குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். என் மகளுக்கு பதிமூன்று வயதாகிறது. எவ்வளவு தான் உணவு உண்டாலும் அவளுக்கு போதும் என்று தோன்றுவதில்லை. இந்த வயதிலேயே மிக அதிகமான உடல் எடையோடு இருக்கிறாள். பீமனை போல் அவள் சாப்பிடுவதை பார்க்கும் போது பயமாகவும் இருக்கிறது, எரிச்சலாகவும் வருகிறது. படிப்பிலும் கவனம் இல்லை. வேலை செய்வதிலும் சோம்பேறித்தனம். எது சொன்னாலும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறாள். அவளுடைய இந்த உணவுப்பழக்கத்தை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. தயவு செய்து எனக்கு வழிகாட்டுங்கள். மருத்துவர்களிடம் சென்றால் மருந்து, மாத்திரை என்று கொடுத்து குழந்தையை நோயாளியாக்கி விடுவார்கள்.
இப்படிக்கு,
ஜானகி இளவரசன்,
குவைத்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் இயக்கத்தில் உருவான ஒரு பழைய திரைப்படத்தில் காட்சி ஒன்று வரும், படத்தின் பெயர் மறந்து விட்டேன். ஒரு சிறிய பையன் தெருவில் வீசி எறிந்த கட்டை பீடிகளை பொறுக்கி எடுத்து வைத்து புகைப்பான். அதை பார்த்த கதாநாயகன் பீடி பிடிக்கிறாயா? பிடி நன்றாக பிடி. உன்னால உன்னை சுற்றி உள்ள கொடியவர்களை சுட்டுப்பொசுக்க முடியவில்லை. உன்னை பிடித்துள்ள வறுமையை பொசுக்க இயலவில்லை. அதனால் உன்னையே நீ பொசுக்கி கொள்கிறாய். பீடியின் நெருப்பால் சுட்டுக்கொள்கிறாய் என்று கூறுவார். உங்கள் குழந்தை அதிகமாக உண்பதை பார்த்தும் அதைத்தான் என்னால் கூற முடிகிறது.
நாகரீகம், சிக்கனம், சின்ன குடும்பமே சீரான வாழ்வு என்ற போலியான தத்துவ மரபுக்கு உட்பட்டு இந்திய குடும்பங்களே மனநோய் மருத்துவமனைகளாக மாறி விட்டது. முன்பு இரண்டு குழந்தைகள் போதும் என்றார்கள். இப்போது ஒரு குழந்தையே ஒளிமையம் என்று முடிவு செய்து ஒன்றே ஒன்றை மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள் இதன் விளைவு என்ன? ஓடி ஆடி சகோதரர்களோடு போட்டி போட்டு சண்டை போட்டு செழிப்பாக வளர வேண்டிய குழந்தை பேசுவதற்கு கூட யாரும் இல்லாமல் நான்கு சுவற்றிற்குள் அடைபட்ட வண்ணம் வளர்கிறார்கள்.
குழந்தையின் எதிர்காலத்திற்காக அப்பாவும், அம்மாவும் சம்பாதிக்க வெளியே போய்விடுகிறார்கள். குழந்தையின் நிகழ்காலத்தை எப்படி எதிர்கொள்வது? என்று தெரியாமல் வீட்டுக்குள் தவிக்கிறது. களைத்து வரும் பெற்றோர்களிடம் பிரியத்தை காண முடியாமல் மோதலையும், முணுமுணுப்பையும் காணுகிற குழந்தைகள் தங்களுக்குள்ளேயே கூனிக்குறுகி போய் விடுகிறார்கள்.
உங்கள் குழந்தை பெண் குழந்தை என்பதனால் மற்ற நண்பர்களோடு சேர்ந்து இன்னும் தீய பழக்கத்தில் ஈடுபட இன்னும் முனைப்பு காட்டவில்லை. அதனால் தான் தனது எதிர்ப்பையும், உணர்ச்சி கொந்தளிப்பையும் எப்படி ஜீரணிப்பது என்று தெரியாமல், உணவை மென்று வயிற்றுக்குள் தள்ளுகிறாள். இது உடல் நோய் அல்ல, உடனடியாக கவனிக்க வேண்டிய மனநோய். இதற்கு மருந்து குழந்தைக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு கொடுக்க வேண்டும். நீங்களே சிகிச்சை பெறவேண்டும்
உங்கள் ஜாதகப்படி கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாமல் சண்டை போடுவது தெளிவாக தெரிகிறது. உங்கள் படுக்கைஅறை தகராறை குழந்தையும் தெரிந்து கொள்ளும் விதத்தில் நடத்துவதனால் ஒருவருக்கொருவர் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி குழந்தையை கவனிக்காமல் போனதனால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கிறது. இது இப்படியே சென்றால் அவள் போதை வேறு விதமான உறவு என்று பாதை மாறுவாள். எனவே உடனடியாக இருவரில் ஒருவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு குழந்தையை வீட்டிலிருந்து கவனியுங்கள்.
குழந்தைக்காகத்தான் பணம் சம்பாதிப்பது. குழந்தையே இல்லை என்ற நிலை வரும் போது அந்த பணத்தால் என்ன செய்ய இயலும்? நீங்கள் சேமிக்கும் வெள்ளி காசுகளால் தாகத்தை கூட தணிக்க முடியாது என்பதை நன்றாக மனதில் வையுங்கள். குழந்தையின் மீது எரிச்சல் படுவதை விட்டு விட்டு பரிவு காட்ட துவங்குங்கள். பரந்தாமன் உங்களை வாழ வைப்பான்.