காலை ஏழரை மணி ஆகிவிட்டதன் அறிகுறியாக பள்ளிக்கூடத்து பிள்ளைகள், கணேசன் கடை முன் குவியத் துவங்கி விட்டார்கள். குமாரபுரத்து பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை தான் உண்டு. மேலே படிக்க வேண்டுமென்றால், பக்கத்தில் உள்ள பெட்டைக்குளத்திற்கு போகவேண்டும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பெட்டைக்குளத்தில் படிக்கலாம். அதற்கு மேலும் மேல்படிப்பு என்றால், பக்கத்தில் உள்ள டவுன் திசையன்விளைதான் ஒரே கதி. ஆனால், குமாரபுரத்தில் இதுவரையில் யாரும் திசையன்விளையை தாண்டிப் போய் அதிகமாக படித்தவர்கள் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு பட்டதாரிகளும், பாட்டனார் வீட்டிலோ தகப்பனாரிடமோ இருந்து மேல்படிப்பு படித்தவர்கள்.
பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக கணேசன் கடைக்கு வர காரணம், குமாரபுரத்து பஸ்டாண்ட் கணேசன் கடைதான். அங்கே போட்டிருக்கும் ஒன்றிரண்டு பெஞ்சுகள் தான், பயணிகள் காத்திருப்பதற்கும் ஊர்கதைகள் பேசுவதற்கும், ஏழேமுக்கால் மணிக்கு நாகர்கோவிலில் இருந்து வரும் அரசு பஸ் நிற்கும். சாக்குப் பையில் குப்பைகளை வாரி கட்டுவது போல், குழந்தைகளையும், பெரியவர்களையும் ஏற்றிக் கொண்டு போகும். இந்த பஸ்சை விட்டு விட்டால், அடுத்த பஸ் பதினோருமணிக்கு தான். வேலைக்கு போகிறவர்களும், இந்த பஸ்ஸை நம்பித்தான் இருக்கிறார்கள். ஒருநாள் பஸ் வரவில்லை என்றாலும், பலரின் காரியம் கெட்டுவிடும்.
பஸ்ஸிற்காக காத்திருந்த சில மாணவர்களை எழும்பும்படி சொல்லிவிட்டு பெஞ்சில் வந்து உட்கார்ந்தார் ஜேம்ஸ் வாத்தியார். ஊரில் வசதி படைத்தவர்களில், ஜேம்ஸ் வாத்தியாரும் ஒருவர். ஆரம்ப காலத்தில் சொத்து, சுகம் அதிகம் இல்லை என்றாலும் வாங்குகிற சம்பளத்தில் சிக்கனமாக சேர்த்து வைத்து, நிலபுலன்களை வாங்கிப் போட்டவர் ஜேம்ஸ் வாத்தியார். சொல்லுகிறபடி கர்த்தருடைய அருளாலோ, அதிர்ஷ்டத்தாலோ அவரது மகனுக்கு கப்பலில் வேலை கிடைத்தது. நாடு ஆறு மாதம் காடு ஆறு மாதம் என்பது போல, கப்பலில் பாதி நாளும், தரையில் பாதி நாளும் அவன் வேலை இருந்தாலும், லட்சக்கணக்கில் சம்பாதித்தான். குமாரபுரத்தில் பத்தாயிரம் ரூபாய் இருந்தாலே பாதுகாப்பிற்கு இரண்டு பேரை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்தளவிற்கு ரூபாய்க்கு மதிப்புண்டு. அந்தநிலையில், லட்சக்கணக்கில் வருமானம் என்றால், கேட்காவா வேண்டும். ஒட்டுமொத்த ஊரே ஜேம்ஸ் வாத்தியாரை இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு வணங்க காத்திருந்தது.
