குருஜி அவர்களுக்கு வணக்கம். பொதுவாக மனிதர்களின் வயதிற்கு மரியாதை கொடுக்க வேண்டுமா? இல்லை திறமைக்கு கொடுக்க வேண்டுமா? அல்லது பதவிக்கு மட்டும் தான் மரியாதை தர வேண்டுமா? விளக்கம் தரவும்.
இப்படிக்கு,
அக்பர் அலி,
மும்பை.
பதவிக்கு மரியாதை கொடுக்கலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் பதவியில் இருப்பவர்கள் அந்த பதவியின் தரமறிந்து நடப்பவர்களாக இருக்க வேண்டும். இன்றையச்சூழலில் நிறையப்பேர் அப்படி இல்லை. எனவே பதவிக்கு மட்டும் மரியாதை கொடுத்தால் நமது மரியாதை தான் கெட்டுப்போகும்.
வயதுக்கு கூட கொடுக்கலாம், கொடுக்க வேண்டும். ஆனால் வயதானவர்கள் அனைவருமே மதிக்கத்தக்க வகையில் நடக்கிறார்களா? நிச்சயம் இல்லை என்றே பதில் வருகிறது. அறுபது வயதிலும், இருபது வயது குசும்பு சில பெரியவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு மரியாதை கொடுத்து விட்டு அதன்பிறகு வருத்தப்பட வேண்டிய நிலையும் நமக்கு வந்திருக்கிறது.
சரி எல்லாம் போகட்டும். திறமைக்காவது மரியாதை கொடுக்கலாம் என்றால், அங்கேயும் சிக்கல் இருக்கிறது. பெரிய கவிஞர்கள், கலைஞர்கள், மேதாவிகள் என்று பலரை சொல்கிறார்கள். அவர்களது வாழ்க்கையின் பல பக்கங்கள் சகிக்க முடியாத நாற்றம் வீசுவதாக இருக்கிறது. இதனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் யாருக்கும் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அனைவரின் மீதும் அன்பு செலுத்தினால் போதுமென்று நினைக்கிறேன். ஒருவர் மீது அன்பு வந்தபிறகு அவர் எந்த தவறு செய்தாலும் அது நமக்கு பொருட்டாக தெரியாது. எனவே அன்பு செலுத்துவது தான் சிறந்த வழி.