காந்தி :-
வேணாம்டா வேணாம்டா உங்க தேசம்
நானும் போறேன் பரதேசம்
என்னை குண்டால் சுட்டீங்க
உண்மையில் நீங்களே செத்தீங்க
போதை நமக்கு அவமானம்
உவந்து சொன்னேன் வெகுகாலம்
பள்ளிக்கூடம் மூடிவச்சி
கள்ளுக்கடை திறந்துவச்சி
நான் சொன்ன சொல்லை எல்லாம்
விலை பேசி வித்திங்க
வேணாம்டா வேணாம்டா உங்க தேசம்
நானும் போறேன் பரதேசம்
பாரதி:-
தனியொருவனுக்கு உணவில்லை என்றால்
ஜெகத்தை கொளுத்த சொன்னேன்
அண்டி பிழைக்கும் ஆட்டுக்கு கூட
தொண்டு செய்ய சொன்னேன்
காக்கை குருவி கூட்டத்தையும்
உறவு என்று கண்டேன்
உங்கள் உள்ளம் உரைக்க சொன்னேன்
விடிய விடிய கேட்டு நீங்கள்
விடிந்த பிறகு தூங்கினீங்க
தனியொருவன் வாழ்வதற்கு
சமூகத்தை கொளுத்துனீங்க
ஆட்டு கிடா குருவியெல்லாம்
துண்டு போட்டுடீங்க
மீசை வைத்த கோபக்காரன்
சாபம் ஒன்று தாரேன்
அடுத்த வேள சோற்றுக்கு
அமெரிக்காவுக்கு போங்க
அரசியல்வாதி:-
காந்திக்கும் பாரதிக்கும்
தேர்தல்தான் உண்டா?
குடும்பங்கள் இருந்தாலும்
குட்டிகள் உண்டா?
கூடவரும் எடுபிடிக்கு
சோறு போட்டதுண்டா?
பதவி தரும் சுகத்தை தான்
அனுபவிச்சது உண்டா?
சொன்னபடி வாழ்ந்தால்
செல்லுபடியாகுமா?
உள்ளப்படி ஓட்டுகளை
அள்ளித்தர கூடுமா?
போனால போகட்டும் காந்தி
சாபம் தந்தால் தரட்டும் பாரதி
கூடி கும்மி அடிப்போம்
நம் குலம் வளர மதுக்கடை திறப்போம்
மக்கள்:-
ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்
என்று பொறுமை காத்தோம்
பொறுமை காக்கும் எருமை என்று
பெயரும் தாங்கி கொண்டோம்
கடலும் ஒருநாள் பொங்கி வரும்
எம் கரங்கள் எல்லாம் ஒருங்கிணையும்
இரும்பு குதிரையை உடைத்து
பிரம்பு கையில் எடுப்போம்
உங்கள் பதவி வெறியும் பகட்டு பேச்சும்
தெருவில் ஒருநாள் ஓடும்
மூன்று வண்ணமும் உயரும்.