ஆனாலும் வாத்தியாருக்கு ஆணவம் கொஞ்சம் கூட கிடையாது. சின்னப்பிள்ளையாக இருந்தாலும் மதிப்பு கொடுத்து தான் பேசுவார். உடம்பு சரியில்லாமல் ஊரில் யார் படுத்தாலும், அவர்கள் வீட்டிற்கு சென்று பைபிள் வாசிப்பார். மிகவும் நல்ல மனிதர். அதனாலும் அவருக்கு மரியாதை உண்டு. பெஞ்சில் வந்து உட்கார்ந்த வாத்தியார் கணேசனை டீ போடச் சொன்னார். அது என்னவோ தெரியல கணேசா! வீட்டில் நயமான தேயிலை வாங்கி வைத்திருக்கிறேன். வீட்டுக்காரியும், தண்ணிகலக்காத பாலில் தான் டீ போடுறாள். ஆனாலும், உன் கடை டீ டேஸ்டுக்கு எதுவும் வரமாட்டேன் என்கிறது. கையில் எதாவது மாயமந்திரம் வைத்திருப்பியோ? என்று கணேசனை பார்த்து கேலி பேசினார்.
அதல்லாம் இல்ல சார், குடிக்கிறவுங்க சந்தோசமா இருக்கணும்னு நினைச்சிக்கிட்டே டீ போட்டுத் தரேன். அது நல்லா இருக்கு அவ்வளவு தான் என்று பணிவாக பதில் சொல்லிய கணேசன், சார் உங்க பையன் கிறிஸ்துமஸிற்கு வர்றாரா? என்றும் கேட்கவும் செய்தான். அவன் வருவதை பற்றி உறுதியா சொல்ல முடியாது. இப்போ எதோ ஒரு ஆப்பிரிக்கா நாட்டுல இருக்கானாம். அங்க வேலை முடிஞ்சாதான் வரமுடியும் என்று ஜேம்ஸ் வாத்தியார் பதில் சொல்லவும், மாணிக்க முதலியாரும் கடைக்கு வந்து சேர்ந்தார். என்ன வோய் வாத்தியார், கணேசனோட வாதம் நடக்குதா? என்று கேட்டவாறு வாத்தியாரு பக்கத்தில் அமர்ந்தார்.
அதெல்லாம் ஒன்றுமில்லை முதலியார். என் பையன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வருகிறானா? இல்லையா என்று கணேசன் கேட்டான். அவனுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறேன். வாதம் பண்ணுகிற அளவிற்கு நானும், கணேசனும் உங்களைமாதிரி புத்திசாலியா என்ன? என்று நையாண்டியாக முதலியாரை உசுப்பேற்றினார். முதலியார் அதற்கெல்லாம் சளைத்தவர் அல்ல. ஜேம்ஸ் வாத்தியாரும், அவரும் ஒத்த வயது என்பதனால் பரஸ்பரம் இரண்டு பேரும் வார்த்தை ஜாலங்களை பரிமாறி கொள்வது ஊரில் சகஜம். இருவருக்கும் உள்ள தோழமையை பயன்படுத்தி கணேசன், எத்தனை முறையோ இரண்டு பேர் வாயையும் கிளறி விட்டிருக்கிறான். அவர்கள் பேசும் போது கிடைத்த ஒன்றிரண்டு பழைய கால சங்கதிகள் அவனை வியப்பில் ஆழ்த்தியதுண்டு. அப்படி, அவன் வியப்பில் ஆழ்ந்து போன ஒரு விஷயம் எஸ்தர் டீச்சர் கதை.
அன்று மதியநேரம் இருக்கும். தெருவில், ஆள் நடமாட்டம் இல்லை. தூரத்தில் தெரியும். அம்மன்கோவில் அரச மரத்து மேடையில், இரண்டு ஆடுகள் மட்டும் படுத்துக் கிடந்து, அசைபோட்டு கொண்டிருந்தன. அவைகளை வைத்த கண் வாங்காமல், பார்த்து கொண்டிருந்த கணேசனுக்கு ஆடுகளுக்கும், மனிதர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தோன்றியது. ஆடுகள் தீனியை மென்று கொண்டிருக்கிறது. மனிதர்கள் நினைவுகளை மென்று கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்த அவனுக்கு சிரிப்பு வந்தது. தன்னால் கூட சிந்திக்க முடிகிறதே? என்று தோன்றியது. வியாபாரம் இல்லாமல், தனியாக உட்கார்ந்தால் சிந்தனை மட்டுமென்ன பைத்தியமே வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்போது தான் மாணிக்க முதலியாரும், ஜேம்ஸ் வாத்தியாரும் கடைக்கு வந்து சேர்ந்தார்கள். தம்பி கணேசா குளிர்ச்சியா ஆளுக்கொரு சோடா கொடு என்று கேட்டார்கள். கணேசனும் கொடுத்தான்.
