அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். உங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். சிலர் கடவுள் பாவமன்னிப்பு தருவார், தவறுகளை செய்துவிட்டு மன்னிப்புக்கேட்டால் போதும். அவர் எப்போதுமே நம்மை மன்னிக்கத்தயாராக இருக்கிறார் என்று கூறுகிறார்களே இது சரியா? சரியான விளக்கத்தை தருமாறு அன்போடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
திருமதி ரேவதி,
கனடா.
தவறு செய்தால் தண்டனை தருவதும், நல்லது செய்தால் சன்மானம் தருவதும் ஒரு நீதிபதி அல்லது அரசனின் வேலையாகும். கடவுள் நீதிபதியும் அல்ல, அரசனும் அல்ல. அவர்களுக்கும் மேலே இருக்கும் அற்புதமான அன்பு சக்தி. அவருடைய பார்வையில் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் தென்படுவார்களே தவிர, யாரையும் அவர் வித்தியாசப்படுத்தி பார்க்க மாட்டார். நம் வீட்டில் ஒரு பசுவை வளர்க்கிறோம். இன்னொரு பூனையும் வளர்க்கிறோம். பசு பாலை தருகிறது, பூனை பாலை திருடுகிறது, திருடுகிறது என்ற காரணத்தினால் பூனையை வெறுத்தா ஒதுக்கி விடுகிறோம். தீமை செய்பவனும் கடவுளின் பார்வையில் பூனையை போன்றவன் தான். இனி பாவ மன்னிப்பு எனப்படுவது என்ன? அதன் உண்மை எப்படிப்பட்டது? என்பதை ஆராய்வோம்.
பாவம், புண்ணியம் ஆகிய இரண்டுமே கர்மபலன் என்ற வட்டத்திற்குள் வந்துவிடுகிறது. இதில் ஒன்று நல்லது மற்றொன்று கெட்டது, நல்லதை செய்பவன் நன்மையை அடைகிறான், கெட்டதை செய்பவன் கேடு அடைகிறான். இது இயற்கையின் அமைப்பு இதை மாற்றுவதோ, மறைப்பதோ நம்மால் இயலாத காரியம். தீயச்செயலை, நல்லசெயலாக மாற்றி கொள்ளலாம். அப்படி மாற்றிக்கொண்ட பிறகு தீமையே செய்து பழக்கப்பட்டவன் வெகுவிரைவில் நல்லவனாக மாறிவிடுகிறான். இதை நன்றாக கவனிக்கவும். தீமை தானாக மாறுவது இல்லை. தொடர்ந்து நன்மை செய்வதனால் மாறுகிறது. இனி இதன் அடுத்த கட்டத்தை ஆராய்வோம்
சில ஞானிகள் இருக்கிறார்கள், அவர்கள் இறைவனின் அருளை பரிபூரணமாக பெற்றவர்கள். அப்படிப்பட்ட தெய்விக மாந்தர்களில் சிலர், சில பாவிகளை மன்னித்து புனிதர்களாக ஆக்குகிறார்கள் இது ஒரு அதிசயச்செயல். இதை தான் உலகம் பாவ மன்னிப்பு என்று சொல்கிறது. இப்படி ஞானிகள் கூட யாரோ ஒரு சிலரை தான் மன்னிக்கிறார்களே தவிர, கண்ணில் பட்ட அனைவரையும் மன்னிப்பது இல்லை. மன்னிக்கவும் அவர்களால் முடியாது. பாவம் என்பது தலையில் சுமக்கும் சுமை அல்ல. உடம்பிற்குள் வளருகிற புற்றாகும். சுமையை மாற்றி கொடுக்கலாம். நோயை மாற்றி கொடுக்க இயலாது. அதிர்ஷ்டவசமாக குணமானால் உண்டு. அதாவது ஞானியாலும் கூட அனைவரையும் மன்னிக்க முடியாது என்று சொல்ல வருகிறேன்.
இனி உலகத்தில் உள்ள பாவங்களை எல்லாம் ஒருவர் ஏற்றுக்கொண்டார் இன்னும் செய்யப்படுகின்ற பாவங்கள் அனைத்திற்கும் அவர் இரத்தம் சிந்த தயாராக இருக்கிறார், அவரை நம்புகிற அனைவருக்கும் பாவ மன்னிப்பு என்பது சிறப்பு சலுகையாக கிடைக்கிறது என்பது பொருளற்ற விளம்பரமாகும். தான் வாழுகின்ற கீழ்த்தரமான வாழ்க்கையை முற்றிலுமாக கைவிட்டு விட்டு மேலான வாழ்க்கையை அடைவதற்கு எவன் பாடுபடுகிறானோ அவனது முயற்சியை பாவ மன்னிப்பு என்று சொல்லலாம். உண்மையை சொல்லப்போனால் நான் செய்த பாவத்திற்கு இறைவன் என்னை மன்னிக்க வேண்டியது இல்லை. என் மனசாட்சி என்னை மன்னிக்க வேண்டும். நீ செய்தது குற்றம் உன்னால விளைந்தது தீமை. அதற்கான பிராயச்சித்தத்தை தேடு என்று என் மனம் சொன்னால் அதை நான் ஏற்றால் அதன் பெயர் தான் பாவ மன்னிப்பு. அதனால் தான் கண்ணன் கீதையில் சொன்னான் உனக்கு நீயே எதிரி! உனக்கு நீயே நண்பன்!! என்று.