குருஜி அவர்களுக்கு வணக்கம். என் வயது ஐம்பது. இதுவரை என்னால் ஒரே தொழிலையும் செய்ய முடியவில்லை. ஒரே இடத்திலும் வேலை செய்யவும் இயலவில்லை. பத்து பதினைந்து தொழிலாவது செய்து இருப்பேன். ஏழெட்டு வேலையாவது பார்த்திருப்பேன். எதிலும் என்னால் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. பல்லைக்கடித்து கொண்டு நான் இருந்தாலும், ஏதாவது ஒரு வகையில் மாற வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். இதனால் எனது பொருளாதாரம் மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இருந்து மாற ஏதாவது வழிவகை இருந்தால் சொல்லுங்கள். எனக்கு நல்லகாலம் பிறக்கட்டும்.
இப்படிக்கு,
மகாலிங்க தேவன்,
உதகமண்டலம்.
சூரியனோடு, லக்கினத்திற்கு பத்தாம்இடத்து அதிபதி இணைந்தால் அந்த ஜாதகர் நிரந்தரமாக எந்த தொழிலையும் செய்ய முடியாமலும், உத்தியோகத்தை பார்க்க முடியாமலும் அவதிப்படுவார். உங்கள் ஜாதகம் அந்த வகையில் அமைந்திருப்பதனால் தான் பந்தாட்ட மைதானத்தில் பந்து உதைபடுவது போல வாழ்க்கை முழுவதும் உதைபட்டு கொண்டே இருக்கிறீர்கள்.
ஒரு தொழிலை செய்தவனுக்கு அதில் மட்டும் தான் அனுபவம் ஏற்படும். பல தொழிலை செய்தவன் ஒவ்வொன்றிலும் அனுபவசாலி ஆகிவிடுகிறான். அதனால் எங்கு சென்றாலும், எந்த சூழலிலும் இவர்கள் பிழைத்துக்கொள்ளலாம். இது ஒருவகை ஆறுதலே தவிர, நிரந்தரமாக தொழில் செய்ய முடியாத ஆதங்கம் இருக்கிறதே அது மிகப்பெரிய கொடுமை. “நித்திய கண்டம் பூரண ஆயுசு” என்ற கதையில் குடும்பம் நடத்துவதே மகா சிரமமாகி விடும்.
இருந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. திக்கற்றவனுக்கு தெய்வம் துணை என்பது போல, உங்களுக்கு நமது முன்னோர்கள் பல பரிகார முறைகளை சொல்லி சென்றிருக்கிறார்கள். அதை செய்தால் கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும்.
மாதத்தில் முதல் சனிக்கிழமை நவக்கிரஹ சன்னதிக்கு சென்று, மூன்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் வழிபட்டால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். மேலும் அடிக்கடி குலதேவதை கோவிலுக்கு சென்று வணங்கி வரவேண்டும். குலதேவதைக்கு ஏதாவது குறைகள் இருந்தாலும் அதை என்னவென்று ஆராய்ந்து பிரார்த்தனை செலுத்த வேண்டும். இவைகளை முறைப்படி செய்தால் நிலைத்த உத்தியோகமும், நிலைத்த தொழிலும் அமையும்.