அவர்கள் சோடாவை உடைக்கும் நேரத்தில் வேத கோவிலில் இருந்து ஒற்றை மணி அடிக்கும் சத்தம் கேட்டது. பொதுவாக கிறிஸ்தவ ஆலயத்தில், ஒற்றை மணி அடிக்கிறது என்றால், யாரோ கிறிஸ்தவர் இறந்து போய்விட்டதாக அர்த்தம். கணேசனுக்கு மணி சத்தம் தூக்கி வாரிப் போட்டது. வாத்தியாரிடம் கேட்டான். யார் செத்து போனா? என்று. எஸ்தர் டீச்சர் ரொம்ப நாளா படுக்கையில் கிடந்தாங்க இல்லே அவுங்க தான் போயிட்டாங்க என்றார். வருத்தத்துடன் உடனே முதலியார் என்னவோ பதினாறு வயசு பொண்ணு செத்துப் போயிட்டாப்ல கவலைப்படுகிறீர். தொண்ணூறு வயசு கிழவிப் போயிட்டா. இதுக்கு என்ன வருத்தம் என்றார். முதலியாருக்கு எதுவுமே பெரிய விஷயம் இல்லை. அவரது பையன் லாரியில் விழுந்து கால் ஒடிந்து போனபோது கூட வருத்தப்படாமல் இந்த வயசில் இது சகஜம். டாக்டரை பார்த்து சரியாக்கிடலாம். கிழட்டு வயசுல கால் போயிருந்தா மூலையில் தான் கிடைக்கனும் வேலையைப் பார் என்றார்.
முதலியாரின் பேச்சு, ஜேம்ஸ் வாத்தியாருக்கு பிடிக்கவில்லை. சும்மா இருங்க முதலியார், இருண்டு போய்கிடந்த இந்த ஊர் மனுஷங்களுக்கு ஏசுவை அடையாளம் காட்டியது அந்த அம்மா தான். அவுங்க இல்லன்ன இந்த ஊரில் தேவாலயம் வந்திருக்குமா? பள்ளிக்கூடம் தான் கட்டியிருப்பாங்களா? கடவுளையே நினைச்சு கொண்டு வாழ்ந்த ஒரு பெரிய மனுஷி போயிட்டா அதற்காக அஞ்சலி செலுத்தனும். அத விட்டுட்டு கிண்டல் பண்றது சரியில்லை என்றார். முதலியார் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை. அவர், கணேசனை பார்த்து மழையும், தண்ணீருமாய் இந்த ஊரு செழுமையா இருந்தது. எப்போ இந்த அம்மா வந்து அலேலூயான்னு கோஷம் போட்டாங்களோ அன்னைக்கே மழையும் போச்சி, தண்ணீயும் போச்சி. ஊரிலிருக்கும் ஒன்றிரண்டு ஆம்பிளைகளும் வேலைத் தேடி மெட்ராஸ் போயிட்டாங்க. ஊற காலி பண்ணினது தான் இந்த அம்மா செய்த சாதனை என்றார்.
அதற்கு மறுப்பு சொல்ல வந்த ஜேம்ஸ் வாத்தியாரை, கையமர்த்தி விட்டு கணேசா நான் ஒரு கதை சொல்கிறேன் கேளு. எனக்கு பத்து வயசு இருக்கிறப்போ, இந்த அம்மா நம்ம ஊருக்கு வந்தாங்க. நம்ம ஊரில், முதல் முறையா கஞ்சிப் போட்டு அயர்ன் செய்த சேலை கட்டினதே இந்த அம்மா தான். கையில் வாட்சும், தலையில் கொண்டையுமாய் குடைபிடித்துக் கொண்டு இவுங்க வந்தாங்கண்ணா மரியாதை கொடுக்க தானா தோணும். நம்ம ஊறு திண்ண பள்ளிக்கூடத்துக்கு இவுங்க தான் முதல் முதலா வெளியூரில் இருந்து வந்த டீச்சரு.
