வணக்கம் ஐயா. உங்கள் கட்டுரைகள் அருமை. எனக்கு நல்ல வாசிக்கும் பக்கங்களாக அமைகின்றன. மிக்க நன்றி ஐயா.
என் கேள்வி. திருமணத்தில் தாலி கட்டுவதின் சிறப்புகள் என்ன? சில தோஷங்கள் இருப்பதால் தாலி கட்டாமலே குடும்பம் நடத்துவது தர்மமா? நல்ல பதிலை அளிப்பீர்களாக.
இப்படிக்கு,
உஜிலாதேவி வாசகி,
Bebe Abdullah.
நேற்று வரை ஒருவருக்கொருவர் அறிமுகமே இல்லாமல் இருந்த ஆணையும், பெண்ணையும் உருவத்தால் இரண்டாக இருந்தாலும், உணர்வுகளால் ஒன்றாக்கி இல்லறம் என்ற நல்லறத்தை நடத்துவதற்கு உலகம் கொடுக்கின்ற அதிகாரச்சின்னமே தாலி.
தாலி என்பது பெண்ணுக்கு போடப்படும் வேலி. அடிமையின் சின்னம் என்று சில பகுத்தறிவுவாதிகள் மேடை போட்டு பேசுவார்கள். தாலி பெண்ணை அடிமைப்படுத்தவில்லை. அவளை இல்லத்தின் அரசியாக உயர்த்துகிறது என்றே சமூகத்தில் உள்ள நடைமுறைகள் நமக்கு காட்டுகிறது.
தாலி என்ற பந்தம் இல்லை என்றால் ஆணும், பெண்ணும் நடத்துகிற இல்லறம் ஒரு ஒப்பந்தமாகிவிடும். எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளலாம். பிறகு வசதிப்பட்டால் இணைத்துக் கொள்ளலாம் என்றாகிவிடும். இன்றைய காலகட்டத்தில் ஆசைவயப்பட்ட மனிதர்கள், இல்லறத்தை இப்படி கேலிப்பொருளாக மாற்றி வருகிறார்கள். என்பதை நான் மறுக்கவில்லை. இருந்தாலும் இன்று கூட சமூக அமைப்பு கட்டுக்குலையாமல் இருக்கிறது என்றால் அது தாலியின் மீதுள்ள மதிப்பும், மரியாதையுமே ஆகும்.
இந்தியாவுக்கு பல வகையிலும் வெளிநாட்டிலிருந்து வருமானம் வருகிறது. அந்த வருமானத்தில் நூற்றுக்கு அறுபது சதவிகிதம் அயல்நாட்டில் பாடுபடும் மனிதர்கள் தன் குடும்பத்தாருக்கு அனுப்பும் பணமே ஆகும். இந்தியாவில் உள்ள குடும்ப முறை நாட்டின் அந்நிய செலவாணியை காப்பதற்கு உதவுகிறது என்றால், இந்த குடும்ப முறையை ஆழ்ந்து, அகன்று சிந்தித்து உருவாக்கிய மேதைகளின் அறிவாற்றல் எத்தகையது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
தாலி அணிகிற பழக்கம் அனைத்து மதங்களிலும், அனைத்து சமூக குழுக்களிலும், சிறிய மாறுபாடுகளுடன் இருந்தாலும் பொதுவாக இருந்து வருகிறது மஞ்சள் கயிறு, கறுகுமணி, தங்கச்சங்கிலி மட்டும் தாலி அடையாளம் அல்ல. விரலில் மாற்றிக்கொள்ளும் மோதிரம் கூட, தாலியின் இன்னொரு வடிவமே.
இந்த ஆணும், இந்த பெண்ணும் முறைப்படி தாலி கட்டி வாழ்ந்தால் கெடுதி ஏற்படும். எனவே தாலி கட்டாமல் குடும்பம் நடத்தினால் தோஷம் நீங்கும் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. சிலர் அவர்களாக உருவாக்கிய பழக்கங்களினால் அப்படி இருக்கலாமே தவிர அதற்காக சாஸ்திரத்தின் பெயரை கூறி அதை அவமானப்படுத்தக்கூடாது. தாலி கட்டாமல் குடும்பம் நடக்கிறது என்றால் அதை எந்த மதமும் குடும்பமாக ஏற்றுக்கொள்ளாது. அப்படி வாழ்பவர்கள் என்னை பொறுத்தவரை நாங்கள் தம்பதியினர் என்று பகிரங்கமாக அறிவிக்க தைரியம் இல்லாதவர்கள் என்றே சொல்வேன்.