குருஜி அவர்களுக்கு வணக்கம். என் மகனுக்கு மூன்று வயது நடக்கிறது. இதுவரை அவன் பேசப்பழகவில்லை. நான் கூப்பிட்டாலும் வேகமாக திரும்பி பார்ப்பது கிடையாது. மிக அதிகமான சத்தம் இருக்கும் இடத்தில் கூட அமைதியாக இருக்கிறான். டாக்டர்கள் அவனை பரிசோதனை செய்து விட்டு அவனுடைய குறையை தெளிவாக கூறிவிட்டார்கள். பிறவியிலேயே குறைபாடு வந்துவிட்டதனால் அதை தீர்ப்பது கடினம் என்றும் கூறுகிறார்கள். ஒரு தாயின் மனநிலையை நினைத்து பாருங்கள். என் மகனின் பரிதாப நிலை என்னை என்ன பாடுபடுத்தும் என்று உங்களுக்கு தெரியும். அவனுக்காக நான் உயிரை கூட கொடுக்க தயாராக இருக்கிறேன். என் மகனின் நல்வாழ்விற்கு வழிகாட்டுங்கள். உங்கள் பாதங்களை நமஸ்காரம் செய்து கேட்கிறேன்.
இப்படிக்கு,
கீதா இதயசந்தர்,
அமெரிக்கா.
ஊனமாக பிறப்பவர்களை விட, ஊனம் உடையவர்களை பெற்றவர்கள் பாடு பெரும்பாடு. கல்யாணம், கச்சேரி என்று எதாவது நல்ல விசேஷங்களுக்கு போனாலும் உன் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே ஐயோ பாவம் என்பார்கள் சிலர். இவர் பிள்ளை ஊனம், என் பிள்ளையை இவள் தொட்டால் கூட அதுவும் இப்படி ஆகிவிடும் என்று ஒதுங்கி போவோர் சிலர். வேறு சிலரோ இவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு இப்படியொரு பிள்ளை கண்டிப்பாக தேவை என்று நமது துக்கத்தை கத்தியால் கீறி இரத்தத்தை ரசிப்பார்கள். வண்டி இழுக்கும் மாட்டுக்காக பரிந்து பேசுகின்ற இரக்கமுள்ள மனித சமூகம் மனிதர்கள் சாவதை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு போகும். இது தான் இயற்கை.
அடுத்தவன் சிரிக்கிறானே அவனது கேலி பேச்சு நம்மை கொல்லுகிறதே என்பதற்காக பெற்ற குழந்தையை கிணற்றில் வீசியா எறிந்துவிட முடியும். அப்படி வீசுவது தான் தாயின் பண்பு என்றால், இன்று நான் உங்களுக்கு ஆறுதல் கூறுகின்ற இடத்தில் இருக்க மாட்டேன். உங்களது துயரம் எனது தாயின் துயரமாகவே நான் பார்க்கிறேன். ஆனாலும் இறைவன் கொடுத்த தீர்ப்பை தலைகுனிந்து நாம் ஏற்க வேண்டும் என்பது விதி. கடவுள் நம்மீது கோபம் கொண்டு, இந்த சாபத்தை தரவில்லை. நாம் எப்போதோ செய்த பாவத்தின் சம்பளமாக இதை பெற்றிருக்கிறோம் என்று நினைத்து மனதை தேற்றிக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை.
கை-கால் நன்றாக இருப்பவன், கண்ணு தெரிந்து காது கேட்பவன் மட்டும் தான் வாழமுடியும் அவனால் தான் நன்மை என்று யாரும் நினைக்க முடியாது. காரணம் நல்ல அங்கங்களை பெற்ற பலர் மதுக்கடைகளிலும் தவறான கூடங்களிலும் பொழுதை போக்கி சமூகத்தையும், குடும்பத்தையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நன்றாக இருந்து யாருக்கு லாபம்? கால் இல்லாதவன் பத்துபேருக்கு சோறு போடுகிறான். நடக்க தெரிந்தவனோ தெருவில் பிச்சை எடுக்கிறான். இப்படிப்பட்ட காட்சியையும் தினசரி பார்க்கிறோம்.
ஜாதகத்தில் இரண்டாம் இடத்து அதிபதியும், சுக்கிரனும், புதனும் சேர்ந்து மறைவு ஸ்தானத்தில் இருந்துவிட்டால் அந்த ஜாதகர் ஊமையாக இருப்பார் என்பது ஜோதிட விதி. சொல்வதற்கு கடினமாக இருந்தாலும், உங்கள் மகனின் ஜாதகம் அப்படித்தான் இருக்கிறது. அதற்காக என்னை மன்னியுங்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் தன்னம்பிக்கையோடு வளர்வதற்கு ஆயிரம் கல்விமுறைகள் இருந்தாலும், தாய்-தகப்பன் கொடுக்கும் பற்றுப்பாசமே அவர்களை திறமைசாலிகளாக வளரச்செய்யும். எனவே துயரத்தை தூக்கி ஓடையில் வீசிவிட்டு மகனை வளர்ப்பதற்கு சாதனை பெண்ணாக எழுந்திருங்கள். இறைவனான நாராயணன் உங்களுக்கு அருள் செய்வார்.