இப்போதே குடியானவனுக்கு, காலையில் பழங்கஞ்சியும், மதியத்தில் கூழும் தான் நம்ம ஊரின் கதி. ஐம்பது வருஷத்துக்கு முன்னால, நிலைமை எப்படி இருந்திருக்கும்னு நினைச்சி பார்த்துக்க. நாங்கல்லாம் அரிசி சோற்றை பார்த்து வருஷம் கணக்கா இருக்கும். தீபாவளி வந்தால் எங்க ஆத்தா கஷ்டப்பட்டு அரசி சோறு சமைக்கும். கறிக்குழம்பு, இட்லி, தோசை எல்லாம் கனவில் மட்டுமே பார்க்கலாம். அந்த நேரத்துல, இந்த அம்மா எங்களை மாதிரி பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க அவுங்க வீட்டீற்கு கூப்பிடுவாங்க. நாங்க படிப்புன்னா காத தூரம் ஓடிப் போயிடுவோம். எங்களை பிடிக்க சுலபமா ஒரு வழியை அவுங்க வச்சிருந்தாங்க.
படிக்கப் போனா, தினசரி ஒரு மிட்டாய் தருவதா சொன்னாங்க. நாங்களும், நாக்க தொங்கப் போட்டுட்டு போனோம். பாட்டில் நிறைய மிட்டாய் வச்சிருப்பாங்க. அத பார்த்து சப்பு கொட்டிக்கிட்டே படிக்கிற மாதிரி நடிப்போம். வீட்டுக்கு கிளம்பும் போது, ஆளுக்கொரு மிட்டாய் தருவாங்க. எச்சில் ஒழுக, ஒழுக அதை சாப்பிடுகிற சுகம் இருக்கே. அந்த வயசில் அது தான் சொர்க்கம் சாதாரண மிட்டாய் கொடுத்திட்டு இருந்த எஸ்தர் டீச்சர், திடீரென்று சாக்லேட் கொடுக்க ஆரம்பிச்சாங்க. கள்ளுகுடிச்ச குரங்கு மாதிரி நாங்க ஆயிட்டோம். பள்ளிக்கூடம் இல்லாத நேரத்தில் எஸ்தர் டீச்சர் வீட்டைச் சுற்றி வருவதே எங்க வேல.
அவுங்க வீட்டைச் சுற்றி மரம் வைப்பது, பூஞ்செடி வளர்ப்பது பெருக்கி சுத்த பத்தமாய் வச்சிக்கிறது டீச்சருக்கு. பாத்திரம், பண்டம் கழுவி கொடுப்பது இப்படியெல்லாம் ஆர்வமா வேலை செய்வோம். ஒருநாள் டீச்சரோட புருஷன் ஊரிலிருந்து வந்திருந்தாரு. அவரு மஸ்கோத் அல்வா அப்படின்னு ஒரு பண்டம் தந்தாரு. அதுக்கு முந்தி அதே மாதிரி எதையும் நாங்க சாப்பிட்டதே கிடையாது. மஸ்கோத் அல்வா எங்கள ரொம்பவும் மயக்கிடுச்சி அப்ப தான் எஸ்தர் டீச்சர், ஒரு காரியம் செய்தாங்க. சாயங்காலம் நேரம் எங்கள் எல்லோரையும் வரச் சொல்லி பைபிள் படிச்சிக் காட்டி பாட்டுபாடி ஜெபம் செய்தாங்க. நாங்க, தினசரி இந்தமாதிரி ஜெபம் செய்தால், ஏசுநாதர் நிறையா மஸ்கோத் அல்வா கிடைக்க வழி செய்வாரு என்றும் சொன்னாங்க.
