குருஜி அவர்களுக்கு வணக்கம். உடம்பு முடியாத காலத்தில் குளிக்காமல் பூஜை செய்கிறேன். அப்படி செய்வது சரியா? அல்லது அன்று பூஜையை நிறுத்திவிட வேண்டுமா?
இப்படிக்கு,
சுவாமிநாதன்,
நெதர்லாந்து.
உடம்பு நன்றாக இருந்தாலும், தினசரி பூஜை செய்யாத எத்தனையோ மனிதர்கள் இருக்கும் இந்த காலத்தில் உடம்புக்கு முடியவில்லை என்றாலும் பூஜை செய்கிறீர்களே அதை முதலில் பாராட்ட வேண்டும்.
கடவுள் உடல் சுத்தத்தை பார்ப்பது இல்லை. மனது சுத்தமாக இருக்கிறதா என்று தான் பார்ப்பார். உடல் சுத்தத்தை அவர் கவனிப்பவராக இருந்திருந்தால் கண்ணப்பனுக்கு அருள்பாலித்து இருப்பாரா?
ஆனாலும் உடல் சுத்திகரிப்பை சாஸ்திரங்கள் வலியுறுத்துவது எதற்காக என்றால் குளித்து முடித்த பிறகு மனதும், உடம்பும் புத்துணர்ச்சியோடு இருக்கும் அந்த நேரத்தில் இறைவனை துதித்தால் பிரார்த்தனை நிறைவேறும் என்பதற்காகத்தான்.
உடம்பை திடமாக வைத்துக்கொண்டு, குளிக்காமல் பூஜை செய்தால் அது தவறு. முடியாத போது அப்படிச்செய்தால் அது எந்த வகையிலும் தவறாகாது. சாஸ்திரமும் ஒத்துக்கொள்ளும்.