கண்ணாடியை பார்க்கிறேன்
கன்னம் முழுவதும்
கறுப்பாய் தெரிந்த தாடி முடிகள்
வெளுத்து நுரையாகி
வெண்மையாய் வடிகிறது
துடித்து நின்ற
மீசை கூட
படிந்து கிடக்கிறது
கிழக்கே பார்க்கும்
அந்தி நிழலாய்
முடியும் காலத்தை
முட்டி முட்டி பார்க்கிறது
வெள்ளை புருவங்கள்
ஆகா
காலம் என்னை
அபகரித்து விட்டது
யானையின் தந்தத்தால்
செத்துக்கிய சீப்பும்
சந்தன மரத்தால்
கட்டிய கட்டிலும்
தங்கமுலாம் பூசி
வடித்த செருப்பும்
இரும்பு பெட்டியில்
உறங்கி கொண்டிருக்கிறது
யார் வந்து தட்டிச்செல்வார்களோ என்று
உறங்காமல் பயந்து துடிக்கிறேன்
ஆகா
ஆசை என் வீரத்தை அபகரித்துவிட்டது
துரியோதனன் சபையில்
தர்மத்தை விற்க சென்று
விற்காத பொருள்களை
கடைகட்டி கிளம்பிய
விதுரன் என்ற ஞானி சொன்னான்
பொறாமை தர்மத்தை அபகரித்துவிடும்.
கோபம்
செல்வத்தை அபகரித்து விடும்.
காமம்
வெட்கத்தை அபகரித்து விடும்.
கர்வம்
நல்லவைகள் அனைத்தையும்
அபகரித்து விடும்.
அபகரிக்கும்
நெருப்பு துண்டங்கள் அனைத்தையும்
விழுங்கி தின்றுவிட்டு
தண்ணீர் குடித்து கொப்பளிக்க பார்க்கிறேன்
காலம் என்ற கோழி
முள்ளான அலகெடுத்து
கொத்தி கொத்தி
என்னை அபகரிக்க பார்க்கிறது.