குருஜி அவர்களுக்கு வணக்கம். எனது தந்தையாருக்கு நாங்கள் ஐந்து பிள்ளைகள். நான்கு ஆண்கள், ஒரு பெண். எனது தங்கைக்கு நிறைய நகை மற்றும் சீர்வரிசை செய்து திருமணம் செய்து வைத்துவிட்டோம். அவள் இப்போது நன்றாக இருக்கிறாள். எனது சகோதரர்களுக்கும் திருமணம் முடிந்து அவரவர் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். நான் சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறேன். எனக்கு சிறிது கடனும் இருக்கிறது. என் வியாபாரத்தை விரிவாகச்செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. இதனால் என் தந்தையாரிடம் பணம் கேட்டேன். அவர் தர மறுக்கிறார். அதே நேரம், என் தம்பிமார்களுக்கு தாரளமாக உதவி செய்கிறார். இதனால் மிகவும் வருத்தத்துடன் சொத்துக்களை பிரித்து தருமாறும் கேட்டு விட்டேன். அதற்கும் அவர் மறுக்கிறார் இதனால் அவருக்கும் எனக்கும் மனக்கசப்பு வளர்ந்து வருகிறது. அவர் எனக்கு பணம் தருவாரா? எங்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா? என்பதை தயவு செய்து கணித்துக்கூறி வழிகாட்ட வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ராஜகோபாலன்,
சென்னை.
சூரியனும் - சனியும் லக்கினத்திலிருந்து எந்த வீட்டில் இருந்தாலும் அவர்கள் இணைந்து அமர்ந்திருந்தால், அந்த ஜாதகத்தை சனீஸ்வர யோக ஜாதகம் என்று அழைப்பார்கள். இப்படி ஜாதகம் அமைந்தவர்களுக்கு தந்தையின் மேல் பாசம் இருக்காது. சிறிய வயது முதற்கொண்டே ஏதாவது ஒரு காரணத்திற்காக தந்தையை பகைத்துக்கொள்ள வழி ஏற்படும் இது நாளுக்கு நாள் அதிகரித்து கடைசியில் தீராத பகையாக மாறிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும் இந்த ஜாதக அமைப்பிற்கு அரசாங்கத்தின் மீதோ அரசு அதிகாரிகள் மீதோ பகை ஏற்பட்டு தொல்லைகள் உண்டாகக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இதற்காக நீதி மன்றம் செல்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம். ஆண்வாரிசு தாமதமாக பிறக்கும். அப்படி பிறந்தாலும் அந்த வாரிசால் இவருக்கு எந்த பயனும் இருக்காது. பிள்ளை சோறு போடமாட்டான். சூரியனும்,சனியும் சேர்க்கை பெறுவதனால் கண்களில் அடிக்கடி நோய் வந்து அறுபது வயதிற்கு மேல் கண்பார்வை முற்றிலுமாக இல்லாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு.
எனவே வரக்கூடிய இத்தகைய துயரங்களில் இருந்து விடுபடுவதற்கு இருக்கும் ஒரே வழி, சரியான பரிகாரம் தந்தை தவறே செய்தாலும் அவர் மீது கோபம் இல்லாமல் அவரோடு சண்டை இல்லாமல் அமைதியாக இருப்பது நல்லது. பெற்றவர்களின் பாசத்தை பெற்றால் தான் நம்மால் வளர முடியும். சாபத்தை பெற்றால் நிச்சயம் சிக்கல்களே ஏற்படும். தந்தையிடம் விட்டுக்கொடுத்து போவதனால் மானம் போய்விடப்போவதில்லை. சரிக்கு சமமாக வாதாடாமல் அமைதியாக இருங்கள். அவரும் மனிதர் தானே அவர் மனமும் மாறும். நிச்சயம் உங்களை பாசத்தோடு தேடும் அந்த காலம் விரைவில் வர நாராயணன் அருள்செய்வான்.