குருஜி அவர்களுக்கு வணக்கம். மணமகனும், மணமகளும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருக்கக்கூடாது என்று சொல்லப்படுவது சரியான முறையாகுமா? இப்படி ஏன் கூறுகிறார்கள்? தயவு செய்து விளக்கம் தரவும்.
இப்படிக்கு,
சாய்ராம்,
புதுக்கோட்டை.
ஒரு உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். சாஸ்திரங்கள் என்று பொதுவாக நாம் கூறினாலும், சாஸ்திரங்கள் என்பது ஒரே ஒரு விஷயத்திற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்ல. கணிதசாஸ்திரம், வானசாஸ்திரம், ஜோதிடசாஸ்திரம், தர்மசாஸ்திரம் என்று பல சாஸ்திரங்கள் இருக்கிறது. இதனால் சாஸ்திரம் என்ற வார்த்தைக்கு பிரிவு, துறை என்ற பெயர்களை பொருளாகக்கொண்டால் தவறில்லை.
இந்த சாஸ்திரங்கள் தலைக்கு ஒன்றாக கருத்துக்களை கூறுகின்றன. ஒரு பொருளை ஒரு சாஸ்திரம் வேண்டும் என்கிறது. வேறொன்று வேண்டாம் என்கிறது. உதாரணத்திற்கு ஒரு மனைவி இருக்கும் போது, இன்னொரு துணைவி கூடாது என்பது தர்மசாஸ்திரம். ஆனால், இவனுக்கு வேறொரு தொடர்பு இருந்தே தீரும் என்பது ஜோதிடசாஸ்திரம். தர்மசாஸ்திரம் தடுத்ததை ஜோதிடம் ஆதரிக்கலாமா என்று கேட்டால், முதலில் உள்ளது ஒழுக்கம். இரண்டாவதாக உள்ளது விதி என்ற பதிலைத்தான் கூறமுடியும்.
திருமணத்தை பொறுத்தவரை பொருத்தம் பார்ப்பது போன்ற விஷயங்களை தர்மசாஸ்திரம் ஏற்றுக்கொள்வது கிடையாது. இருவருக்கும் மனப்பொருத்தம் இருக்கிறதா? இருவரது தாம்பத்தியமும் துரோகம் செய்யாமல், தொடர்ந்து நடைபெறுமா? அப்படி நடத்த முடியும் என்று இருவரும் நம்பினால் திருமணத்திற்கு எந்த தடையும் இல்லை என்று தர்மம் வலியுறுத்துகிறது. ஆனால் ஜோதிடம் இதை ஏற்பதில்லை.
பிரியாமல் ஒற்றுமையாக வாழ்ந்தால் மட்டும் போதுமா? வாழ்க்கையில் உள்ள பல சவால்களை, பங்குபணிகளை நிறைவேற்ற வேண்டாமா? அதற்கு ஜாதகப்பொருத்தம் மிகவும் அவசியம் என்கிறது ஜோதிடம். இரண்டையும் படித்தவர்களுக்கோ தலைச்சுற்றி குழப்பம் வருகிறதே தவிர தெளிவு வருவது இல்லை.
இதேப்போல ஜோதிட விஷயங்களை பற்றியும் பல நம்பிக்கைகள் இருந்து வருகிறது. ஒரு ஏரியாவில் உள்ள நம்பிக்கை, இன்னொரு ஏரியாவில் இருப்பது இல்லை. அதனால் இந்த ஒரே நட்சத்திரம் பற்றிய விஷயத்திற்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு சிலர் மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்கு காரணம் பல. அவர்கள் கூறினாலும் இரண்டு விஷயம் முக்கியமானது.
ஒரே நட்சத்திரம் எனும் போது, இருவருக்கும் ஒரே ராசியே இருக்கும். இதனால் ஜாதகப்படி துன்பம் வந்தால், இரண்டுபேருக்கும் வரும். இன்பம் வந்தாலும், இரண்டுபேருக்கும் என்று நீக்கு போக்கு இல்லாமல் அமைந்து விடும். அடுத்ததாக தசவிகித பொருத்தம் என்ற திருமண பொருத்தங்களில், ரட்சி பொருத்தம் வராது. இதனால் மாங்கல்ய வளம் குறையும் என்றும் நினைக்கிறார்கள். இதனால் தான் ஏக நட்சத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்கிறார்கள்.
என்னைப்பொறுத்தவரை இது சரியான கருத்து என்று கூற முடியவில்லை. காரணம், திருமணப்பொருத்தங்கள் இவைகளால் மட்டும் அமைந்து விடுவதில்லை, அமைக்கவும் கூடாது. ஆயுள், ஆரோக்கியம், குழந்தைப்பேறு, தாம்பத்தியம் என்று பல விஷயங்களையும் கவனித்தே பொருத்தம் பார்க்க வேண்டும். நட்சத்திரங்களுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்பது என் சொந்த கருத்து.