எங்களுக்கு மஸ்கோத் அல்வாவும் புதுசா இருந்தது. ஏசுநாதரும் புதுசா தெரிஞ்சாரு. இதுவரைக்கும் சாமின்னா அருள்வந்து ஆடுறது, வேப்பிலையால் பேய் ஓட்டறது, ஆடு, கோழி பலிபோட்டு, பொங்கல் வச்சி சாப்பிடறது அதிகப்படியா போனா மாரியம்மன, சப்பரத்திளையும் வைகுண்டசாமிய, குதிரை வாகனத்திலேயும் ஊர்வலமா தூக்கி கிட்டு போறது தான் தெரியும். ஆனா எசுநாதரு எங்களுக்கு சுத்தமா வேறுமாதிரி தெரிஞ்சாரு. தப்பு செய்யாதே! ஒரு கன்னத்தில் அறைந்தால், மறுகன்னத்தை காட்டு, எல்லோரிடமும் அன்பா இரு என்று அவரு சொன்னதாக எஸ்தர் டீச்சர் சொல்றது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்து, சாமினா அன்பா தான இருக்கணும், ஆட்டை கடிக்கிறதும், மாட்டை விரட்டுவதும், சாமி செய்ற வேலையா என்ன?
ஏசுநாதரு அன்பா இருக்க சொன்னதோட இல்லாம, நமக்காக சிலுவையில அறைபட்டு செத்தும் போயிருக்காரு என்று டீச்சர் சொன்னதும், எங்களுக்கு அழுகையா வரும். ஏசுசாமி எவ்வளவு நல்ல சாமி என்று தோன்றும். இதோடு மட்டுமா அவர் எங்களுக்கு வித விதமா இனிப்பு கொடுக்க சொன்னதாவும், புத்தம் புதுசா பேனா, பென்சில் கொடுக்க சொன்னதாகவும், எஸ்தர் டீச்சர் சொன்ன போது இன்னும் அழுகை அதிகமா வந்திச்சி. ஏசுவுக்காக உயிரையே கொடுக்கணும்னு தோணிச்சி நாங்க, அடிக்கடி டீச்சர் நடத்திய ஜெபக்கூட்டத்துல கலந்துகிட்டோம். அவுங்க எங்களுக்காக ஜெபம் செய்தாங்க. எங்களுக்கு, புதுத் துணி கிடைக்கணும். நல்ல படிப்பு வரணும் என்றெல்லாம் கூட ஜெபிச்சாங்க.
அதன் பிறகு நாங்கள் கீழ விழுந்தால், ஐயோ அம்மா ன்னு கத்துறதுக்கு பதிலா, ஏசப்பா ன்னு கத்தினோம். இது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு. மிட்டாயிற்கும், அல்வாவுக்கும் ஆசைப்பட்டு எஸ்தர் டீச்சர் வீட்டுக்கு போனா நாக்கை இழுத்து வச்சி அறுத்து காக்காவுக்கு போட்டுவிடுவதாக மிரட்டினார். எங்கப்பா ரொம்ப மோசமானவர். சொன்னா சொன்னத தப்பாம செய்திடுவாரு. அதனால நான், டீச்சர் வீட்டு பக்கமே தலைவச்சி படுக்கல. ஆனா நம்ம மாரிமுத்து நாடார் மகன், தங்கசாமி நாடார் மருமகன் எல்லோரும் தொடர்ந்து போனாங்க இப்போ கிறி ஸ்தவங்களா ஆக்கிட்டாங்க. இதோ இந்த ஜேம்ஸ் வாத்தியாருடைய அப்பா பேர் என்ன தெரியுமா? பச்சைமால் நாடார். தாத்தா பேரு இளையபெருமாள் நாடார். இவருக்கும் ஆரம்பத்துல, முத்துக்குட்டி என்று தான் பேரு. மஸ்கோத் அல்வா தந்த மோகம். ஜேம்ஸ் வாத்தியாரா மாறிட்டாரு. இது தான் நம்ம ஊருக்கு வேதகாரங்க வந்த வரலாறு என்று சொல்லி சிரித்தார் மாணிக்க முதலியார்.
