அன்புள்ளம் கொண்ட வாசகர்கள் அனைவருக்கும், வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
இணையதள உலகில் சஞ்சரிக்க துவங்கிய இத்தனை காலத்திலும் இவ்வளவு நெடிய இடைவெளியை எழுதுவதற்காக எடுத்ததில்லை. ஒருநாள், இரண்டு நாள் கூடிப்போனால் ஐந்து நாட்களுக்கு மேல் எழுதாமல் இருந்ததில்லை.
உடல்நலம் கெட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட காலத்தில் கூட இரண்டுநாளில் எழுத துவங்கியவன் நான். பிறகு எப்படி இந்த இடைவெளி ஏற்பட்டது என்று நீங்கள் கேட்கலாம். உடல் நலக்குறைவா? வேலைப்பளுவா? சந்தர்ப சூழ்நிலை சாதகம் இல்லாமல் போய்விட்டதா? என்று நூறு கேள்விகள் உங்களுக்கு பிறக்கும். இந்த நிலையில் அனைத்திற்கும் ஆம் என்ற பதிலை கூறினால் கூட அதில் தவறு இருக்காது என்பது எனது எண்ணம்.
குளிர்காலம் போய் வெயில்காலம் வந்துவிட்டாலும் அடிக்கடி பூஜை, யாகம் என்று புகையோடு சம்மந்தம் இருப்பதனால் மூச்சு பிரச்சனை தீராத ஒரு தொல்லை. திருமண தடைகளுக்காக பரிகார பூஜையை நடத்துவது உள்ளிட்ட நமது ஆஸ்ரமத்தின் கட்டிடப்பணிகளை கவனிப்பது வரையில் வேலையில் சுமை. இத்தனைக்கும் மேலாக கட்டிடப்பணியின் போது அறுந்துவிட்ட இன்டர்நெட் தொடர்பை சரிசெய்வதற்கு கால தாமதம் இவ்வளவு தான் எழுதுவதற்கு ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் என்று கூறினாலும் இதுதவிர வேறு சில பிரச்சனைகளும் உண்டு.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல, உறவின் பெருமை பிரிவில் தெரியும் என்பது போல தொடர்ந்து எழுதி கொண்டிருந்த போது காணமுடியாத அன்பையும், பரிவையும் எழுதாத போது வாசகர்களிடம் இருந்து பெற்ற சுகம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பேரின்ப உணர்ச்சி எனலாம். கன்னியாகுமரி சுரேஷ் துவங்கி, கனடா பிரபாகரன் வரை ஏகப்பட்ட அன்பர்கள் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு விசாரித்ததை வாழ்வில் சந்தித்த மிக நெகிழ்ச்சியான காலகட்டம் எனலாம். நிறைய கடிதங்கள் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள், இத்தனையையும் பார்க்கும் போது நம்மை சுற்றிலும் இத்தனை அன்பு நெஞ்சங்களா? என்று வியப்பு வருகிறது. என்னையும் அறியாமல் இறைவனிடம் கைகூப்பி நன்றி கூறுகிற பணிவு வருகிறது. இவர்கள் அனைவரையும் காலம் முழுவதும் இழக்கவே கூடாது என்ற எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது.
இறைவனின் திருவருளால் இனி ஒரு காலத்தில் இப்படி ஒரு நீண்ட பிரிவு ஏற்படாது என்று நம்புகிறேன் ஏற்படக்கூடாது என்றும் பிரார்த்தனை செய்கிறேன். நிச்சயம் பாற்கடலில் துயிலும் பரந்தாமன், பக்தர்களின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்பான் கைகொடுத்து காப்பான் என்ற நம்பிக்கையோடு பயணத்தை துவங்குகிறேன்....