குருஜி அவர்களுக்கு வணக்கம். என் கணவரின் தங்கை மிகவும் நல்லவர். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கிறாள். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். மாமியார் தொல்லை, நாத்தனார் தொல்லை, என்று எதுவும் கிடையாது. நேற்று வரை அமைதியாக சென்ற அவரது குடும்பம் இப்போது பரிதவிப்பில் இருக்கிறது. காரணம் என் நாத்தனார் பித்து பிடித்தவர் போல் ஒரே இடத்தில் அமைதியாக இருக்கிறார். வீட்டு வேலை எதுவும் செய்வதில்லை, குழந்தைகளை கவனிப்பதில்லை. எதோ அந்நியர்களை பார்ப்பது போல் எல்லோரையும் பார்க்கிறார். வைத்தியர் மனநோய் என்கிறார். மந்திரவாதி பேய் பிடித்திருக்கிறது என்கிறார். பேய்க்கும் பார், நோய்க்கும் பார் என்பது போல எல்லாவற்றையும் பார்க்கிறோம். கடந்த ஒன்பது மாதங்களாக எங்கள் குடும்பத்தில் அமைதியும் சந்தோசமும் பறிபோய் விட்டது என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். ஐயா அவர்கள் நல்ல வழிகாட்டுமாறு பணிவோடு வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
லதா விஜயகுமார்,
கோபிச்செட்டிபாளையம்.
மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடித்தாளோ
அரளிப்பூ தண்டாலே
அரளிப்பூ தண்டாலே
என்ற தாலாட்டுப்பாட்டை கேட்காத யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பாடலில் தாயானவள் தனது உறவை மென்மையானவர்கள் என்றும், கணவன் உறவினரை வன்மையானவர்கள் என்றும், பாடுவதும் நினைப்பதும் குழந்தை பிராயத்திலேயே மக்கள் மத்தியில் வளர்க்க முற்படுவதும் மறைமுகமாக இருப்பதை காணலாம். இது தான் இயல்பான, இயற்கையான பெண்களின் பண்பு.
அந்த வரிசையில் கணவரின் சகோதரியை மிகவும் நல்லவர். என்று நீங்கள் கூறுவதை பார்க்கும் போது மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. அதே நேரம் அந்த பெண்ணை பற்றி நீங்கள் தருகின்ற தகவல் மிகவும் வேதனை தருகிறது. பெற்ற பிள்ளைகளை கூட அந்நியமாக பார்க்க கூடிய நோயை கொடுத்த இறைவனை வசைவு மொழிகளால் பேசலாமோ என்று தோன்றுகிறது.
இருந்தாலும் காரணம் இல்லாமல், இறைவன் யாரையும் கஷ்டப்படுத்துவது கிடையாது. சில காரணங்கள் கண்ணுக்கு தெரியும். பல தெரியாது அதை அறிந்தவன் இறைவன் மட்டுமே. உங்கள் நாத்தனாரின் துயரத்திற்கான காரணமும் கண்ணுக்கு தெரியாத, முன் ஜென்மத்தின் பாவ தொடர்ச்சி என்றே ஜாதகம் சொல்கிறது.
சந்திரன் மிகவும் பாதிப்படைந்ததனால் அவருக்கு மனநோய் வந்திருப்பது ஒரு வகையில் என்றால், அந்த நோயிற்கான வெளிக்காரணம் பக்கத்து வீட்டில் இருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். அங்கே உள்ள ஒரு பெண் இவருக்கு எதோ ஒரு வகையில் மன நெருக்கடியை கொடுத்திருக்க வேண்டும் அதன் விளைவாகவே இந்த பரிதாப நிலையை இவர் அடைந்திருக்க வேண்டும் எனவே முதலில் வாழும் வீட்டை மாற்றுங்கள். அனைவரும் அவரிடம் அன்போடு நடந்து கொள்ளுங்கள்.
தற்போது துலாம் ராசியில் இருக்கும் சனி, விருச்சிகத்திற்கு சென்றவுடன் இவரது மனநோய் முற்றிலும் நீங்கி விடும். உங்கள் ஊரில் உள்ள பாட்டையப்பன் என்ற சிறுதெய்வ ஆலயத்திற்கு சென்று அபிஷேக ஆராதனை செய்து வழிபடுங்கள். நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.