடி கூரையை பார்த்து, முகத்தை திருப்பி, காதுகுடையும் சுகத்தை மெய்மறந்து ரசிக்கும் அவள், தோற்றத்தை பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தது. கணேசனுக்கு கறுப்பான முகம். அதில் பெரிய சிகப்பு பொட்டு. இரவில் உறங்கும் போது, களைந்து போன, தலையை வாரிமுடித்திருக்கும் விதம் எல்லாமே பாவைக் கூத்தில் சூர்ப்பனகை பொம்மை இருப்பது போல இருந்தது.
தொண்டையை செருமிக் கொண்ட நவலடியாள் இதோ பார் கணேசா! நீ நல்லா இருக்கணும்னு சொல்லுறேன். கேட்டுக்க உன் கடையில மதிய நேரத்துல வந்து உட்காரானே தர்மவாத்தியார் மகன் சாலமோன் அவனை இனிமேல் இந்த பக்கம் விடாதே. அவன் இங்க உட்கார்வதை பார்த்தா நல்லா இருக்காது. மனசுல வச்சிக்க என்று அடிதொண்டையில் சொன்னாள்.
அக்கா நீங்க சொல்வது எப்படி நியாயம். இது டீ கடை. நல்லவனும் வருவான், கெட்டவனும் வருவான். யாரையும் வராதே என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் வியாபாரம் ஓடாது. நான் வசதி படைத்தவன் இல்லை. படிக்கிற புள்ளைக்கு பணம் அனுப்பனும். பொஞ்சாதிக்கு வைத்திய செலவு பார்க்கணும். நான் ஒத்த மனுஷன் என்ன செய்ய முடியும்? என்று கெஞ்சலான குரலில் அவன் கூறவும் அவளுக்கு கோபம் வந்தது.
நான் சொல்றதை சொல்லிட்டேன். மீறி அவன் இங்கு உட்கார்த பார்த்தா சானிய கரைச்சு அவன் மேல ஊத்துவேன். தட்டிக் கேட்க எவனாவது ஊர்க்காரன் வந்தால், அவனுக்கும் மரியாதை கெட்டுப் போகும். ஆமாம் என்று சீறினாள். கணேசன் இன்னும் பவ்யமானான். அவனுக்கு தான் தெரியும் இவள் வந்து உட்கார்ந்து இருப்பதை பார்த்தவுடனேயே, டீயும் பண்ணும் வாங்க வந்த செல்லாத்தா ஒதுங்கி போறா, ருக்குமணியும் இட்லி வாங்க வந்திருப்பாள் அவளும் வேறு ஏதோ வேலைக்கு செல்வது போல கடையை கடந்து போய்விட்டாள். குறைந்தது மூன்று ரூபாயாவது வியாபாரம் நடந்திருக்கும் அது கெட்டுப் போச்சு.
அக்கா நீங்க தப்ப எடுத்துக்க கூடாது. சாலமோன் நல்ல பையன் எந்த தப்புக்கும் போகமாட்டான். ஞாயிற்றுக்கிழமைன்னா அவன்தான் கோவிலில் ஜெபம் வைக்கிறான். அவனை எதற்காக நீ கோவிக்க என்று கேட்டான். நவலடியாளுக்கு கோபம் வந்தது. இதுவரை யாருமே தன்னிடம் கேள்வி கேட்காதது மாதிரியும், இவன் தான் முதல் முறையாக கேட்டுவிட்ட மாதிரியும் முறைத்தாள். அவன் நல்ல பையன் தான். அது தான் பிரச்சனையே இதுக்கு மேலே நீ கேள்வி கேட்காத நான் சொன்னதை செய் என்று கூறி வேகமாக எழுந்து போய்விட்டாள். காலை நேரத்தில் அவள் தெருவில் டங் டங் என்று நடந்து போனது என்னவோ போலிருந்தது.
