அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். பணிவான வணக்கம். நான் சென்னையைச்சேர்ந்த ஒரு நகைவியாபாரி. பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் செய்து வந்தேன். சில நண்பர்களின் சதியாலும், எனது புத்தியின் தடுமாற்றத்தினாலும் தவறான வழி ஒன்றிற்கு சென்று பெருமளவு பணத்தை இழந்துவிட்டேன். அந்த நேரத்தில் என் கடையில் திருட்டும் போய்விட்டது. மிக உயர்ந்த நிலையிலிருந்து, பாதாளத்திற்கு வந்துவிட்டேன். மனைவி, மக்களோடு தற்கொலை செய்து கொள்வது தான் ஒரே வழி என்று இருந்த போது உங்களை பற்றி கேள்விப்பட்டு உங்களிடம் வந்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பு, உங்களை தரிசித்த என்னை கண்டிப்பாக மறந்து போயிருப்பீர்கள். எத்தனையோ மனிதர்கள் மத்தியில் என்னை மட்டும் தனியாக எப்படி நினைவில் வைத்தீருப்பீர்கள். ஆனால் நான் உங்களை மறக்கவில்லை. மறக்கவும் என்னால் முடியாது. மறந்தால் நான் மனிதனே அல்ல.
கண்ணீரோடு வந்த என்னை பார்த்து நீங்கள் சிரித்தீர்கள். உங்கள் சிரிப்பு என்னை என் குற்றத்தை என்னால் நிகழ்ந்த தவறை சுடுவதுபோல் இருந்தது. கண்ணுக்கு முன்னால் இருக்கின்ற நிலத்தை விட்டு விட்டு இலையைத்தேடி ஓடி இருக்கிறாயே உனக்கு புத்தி இருக்கிறதா? என்று கேட்டீர்கள். நீ செய்த தவறுக்கு நீ மட்டுமே பொறுப்பாளி. உன் மனைவி, மக்கள் அதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும். அவர்களை சாகச்சொல்ல உனக்கென உரிமை இருக்கிறது? என்று கேட்டீர்கள். உனக்கு சாகக்கூட உரிமை கிடையாது காரணம் நீ உனக்கு மட்டும் சொந்தக்காரன் அல்ல. உன் இரண்டு பிள்ளைகளுக்கும் சொந்தக்காரன், காவல்காரன். அவர்களை அனாதையாக விட்டு விட்டு நீ செத்துப்போனால், மேலுலகத்திலும் நீ நிம்மதியாக இருக்க மாட்டாய். பேயாகச்சுற்றுவாய். அடுத்தப்பிறவியில் உடல் முழுவதும் புண் வந்து வேதனைப்படுவாய். இரத்தம் ஒழுக, ஒழுக சாவு வராமல் துடிப்பாய் என்று சாபம் கொடுப்பது போல மிரட்டினீர்கள்.
நிச்சயமாக அந்த மிரட்டுதலுக்கு நான் பயந்தேன். எனக்குள் இருந்த மறுபிறப்பு நம்பிக்கை என்னை யோசிக்க வைத்தது. நீங்கள் கூறியவற்றில் உள்ள உண்மை நிலையை தெளிவாக அறிந்து கொண்டேன். என்னை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதேன். ஆறுதலாக என்னை தொட்டீர்கள். செய்ததை தவறு என்று ஒத்துக்கொள்ள துவங்கி விட்டாலே ஒரு மனிதன் வெற்றியடைய ஆரம்பித்து விடுவான். ஆகவே நீ முதல் வெற்றியை அடைந்துவிட்டாய் இனி கவலை இல்லை நான் சொல்கிறபடி செய். முதலில் உனக்கு தாக்குப்பிடிக்க பொறுமை கிடைக்கும். அதன் பிறகு, கஷ்டங்களிலிருந்து விடுபட வழி கிடைக்கும் என்று அவ்வளவு சீக்கிரம் யாருக்குமே சொல்லாத மந்திரம் ஒன்றை எனக்கு உபதேசம் செய்தீர்கள்.
ஆரம்பத்தில் நான் அதை நம்பவில்லை. ஒரு சிறிய மந்திரமா வாழ்வில் நான் இழந்ததை தந்துவிடப்போகிறது? இவர் எதோ இந்த நேரத்தில் நான் ஆறுதல் அடைவதற்காக தந்திருக்கிறார் என்ற அரை மனதோடு சென்றேன். என் மனைவி தான், ஒரு சுவாமிஜி கொடுத்ததை அவர் சொல்லியபடி செய்து பார்க்காமல் நம்பிக்கை இழப்பது தவறு. மீண்டும் தவறை செய்யாதீர்கள் என்று அறிவுரை சொன்னாள். அவளுக்காகவும் உங்கள் மீது அப்போது இருந்த சிறிய நம்பிக்கைக்காகவும் அந்த மந்திரத்தை உபாசனை செய்ய துவங்கினேன். மூன்று நாட்கள் பிடிவாதமாக ஜெபம் செய்து விட்டேன் நான்காவது நாள் இது செய்ய வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் குறிப்பிட்ட அந்த நேரத்தில் யாரோ என்னை உசுப்பி விடுவது போல எழுந்து மந்திரத்தை ஜெபிக்கலானேன். அதன்பிறகு பித்துப்பிடித்தவனை போல, எப்போதெல்லாம் எனக்கு ஓய்வு வருகிறதோ அப்போதெல்லாம் சொல்லத் துவங்கினேன். குறைந்தபட்சம் ஒரு நாளையில் பத்தாயிரம் முறையாவது மந்திரத்தை சொல்லி இருப்பேன்.
