Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடன் சுமை நீக்கும் புரட்டாசி பெளர்ணமி



    “பொன்னுருக காயும் மன்னுருக பெய்யும்” என்று சொல்வார்கள். அதாவது புரட்டாசி மாதத்தில், பகல் நேரத்து வெய்யில் தங்கத்தை உருக செய்துவிடுமாம். அந்தளவு கண்ணாடி போல தகதகவென்று வெயில் சுட்டெரிக்கும். பங்குனி, சித்திரையில் கூட வருகின்ற வெயில் நேரடியாக வெப்பத்தை கொடுத்து நான் மிகவும் மூர்க்கமானவன் என்று தயவு தாட்சண்யம் தன்னை வெளிப்படுத்தி கொள்ளும். புரட்டாசி மாதத்து வெயில் அப்படி அல்ல. வைக்கல் போருக்குள் பதுங்கி இருந்து முயலை பிடிக்கின்ற வேட்டை நாய் போல தன்னை குளிர்ச்சியானவன் என்று காட்டிக்கொண்டே நமது உடம்பில் உள்ள வியர்வையை சொட்ட வைத்து காய வைத்து விடும். இப்படி பகல் நேரத்தில் தகிக்கின்ற வெய்யில் இரவு நேரத்தில் இருந்ததற்கான அடையாளமே தெரியாது. மழை கொட்டும் அதுவும் சாதாரண மழை அல்ல வானத்தின் வயிறாய் கிழித்துக்கொண்டு பாதாளத்தையும் பிளந்துவிடுவேன் என்று ஆக்ரோஷத்தோடு பாயும். பெருமழை இந்த மலையின் வேகத்தில் எந்த நெருப்பிலும் உருகாத மண் தானாக உருகிவிடும். இது தான் இந்த பழமொழியின் நேரடியான பொருள்.

பழமொழி எப்படியோ புரட்டாசி மாதம் என்றாலே ஒருபக்கம் சுகமும் மறுபக்கம் சோகமும் இருக்கிறது. பூஜை நடக்காத வீடுகளில் கூட புரட்டாசி சனிக்கிழமைகளில் பூஜை நடக்கும். விரதம் இருந்து பழக்கம் இல்லாதவன் கூட மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பான். பல வீடுகளில் பெருமாளுக்கு தளிகை போடாமல் வெங்காயம், பூண்டு கூட உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இப்படி தெய்வீகம் ஊர் முழுவதும் தோரணம் கட்டும் இன்னோருபுறம் குளிர்ச்சியும் வெக்கையும் மாறி மாறி இருப்பதனால் நோய்க்கிருமிகள் எல்லாம் இறக்கை கட்டி பறக்க ஆரம்பிக்கும். மலை மாதிரி நடந்தவர்கள் கூட சிலை மாதிரி செயலற்றுப்போவார்கள். தொற்றுநோய்களின் பாதிப்புகளால் இந்த பாதிப்புகள் புரட்டாசி, ஐப்பசி என்று கார்த்திகை வரையிலும் தொடரும். இந்த கிருமிகள் அனைத்தும் நடையை கட்டுவதற்குள் மனிதர்கள் பாடு தகிடுதித்தோம் போட்டுவிடும்.

புரட்டாசியில் பெருமாளை மட்டும் நினைப்பது இல்லை. பெருமாளின் திருவடிகளில் இளைப்பாறுகிற அல்லது பெருமாளின் திருவடி தரிசனம் கிடைக்காதா என்று பித்ரு லோகத்தில் தவம் கிடக்கிற முன்னோர்களையும் நினைக்கிறோம். புரட்டாசி என்றாலே மகாளயபட்சம் வந்துவிடுகிறது அன்றைய அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதற்கும் பித்ருக்களின் ஆசிர்வாதங்களை பெறுவதற்கும் மிக ஏற்ற நாள் என்று நம்மில் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் புரட்டாசி அமாவாசை மட்டுமா சிறப்பு வாய்ந்தது அந்த மாதத்தில் வருகின்ற பெளர்ணமி எந்த சிறப்பும் இல்லாததா? என்று யோசித்தால் அன்றைய அமாவாசையின் சிறப்புக்கு மூலகாரணமாக அமைவதே புரட்டாசி பெளர்ணமி எனலாம்.

புரட்டாசி மாதத்து முழு நிலவு தினமான பெளர்ணமியின் அடுத்த நாள் தான் மகாளயபட்சம் ஆரம்பமாகும் நாளாகும். அமாவாசை என்று தர்ப்பணம் கொடுப்பது போல, பெளர்ணமி அன்று முதல் முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக அமாவாசை வரையிலும் தொடர்ந்து தானங்களை கொடுத்து வந்தால் பித்ரு லோக முன்னோர்களின் தரமும் உயரும் அதை செய்கின்ற நமது வாழ்க்கையும் மேம்படும் என்பது சாஸ்திர நியதியாகும். இந்த காரணங்களினாலே புரட்டாசி பெளர்ணமி தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுமட்டும் அல்ல. அன்னை பார்வதி மகாதேவரான சிவபெருமானை நாயகனாக பெறுவதற்கு இன்றைய பெளர்ணமி தினத்தில் விரதம் இருந்தாளாம். அதனால் தான் அன்று உமா மகேஷ்வர விரதம் என்று ஒன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதத்தை புரட்டாசி பெளர்ணமி அன்று செய்வதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும் என்பது ஒருபுறம் இருந்தாலும், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு இந்த முழுநிலவு தினத்தில் அம்மையப்பனை வழிபட்டால் கண்டிப்பாக கடன் என்ற கடலிலிருந்து கரை சேர்க்கப்படுவார்கள் என்றும் ஐதீகம் உள்ளது. மேலும் காரியதடங்கல்கள் இருந்தாலும் அது கூட இந்த விரதத்தால் நிவர்த்தியாகுமாம். இப்படி சிறப்புகளை கொண்ட புரட்டாசி பெளர்ணமியை பார்த்த நாம் அடுத்து ஐப்பசி பெளர்ணமியை பார்ப்போம்...

Contact Form

Name

Email *

Message *