அவள் போவதற்காகவே காத்திருந்ததை போல் ருக்குமணி வந்தாள். கணேசண்ணே எங்க ஐயா தோட்டத்துக்கு போகனும். ஆறு இட்லியும், வடையும் இருந்தா வையுங்க என்று கூறியவள், மிக மெதுவான குரலில் என்னென்னே விடிவதற்கு முன்பே வெள்ளிக்கு அடுத்தக்கிழமை வந்துட்டு போகுது என்றாள். ருக்மணி எதையும் ஜாடையாகத்தான் பேசுவாள். அவள் மறைமுகமாக நவலடியாளை சனி என்று சொன்னதை கணேசன் புரிந்து கொண்டான். எல்லாம் என் தலையெழுத்து தர்மவாத்தியார் மகன் சாலமோனுக்கும், நவலடியாளுக்கும் என்ன தகராறோ தெரியல. அவனை கடைக்குள் உடாதே தகறாரு பண்ணுவேன் என்று சொல்லிட்டு போறா என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான் கணேசன்.
சாலமோன் மேல அவளுக்கென்ன கோபம் உனக்கு தெரியுமா அண்ணே? என்று கேள்வியோடு துவங்கிய ருக்மணி ஒரு தகவலை அவிழ்த்தாள். அண்ணே நம்ம ஊருக்கு வெற்றிலை வியாபாரம் செய்ய வருவாரே இளையபெருமாள் அவருக்கும், நவலடியாளுக்கும் ஒரு இதுவாம் இரண்டுபேரும் ராமுகோனார் தோட்டத்துல பேசிகிட்டு இருந்தத இந்த சாலமோன் பாத்துருக்கான். பாத்தவன் சும்மா இருக்காம புருஷன் இருக்கும் போது இந்தமாதிரி நடக்கிறது பாவம் என்று சொல்லிருக்கான். சாத்தான் கிட்ட போய் உபதேசம் பண்ணலாமா? அவா உடனே இங்க பார்த்தத ஊருக்குள்ள சொன்னா நீ கையபிடிச்சி இழுத்ததா கலாட்டா பண்ணுவேன் என்று மிரட்டி இருக்கா. அதனாலதான் சாலமோன் இங்கே வந்து உட்கார்ந்தா. ஏதாவது சொல்லிடுவானோ என்ற பயத்துலதான் உன்னை மிரட்டிட்டு போறா என்று நவலடியாளின் மிரட்டலுக்கு பின்னால் உள்ள கதையை விவரித்தாள்.
அது சரி ருக்குமணி இது உனக்கு எப்படி தெரியும்? நான் ஆம்புல கடையை வைத்து கொண்டு ஊருக்கு நடுவுல உட்கார்ந்து இருக்கேன். நாலு மனுஷன் இங்கே வரான். பல கதைங்க இங்கே நடக்கு. எனக்கே தெரியாத சங்கதி ஊட்டுக்குள்ளாற உட்கார்ந்திருக்கும் உனக்கு எப்படி தெரியும்? ருக்குமணியிடம் இப்படி கேட்ட கணேசனுக்கு உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது. ஒரு பெண்பிள்ளையை கேள்வி கேட்டு மடக்கி விட்டதாகவும், அவள் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நிற்பாள் அதை பார்த்து சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம் என்று அவன் நினைத்தான். ஆனால், ருக்குமணி அந்த வாய்ப்பை அவனுக்கு தரவில்லை.
அண்ணே உலகம் நீ நினைக்கிற மாதிரி இல்ல. ரொம்ப மாறிப் போச்சு. முந்தி கணக்கு போடணும்னா பதினாறாம் வாய்ப்பாடு வர தலைகீழே தெரிஞ்சிக்கணும். இப்போ அந்த தலைவலி எல்லாம் வேண்டாம். சுண்ணாம்பு டப்பா மாதிரி இருக்குற ஒண்ணுல நாலஞ்சி பட்டன் இருக்கு. அதை தட்டினாலே கோடிக்கணக்கான கணக்க ரெண்டு செகண்டுல போட்டுடலாம். தலைகால் புரியாமல் உலகம் ஓடிக்கிட்டே இருக்குன்னே.