நிச்சயமாக சுவாமிஜி ஒரு மாதத்தில் பெரிய மாற்றத்தை என் மனது கண்டது. என்னால் வெற்றிபெற முடியும். விட்ட தொழிலை திறம்பட செய்ய முடியும். பழையதை விட, பலமடங்கு என்னால் உயரமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. மதுவுக்கு அடிமையானவன் போல, உங்கள் மந்திரத்துக்கு அடிமையாகி மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தேன். நகரத்தார் சமூகத்தில் பிறந்துவிட்டு, தோற்பது என்பது கூடாது என்ற எண்ணத்தில் கடினமாக உழைத்தேன். என் உழைப்பை நேரடியாக பார்த்த என் உறவினரின் நண்பர் ஒருவர் சில லட்ச ரூபாய்கள் எனக்கு குறைந்த வட்டிக்கு தந்தார். ஒன்றுமே இல்லாத இடத்தில் புதியதாக செடி முளைத்தது போல, வசந்தகாலம் என்னை தழுவுவதை அறிந்தேன். ஒருபுறம் மந்திரத்தையும் மறுபுறம் தொழிலையும் இறுகப்பற்றிக்கொண்டேன். சில வெளிநாட்டு வாய்ப்புகள், பல வியாபார தொடர்புகள் என்று வளரத்துவங்கி இன்று பழைய காலத்தை விட அதிகமான செல்வத்தை பெற்றுவிட்டேன்.
செல்வத்தை பெற்ற பிறகு, பெற்ற விதத்தை ரகசியாகமாக பாதுகாக்கவே பலர் விரும்புவார்கள். ஆனால் நான் உங்களை நேசிப்பவன், உங்களின் தாசானுதாசன். நான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறவேண்டுமென்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் அதாவது உங்களை தரிசிக்கும் முன்பு உஜிலாதேவி இணையதளத்தின் சாதாரண வாசகனாகவே இருந்தேன். உங்களை சந்தித்த பிறகு நீங்கள் கொடுத்த மந்திரம் என்னை பெரியளவில் வளர்த்து விட்டது. இதை பலரிடம் சொல்லி நிறையபேர்களை உங்களிடம் அனுப்பி வைத்து அவர்களது பிரச்சனைகளையும், நீங்கள் மிக சுமூகமாக உங்களது அருளால் விலக்கி வைத்திருக்கிறீர்கள். இந்த உஜிலாதேவி இணையதளத்தின் வாசகர்கள் பலர் இருக்கலாம். அவர்களில் என்னை போன்று பொருளாதாரச்சிக்கலில் இருப்பவர்கள் உங்களை போன்ற கலங்கரை விளக்கங்கள் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் நிழலில் அவர்கள் இளைப்பாற வேண்டும் என்பதற்காகவே பகிரங்கமாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
இதை நீங்கள் ஒரு மன நோயாளியின் கிறுக்கல் என்று தயவு செய்து புறம் தள்ளி விடாதீர்கள். பாதிக்கப்பட்டவனின் அபய குரல் இது. இதே போன்ற குரல்கள் உங்களை போன்ற அருளாளர்களின் காதுகளை வந்து தொடவேண்டும். அவர்களுக்கு உங்கள் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன் என்பதை மனதில் வையுங்கள். அதற்காக இந்த கடிதத்தை இணையதளத்தில் வெளியிடுங்கள், பாதிக்கப்பட்டவர்கள் வருத்தப்பட்டு பாவம் சுமப்பவர்கள், உங்களிடம் வரட்டும். இளைப்பாறுதல் பெறட்டும். உங்களது அரசமர நிழலில் அவர்களும் தங்கட்டும். இது இந்த ஏழையின் பிரார்த்தனை.
இப்படிக்கு,
ராமநாதன்,
சென்னை.
இந்த கடிதம் கடந்தமாதம் அதாவது, 14/1௦/2014 அன்று வந்தது. வாசகர் தொலைபேசிலும் மற்றும் அவர்கள் நண்பர்கள் மூலமாக மிகவும் விரும்பி கேட்டுக்கொண்டதனால் வெளியிடப்படுகிறது.