அன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, நான் பிறந்த வீடு தீப்பற்றி எரிந்தது. அதன் பிறகு எனது தந்தையார் மிகவும் கஷ்டப்பட்டு கல்வீடு கட்டினார். அந்த வீட்டில் மூன்று முறை நான் தனியாக இருந்த போது மின்சார கசிவு ஏற்பட்டு நெருப்பு பிடித்துக்கொண்டது என் திருமணத்தன்று சாஸ்திரிகள் வளர்த்த யாககுண்ட நெருப்பு என் வேஷ்டியில் பிடித்தது. இப்போது நான் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறேன் இங்கும் அவ்வப்போது சிறிய அளவில் தீ விபத்து ஏற்படுகிறது. இது எதேச்சையாக நடக்கிறதா? அல்லது எனது விதிப்படி நடக்கிறதா? என்பது எனக்கு புரியவில்லை தயவு செய்து விளக்கம் தருமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
விஸ்வநாத ஐயர்,
சென்னை.
உங்கள் ஜாதகத்தை நன்றாக பாருங்கள். நீங்கள் யாரிடம் கொண்டு ஜாதகத்தை நீட்டினாலும், உங்களால் சொந்த ஊரில் வாழ முடியாது. பிறந்த இடத்தை விட்டு விட்டு அந்நிய இடத்தில் தான் ஜீவிதம் நடத்த முடியும். கூடியமானவரை குடும்பத்தாரை அடிக்கடி பிரிந்திருக்க வேண்டிய நிலை வரும் என்றுதான் கூறுவார்கள்.
அவர்கள் இவைகளை மட்டும் கூறிவிட்டு வேறு சில விஷயங்களை கூறாமல் மறுத்துவிடுவார்கள். அதில் மிகவும் முக்கியமானது திருடர்களால் பயம். இதுவரை நீங்கள் சிறிய பொருளிலிருந்து, பெரிய பொருள் வரை பலவற்றை களவு கொடுத்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் திருட்டு மூலம் பொருள் நஷ்டம் ஏற்படாத வருடமே இல்லை என்று சொல்லலாம். ஆரோக்கியவான் போல் உடல் தெளிவாக தெரிந்தாலும் உள்ளுக்குள் பல வியாதிகள் இருக்கிறது அவற்றை மறைத்துக்கொண்டு நடமாடுகிறீர்கள்.
இதற்கு காரணம் உங்கள் லக்கினத்தில் உள்ள ராகு. நல்லவேளை நீங்கள் மேஷ லக்கினத்தில் பிறக்கவில்லை அப்படி பிறந்திருந்தால் உடல் ஊனம் உள்ளவராக இருந்திருப்பீர்கள் அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். எப்படியோ ராகு உங்கள் லக்கினத்தில் அமர்ந்து விட்டதனால் இந்த நெருப்பு கண்டம் உங்களை துரத்திக்கொண்டே வருகிறது. திருக்குறளை படிக்க வைக்கும் தீப நெருப்பு உங்களை பொறுத்தவரை வீட்டு கூரையை எரிப்பதாக இருக்கும். எனவே அந்த விஷயத்தில் நீங்கள் அசட்டையாக இருக்க கூடாது. வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இதற்கு பரிகாரம் உண்டா? என்று நீங்கள் கேட்கலாம். இது உங்கள் ஜாதகப்படி விதி. அதை மாற்ற முடியாது. கண்டிப்பாக நடந்து கொண்டே இருக்கும் வேண்டுமானால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்று சொல்லலாமே தவிர மற்றபடி தவிர்ப்பது மிகவும் கஷ்டம். விதியை அனுபவித்து தான் கழிக்க வேண்டும்.