குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். எனக்கு தற்போது நாற்பது வயது நடக்கிறது. திருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. என் மனைவியும், நானும் பூரணமான மருத்துவ பரிசோதனை செய்துவிட்டோம். உடலில் எந்த குறையும் இல்லை. ஆனாலும் என்ன காரணத்தினாலோ குழந்தைப்பேறு தள்ளிப்போகிறது. தாங்கள் குழந்தை பெறுவதற்கு என்ன வழி என்று தயவு செய்து எடுத்து காட்டுங்கள்.
இப்படிக்கு,
கமல்சந்த் ஜெயின்,
காஞ்சிபுரம்.
இந்துமதம் மற்றும் கிறிஸ்தவ மதங்களில் சன்யாச வாழ்க்கை வாழ்வது என்பது மிகவும் சுலபம். மிக கடினமான நெறிமுறைகள் இம்மதங்களில் சன்யாசிகளுக்கென்று இருந்தாலும், அவைகளை கடைபிடிப்பது போல பாவனை செய்து கொண்டு கடைபிடிக்காமல் வாழ்பவர்கள் தான் அதிகம். புத்தமதத்தை பற்றி கேட்கவே வேண்டாம். மொட்டை அடித்து, ஆரஞ்சு வண்ண ஆடை அணிந்து, கையில் விசிறி மட்டை வைத்துக்கொண்டாலே பிக்கு என்று ஏற்றுக்கொள்பவர்கள் அதிகம் உண்டு.
நான் இப்படி சொல்வதனால் இந்த மதங்களில் உள்ள சன்யாசமுறையை குறைகூறுவதாக யாரும் நினைக்க வேண்டாம். ஒழுக்கம், நெறிமுறைகள் என்பவைகளை எல்லாம் இந்த மதங்கள் உள்ளுக்குள் மறைமுகமாக அந்தர்முக பயிற்சியில் வைத்திருக்கிறதே தவிர வெளியில் தெரியும் வண்ணம் பெரியதாக எதுவும் வைக்கவில்லை என்று சொல்கிறேன். ஆனால் இந்த மதங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது, கடினமானது ஜெயின் மத துறவு வாழ்க்கை என்பது.
ஜைன துறவிகள் சமைத்து உண்ணக்கூடாது. ஒரே ஊரில் மூன்று நாட்களுக்கு மேல் தங்க கூடாது. மிக கண்டிப்பாக பிச்சை எடுத்தே சாப்பிட வேண்டும். அதுவும் இருட்டி விட்டால் உணவின் மீது கை வைக்கவே கூடாது. இவற்றை எல்லாம் விட தனது தலைமுடியை தன் கைகளாலே பிடுங்கிக்கொள்ள வேண்டும் இது மிகவும் வேதனைக்குரிய நிகழ்வு என்பதாலே பல வேடதாரிகள் இந்த துறவு வாழ்க்கையை விரும்புவதில்லை. ஜைன துறவிகள் இன்றுவரை சுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கு இத்தகைய கடினமான பயிற்சிகள் வெளிப்படையாக இருப்பதே காரணம் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு சுத்தமான வாழ்க்கை வாழும் துறவிகளை கேலி கிண்டல் செய்வது பெரிய பாவம். அதுவும் ஜைன மதத்தை சேர்ந்த ஒருவனே அதை செய்வது மகாபாவம். இந்த ஜாதகரின் ஜாதகத்தில் சூரியன், கேதுவும் ஒரே ராசியில் இணைந்திருக்கிறது. இவர்கள் மிக கண்டிப்பாக சன்யாசிகள், சாதுக்கள் இவர்களின் சாபங்களை பெற்றவர்களாகவே இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு புத்திரதோஷம் தவிர்க்க முடியாததாகும். எந்த வைத்தியம் செய்தாலும், சாப நிவர்த்தி செய்யாமல் புண்ணியம் இல்லை. எனவே உங்கள் மத சம்பிரதாயப்படி சன்யாச பாவநிவர்த்தி செய்யுங்கள். ஏழைகளுக்கு தொண்டு புரியுங்கள் கண்டிப்பாக குழந்தை பிறக்கும்.