மாணிக்க முதலியாரின் வெகுளித்தனமான பேச்சில் உண்மை. இருக்கலாமோ என்று கணேசனுக்கு தோன்றியதை ஜேம்ஸ் வாத்தியார் புரிந்து கொண்டார். கணேசன் நீ முதலியார் சொல்வதை நம்பி விடாதே. எஸ்தர் டீச்சர் என்னவோ இந்த ஊருக்கு கிறிஸ்தவத்தை கொண்டு வந்தது உண்மை தான். ஆனா, அப்படி அவுங்க கொண்டு வந்ததில என்ன தப்பு? ஏசுநாதரு அன்பை தான உபதேசம் பண்ணிறாரு. எல்லோரும் அன்பாக இருக்கணும்னு சொன்னத ஊர் ஊரா பரப்புரதுல என்ன தகராறு முதலியார் எப்போதுமே குதர்க்கமாக தான் பேசுவாரு என்று, அவசர அவசரமாக பேசினார். வாத்தியாரின் பேச்சு. கணேசனுக்கு புதுசா இருந்தது. அவர் எப்போதுமே பதட்டப்பட மாட்டார். இப்போம் ஏன் பதட்டப்படுகிறார் என்று தோன்றியது.
பிறகு இரண்டு பேரும் வேறு எதோ கதைகளை சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு போய்விட்டார்கள். கிளம்புகிற நேரம் வரையில், ஜேம்ஸ் வாத்தியார் சற்று பதட்டத்தோடு இருந்தார் ஒன்று. எஸ்தர் டீச்சரின் மரணம் அவரை பாதித்திருக்க வேண்டும் அல்லது முதலியாரின் விமர்சனத்தை நான் காதுகொடுத்து கேட்டுவிட்டேனே என்று கவலை பட்டிருக்க வேண்டும். இதில் எதுவாக இருந்தாலும், நமக்கென்ன என்று கணேசன் வேலையில் மூழ்கி விட்டான். அன்று போன இரண்டுபேரும் இன்றுதான் வந்திருக்கிறார்கள். என்ன வம்பு வாதம் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை எதுவாக இருந்தாலும், இரண்டு பேரும் அடிதடியில் இறங்க போவதில்லை காரணம் இருவரும் வயதானவர்கள் புத்திசாலிகள்.
பள்ளிக்கூட குழந்தைகளுக்கு இன்னும் பஸ் வரவில்லை. ஏனோ தாமதமாகிறது. பிள்ளைகள் லேட்டா போனா ட்ரில் வாத்தியார் சமத்தியா சாத்திப்புடுவாரு என்று பேசிக் கொண்டார்கள். மாணிக்க முதலியார் அதிலொரு பையனை கூப்பிட்டார். உன் பெயரென்ன என்று விசாரித்தவர், நான் ஒரு சங்கதி கேட்கிறேன் மறைக்காம பதில் சொல்லனும் என்று பையனை பார்த்துக் கேட்டார். அவனும் பயத்தோடு தலையாட்டினான். தீபாவளிக்குச் செய்த அதிரசத்தில் ஒன்னே ஒன்னுமட்டும் பாக்கி இருக்கு. அத உங்க அம்மா உனக்கு தருவாளா நாய்குட்டிக்கு கொடுப்பாளா? சரியா சொல்லு என்றார். பையன் திருதிருவென்று விழித்து விட்டு எனக்கு தான் தருவாங்க என்று பதில் சொன்னான். நல்ல பையன் நீ போ என்று அவனை அனுப்பி விட்டு வாத்தியார் பக்கம் திரும்பினார் முதலியார்.