நீ ஆற்றுல இறங்கிறதா வச்சிக்க, நீ இறங்கும் போது உன் கால்ல பட்ட தண்ணீ இப்போ இருக்கா? நிமிஷத்துக்கு நிமிஷம் புது தண்ணீ தான் உன்ன தொட்டுகிட்டு இருக்கு. ஆனா நீ பழைய தண்ணீ தான் இருக்கிறதா நினைக்கிற அது தப்பு. புதுசு புதுசா தண்ணீ வருது. அது புதுசு புதுசா உன்னை தொடுது. அது மாதிரிதான் காலமும் நேரமும். மாறிகிட்டே வரும் காலத்தோட இணைஞ்சி போகலன்ன நாம தோத்து போய்டுவோம் என்று சொன்னவள் அர்த்த புஷ்டியோடு அவனை பார்த்து சிரித்தாள்.
கணேசனுக்கு உச்சந்தலையில் ஓங்கி அடித்தது போல் இருந்தது. இதே மாதிரி போன வாரத்தில் யாரோ ஒருத்தன் நம்மிடம் பேசினானே இதே வார்த்தைகள் தண்ணீர், காலம் மாறுதல் என்று வார்த்தைகளை புரட்டி புரட்டி போட்டானே? இதை எங்கே இருந்து கத்துகிட்டே என்று கேட்டதற்கு கெளதம புத்தர் இப்படி சொல்கிறார் என்று விளக்கம் கொடுத்தானே யாரவன் நன்றாக நினைவிருக்கிறது ஆனால் சட்டென்று மறந்து போய்விட்டது.
ஒருவேளை பட்டாளத்துக்கார தோப்பையா கிழவனாரக இருக்குமோ அவர்தான் புத்தர் அது இது இரு பேசுவார் என்று சிந்தித்தவாறே ருக்மணி கேட்ட இட்லிகளை வாழை இலையில் வைத்து மடக்கி கட்டினான். இல்லை கிழவனார் சொல்லவில்லை யாரோ ஒரு இளவட்ட பையன் சொன்னான் நீலநிறத்து லுங்கியும், வெள்ளை சட்டையும் போட்டிருந்ததாக ஞாபகம் சிந்தனை வயப்பட்டவனாக ருக்குமணியிடம் பொருட்களை கொடுத்து அனுப்பிய கணேசன் நாற்காலியில் உட்கார்ந்தான்.
இட்லி பொட்டலத்தை வாங்கிய ருக்குமணி நமட்டுச் சிரிப்புடன் தெருவில் நடந்தாள். தான் சொன்ன உதாரணத்தை கேட்டு நிச்சயம் கணேசன் குழம்பிப் போயிருப்பான். இதை இவளாக பேச முடியாது என்று அவனுக்குத் தெரியும். வேறு யாருடைய வார்த்தைகளை இரவல் வாங்கி இவள் பேசிருக்க வேண்டுமென்று கண்டிப்பாக முடிவு செய்திருப்பான். ஆனால், தனக்கும் சாலமோனுக்கும். சின்னதுரை தோட்டத்து வாய்க்கால் மேட்டில் நடந்த உரையாடல் என்று கணேசனுக்கு நிச்சயம் தெரியாது அவனுக்கு அந்தளவு விபரம் பத்தாது. அவனை நன்றாக குழப்பி விட்டோம் என்று சந்தோசப்பட்ட ருக்குமணிக்கு கண்ணுக்கு தெரியாமல் புத்தர், ஐயோ! ஐயோ! இதுகளுக்காகவே நான் உபதேசம் செய்தேன் என்று தலையில் அடித்துக் கொள்வது தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை ...