குருஜி அவர்களுக்கு வணக்கம். இந்து மதம் என்பது இந்தியா முழுமைக்கும் உள்ள இந்துக்களின் பொது மதம் தானே? இதில் வடக்கு பக்கம் ஒருவித சடங்கும், தெற்கு பக்கம் வேறுவித சடங்கும் ஒரே காரணத்திற்காக நடத்தபடுவது ஏன்? மிக குறிப்பாக என் கேள்வியை கேட்பது என்றால் நவராத்திரி பண்டிகை என்பது தாய் தெய்வமான பராசக்தியை வழிபடும் நாட்களாகும். இதில் கடைசி நாளில் ராவணனின் உருவ பொம்மையை வடக்கில் எரிக்கிறார்கள். தெற்கில் அப்படி ஒரு சடங்கு அல்லது நடைமுறை இல்லையே? அப்படி என்றால் இந்துமதம் இரண்டு பிரிவானதா? தயவு செய்து விளக்கம் தரவும்.
இப்படிக்கு,
பேராசிரியர் நீலகண்டன்பிள்ளை,
யாழ்ப்பாணம்.
ஹிந்துமதம் இரண்டு பிரிவு உடையதா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். இந்த கேள்வியின் அடிப்படையை ஆராய்ந்தாலே நீங்கள் ஹிந்துவாக இருந்தாலும் கூட ஹிந்துமதத்தை பற்றிய அடிப்படை தெரியாதவர் என்பதை உணர முடிகிறது. ஹிந்து மதத்தில் இரண்டு பிரிவு அல்ல. ஆறு பிரிவு இருக்கிறது கந்தனை, கண்ணனை, கணபதியை, கதிரவனை, காளியை மற்றும் கங்காதரனை தனித்தனி தெய்வமாக அல்லாது ஒட்டுமொத்த பரம்பொருளாகவே வழிபடும் மார்க்கங்கள் ஆறு இங்கு உண்டு. இந்த ஆறு பிரிவையும் ஒன்றாக்கியதனால் தான் ஆதிசங்கரரை ஷன்மத ஸ்தாபகர் என்று அழைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன். இங்கே ஒரு பழக்கம் அங்கே ஒரு பழக்கமென்று எதற்காக பேதங்கள் இருக்கிறது. சடங்கு என்றால், முறை என்றால் எல்லா இடத்திலும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும் நவராத்திரியில் அம்பாளை வழிபடுவதை விட்டு விட்டு இராவணனை கொளுத்துவது ஏன்? அம்பாளுக்கும், அவனுக்கும் என்ன சச்சரவு? அம்பாளை எதிர்த்த எத்தனையோ அரக்கர்களில் ஒருவரை கொளுத்த வேண்டியது தானே என்பது உங்கள் கேள்வியாக புரிந்து கொள்கிறேன்.
நவராத்திரி என்பதே துர்கா தேவி அசுரனை அழித்ததை கொண்டாடும் தினங்களாகும். தேவி என்ற நல்ல சக்தி, அரக்கன் என்ற தீய சக்தியை வெல்லும் என்பதே நவராத்திரியின் அடிப்படை கருத்தாகும். வீரத்தையும், வல்லமையும் தருகின்ற மலைமகள், செல்வத்தை தருகின்ற அலைமகள், அறிவை தருகின்ற கலைமகள் ஆகிய முப்பெரும் தேவிகளையும் மூன்று மூன்று நாட்களில் வழிபட்டு கடைசி பத்தாவது நாளில் அன்னையர் மூவரும் ஒரே வடிவாக இருக்கும் பராசக்தியை, பராசக்தியை தசமி திதி அன்று அரக்கனை அழித்த வெற்றி தேவியாக வழிபடுகிறோம்.
அரக்கர்கள் பலர் இருக்கலாம். ஆனால் அரக்கன் என்ற வார்த்தைக்கு முழு இலக்கணமாக இருப்பவன் இராவணன் மட்டுமே. காரணம் அவனுக்கு பத்து தலை, இந்த பத்து தலை என்பது மனிதனை பிசாசு போல ஆட்டிவைக்கும் பத்து இந்திரியங்களை குறிப்பதாகும். இராவணனை விட்டு விட்டு வேறொரு அரக்கனை குறிப்பிட்டால் அது கெட்ட குணங்களின் ஒன்றை மட்டுமே காட்டுவதாக அமையும். அதை தவிர்க்கவே அனைத்து கெடுதிகளிலும் வடிவாக இருக்கும் இராவணனை கொளுத்துவது போல் விழா அமைந்திருக்கிறது.
இராவணன் போன்ற அசுரர்களின் உருவம், நான் என்ற ஆணவத்தை காட்டுவதாகும். ஆணவம் அழியும் போது ஆத்மா தன்னுடைய நிஜ சொரூபத்தை நேருக்கு நேராக காட்டுகிறது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை பொறாமை, இச்சை போன்ற தீய குணங்களை அழிப்பதாக நம்பபடுகிறது. இரண்டாவது, மூன்றாவது நாட்கள் அன்பு, தயை, தானம் போன்றவற்றை மகாலஷ்மி தருவதாகவும் நம்பிக்கை இருக்கிறது. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவி அறிவை தருவதாக நம்புகிறார்கள். நன்மைகளை பெற்ற பிறகு தீமைகளை எரிப்பது தான் வழக்கம். இதைத்தான் வடக்கில் இராவணன் பொம்மையை எரிப்பதாக காட்டுகிறார்கள்.
தெற்கில் இப்படி அரக்கர் உருவத்தை எரிக்கவில்லை என்றாலும் தசரா பண்டிகை என்று இறுதி நாளில் தீமையே வடிவான சூரனை தேவி வதைத்ததை உருவகப்படுத்தி விழாக்களில் காட்டுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணத்திலும், கர்நாடாக மாநிலம் மைசூரிலும் இந்தவிழா கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் உள்ள சடங்குகள் உருவத்தில் மாறுபட்டதாக தெரியலாமே தவிர, உள்ளே உள்ள சாரத்தில் மாறுபடவில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.