ஐயா குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் பொள்ளாச்சியில் இருக்கிறேன். எனக்கு திருமணம் முடிந்து, ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை இல்லை. இதனால், நானும் என் மனைவியும் மிகவும் துயரத்தில் இருக்கிறோம். எங்கள் கஷ்டத்தை அதிகப்டுத்துவது போல, நல்லது - கெட்டது போன்ற எந்த விஷயத்திற்காவது வெளியில் சென்றாலும், பார்ப்பவர்கள் அனைவரும் மிக கடினமான கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் போது, செத்துவிடலாமா என்று தோன்றுகிறது. ஐயா, அவர்கள் தயவு செய்து எங்கள் ஜாதகத்தை பார்த்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டா? என்பதை தெளிவாக கூறவும்.
இப்படிக்கு,
வீரபத்திரன்,
பொள்ளாச்சி.
திருமணம் முடிந்தவுடன் குழந்தை பிறந்துவிட வேண்டும். தப்பித் தவறி வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்தபிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாமே என்று தள்ளிப் போட்டால், ஊரார், உறவினருக்கு பதில் சொல்லி மாளாது. பெண்ணைப் பார்த்தால் உனக்கு மாதாந்திர நிகழ்வு சரியாக இருக்கிறதா? கர்ப்பபையை பரிசோதனை செய்தீர்களா? கருமுட்டை வலுவோடு இருக்கிறதா? என்றெல்லாம் மருத்துவர்களை போல் கேட்கத் துவங்கி விடுவார்கள்.
பெண்களை மட்டும் தான் கேட்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஆண்களும் அத்தகைய கேள்விக் கணைகளுக்கு தப்ப இயலாது. நீயும், உன் பெண்டாட்டியும் சந்தோசமாக இருக்கிறீர்களா? உனக்கு ஏதாவது குறைபாடு உண்டா? என்றும் கேட்பார்கள். சிலர் உனக்கு ஆண்மை இருக்கிறதா? என்று கூட மனவேதனையை அறியாமல், கேள்விகளை அடுக்குவார்கள். இதே குறை அவர்களுக்கோ, அவர்களது குடும்பத்தில் யாருக்கோ இருந்தால் மட்டும் மற்றவர்கள் கேள்வியே கேட்கக் கூடாது என்பார்கள். இது தான் உலகத்தவர் கடைபிடிக்கும் நியாயம்.
எனவே உலகத்தாரின் கருத்துக்களுக்கு, முற்றிலுமாக செவி சாய்த்து நாம் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய உணவு முறை மக்களின் பழக்க வழக்கம், சில மருந்துகளின் வீரியம் போன்றவைகள் சிலருக்கு குழந்தைப் பேற்றை தள்ளிப் போக வைக்கிறது அல்லது இல்லாமல் செய்து விடுகிறது. எனவே மாறிவரும் இன்றைய சமூகப் போக்கை எண்ணி தான் வருத்தப்பட வேண்டுமே தவிர ஊராரை எண்ணி அல்ல.
ஒருவர் ஜாதகத்தில், ஒன்றாம் இடத்தில் சனியும், எட்டாம் இடத்தில் குருவும், பனிரெண்டாம் இடத்தில் செவ்வாயும் இருந்து, ஐந்தாம் இடத்தை சுபகிரஹம் ஏதாவது ஒன்று பார்த்தால் காலம் கடந்து குழந்தை பிறக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் தீர்க்கமாக சொல்கிறது. உங்கள் ஜாதகமும் ஏறக்குறைய அப்படியே இருக்கிறது. எனவே உங்களுக்கு வரும் இரண்டு ஆண்டிற்குள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு.
மேலும் உடனடியாக குழந்தை பிறக்க, மருதமலை முருகனுக்கு சஷ்டி விரதம் இருங்கள். தை அமாவாசை அன்று பவானி கூடுதுறைக்கு சென்று உங்கள் மூன்று தலைமுறையினருக்கு தர்ப்பணம் செய்யுங்கள். அங்கே உள்ள மூன்று புரோகிதர்களுக்கு வஸ்திரதானமும் செய்யுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பிறக்கும் உங்கள் துயரம் தீரும்.