வாத்தியாரே பையன் சொல்றதை கேட்டீரா? உங்க பைபிள்ல உள்ளத தான் அவன் பதிலா சொல்றான் என்று, கண் சிமிட்டினார் ஜேம்ஸ் வாத்தியாருக்கு எதுவும் புரியவில்லை. எதற்காக இவர் வாலும் இல்லாமல், தலையும் இல்லாமல் பேசுகிறார் என்று தோன்றியது. சிறிது யோசித்த பிறகு தான் அன்றொரு நாள் எஸ்தர் டீச்சர் காலமான அன்னைக்கு இரண்டு பேருக்கு நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது. உங்கள் உபதேசம் யாருக்கு என்று இயேசு கிறிஸ்துவிடம் கேட்கப்பட்ட போது, உன் குழந்தை பசித்திருக்க ரொட்டித் துண்டை நாய்களுக்கு கொடுப்பாயோ என்று கேட்ட இயேசு என் உபதேசம் இஸ்ரேலியருக்கே என்று பதில் கூறியதை முதலியார் நினைவு படுத்துகிறார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்.
இயேசுவின் இந்த வாசகத்தை மட்டும் வைத்து பார்த்தால், முதலியார் சொல்வது சரியாகத்தானே இருக்கிறது என்று நியாயப்படி அவருக்கு தோன்றினாலும், அந்த நியாயத்தை எடுத்து சொல்ல முதலியாருக்கு என்ன தகுதி இருக்கிறது. அவரோ பாபத்தில் கிடக்கிறார். தாம் செய்ததை இன்னதென்று அறியாமல் இருக்கிறார். அவர் எப்படி இதை கூறலாம். நான் எப்படி அதை ஏற்கலாம் என்று தோன்றியது. இதனால் வேகமாக எழுந்தார். முதலியார் உங்களுக்கும், எனக்கும் இனி சரிப்படாது நாம இரண்டு பேரும் பேசாமல் இருப்பது தான் மரியாதை என்று கூறிய ஜேம்ஸ் வாத்தியார் குடித்த டீக்கு அவசரமாக காசைக் கொடுத்து விட்டு, இடத்தை காலி செய்தார்.
மாணிக்க முதலியாருக்கு என்னவோ போலாகிவிட்டது. இதே ஜேம்ஸ் வாத்தியார் எத்தனையோ முறை கல்லை வணங்குகிறீர்கள். சாத்தான்களுக்கு திருவிழா நடத்துகிறீர்கள் என்று கூறியதை நாமும் விளையாட்டாகத்தானே எடுத்துக் கொண்டோம். கோபப்படவில்லையே! ஒரு சிறிய வார்த்தை நான் கேட்டதற்கு கோபப்பட்டு விட்டாரே! ஒருவேளை அவர் மனதை மிகவும் நோகடித்து விட்டேனோ? என்று யோசித்தார். ஆனாலும், வாத்தியார் பேசுகிற பேச்சுக்கு அவர் மனசு இரண்டு நாள் கஷ்டப்படட்டும். அப்படி பட்டால் தான் பல்லுக்கு பல்லு, சொல்லுக்கு சொல்லு இருப்பது அவருக்கு புரியும் என்று பிடிவாதம் தலைக்கேற முகத்தை இறுக்கி கொண்டார்.
இருவரின் பேச்சையும் கவனித்த கணேசனுக்கு சிரிப்பு வந்தது. இரண்டு பேருமே வயிற்றில் பசி இல்லாதவர்கள். அடுத்தவேளை சோறு ஆறிப் போகுமே என்று வருத்தப்படுவார்களே தவிர, சோற்றுக்கு என்ன வழி என்று யோசிப்பவர்கள் அல்ல. வேலையில்லாமல் ஊரைச் சுற்றி வந்தால், இப்படி வம்பு வழக்கு தான் தோன்றும். ஊருக்கு இரண்டு இந்த மாதிரி ஜீவன்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சொல் புத்தியும் கிடையாது. சுய புத்தியும் கிடையாது. ஏசுநாதர் சொன்ன மாதிரி, தான் செய்வதை இன்னதென்று அறியாது செய்கிறார்கள். இவர்களை மன்னியும் என்று சொல்ல தான் தோன்றியது. இந்த எண்ணத்தோடு சுவரில் மாட்டப்பட்டிருந்த இயேசு நாதர் காலண்டரை கணேசன் பார்த்தான். பாவம் அவர் மட்டும் இப்போதும் தனியாகத் தொங்கி கொண்டிருந்தார்.