குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு குழந்தை பிறந்து, இரண்டு வருடம் ஆகிறது. என் குழந்தையின் ஜாதகப்படி தகப்பனாருக்கு ஆகாது. இருவரும் ஒரே வீட்டில் இருக்க கூடாது என்று உள்ளூர் ஜோதிடர் கூறுகிறார். தாங்கள் தயவு செய்து அது சரியான கருத்து தானா? என்பதை தெளிவுபடுத்தும்படி பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
மனோஜ் பிரபாகர்,
பெங்களூரு.
உங்கள் ஊர் ஜோதிடர், எதை வைத்து அப்படிச்சொன்னார் என்று எனக்கு தெரியாது. நான் அதை பற்றி விமர்சனம் செய்ய வரவில்லை. ஆனால், ஒரு ஜாதகத்தில் திரிகோண ஸ்தானத்தில் சூரியன் உச்சம் பெற்றால் மற்ற கோண அதிபதிகள் ஆட்சி பெற்று பலம் அடைந்து இருந்தால், சுக்லபட்ச சந்திரனும், குருவும் திரிகோணத்தில் கூட்டு வைத்தால் செவ்வாய், புதன், சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் மறைவு ஸ்தானங்களில் இருந்தால் அந்த ஜாதகரின் தகப்பனார் திரண்ட செல்வத்தின் அதிபதியாகவும், தீர்க்க ஆயுள் கொண்டவராகவும் இருப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுவதை மட்டுமே நான் அறிவேன்.
உங்கள் பிள்ளையின் ஜாதகமும் இப்படியே இருக்கிறது. எனவே, நீங்கள் சம்பாத்தியம் செய்வதற்காக வெளியூர், வெளிநாடு என்று குழந்தையை பிரிந்து செல்லலாமே தவிர மற்றபடி எக்காரணத்தை முன்னிட்டும் பிரியவேண்டிய அவசியம் இல்லை என்பது எனது அனுபவத்தின் உண்மையாகும். இதை உங்கள் மன மாற்றத்திற்காகவும் வெற்று துணிச்சலுக்காகவும் நான் கூறவில்லை என்பதை நன்கு அறிவீர்கள்.