குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். எனது ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருக்கிறது ஆறாவது வீட்டில் ராகுவும், பனிரெண்டாம் வீட்டில் கேதுவும் இவை இரண்டிற்குள்ளும் மற்ற கிரகங்களும் அமைந்துள்ளது. இது மிக மோசமான நிலை என்று பலரும் சொல்கிறார்கள் அவர்கள் கூறுவது உண்மையா? எனது வாழ்க்கை முழுக்க முழுக்க சோகமயமானது தானா? தயவு செய்து ஒளிவு மறைவு இல்லாமல் விளக்கம் தாருங்கள்.
இப்படிக்கு,
நகுலசேகரன்,
யாழ்ப்பாணம்.
காலசர்ப்ப தோஷம் என்றவுடன் பலரும் அஞ்சி நடுங்குகிறார்கள். என்னைக்கேட்டால் அப்படி நடுங்க வேண்டிய அவசியம் இல்லை என்றே சொல்வேன். லக்னத்தில் ராகு அல்லது கேதுவோ ஏழாம் இடத்தில் இவை இரண்டில் ஏதாவது இருந்தால் அதை மட்டும் தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி ராகு-கேது அமைந்திருக்கும் இடங்களை வைத்தும் காலசர்ப்ப தோஷத்தின் பலன்கள் அறியப்படுகிறது. அதன்படி சில காலசர்ப்ப தோஷம் நல்ல பலனை கூட தரவல்லதாக இருக்கிறது.
இங்கே இவரின் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் ராகு, பனிரெண்டாம் இடத்தில் கேது என்று அமைந்திருந்தாலும் அல்லது இதுவே தலைகீழாக மாறி ராகு இருக்கும் இடத்தில் கேதுவோ, கேது இருக்கும் இடத்தில் ராகுவோ அமைந்தாலும் கூட பெரிய மாறுபாடு வந்துவிடப்போவதில்லை.
இவருக்கு உள்ள கிரகப்படி, இளமையில் சிரமமான வாழ்க்கை. உணவுக்கு கூட போராடவேண்டிய நிலை. குடும்பச்சூழலில் பல சிக்கல்கள் இருக்கும். அத்தோடு மிக கண்டிப்பாக சிறை செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படும். அப்படி சிறைக்கு சென்று வந்த பிறகு, வாழ்க்கையை திருப்பி போட்டது போல மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு கோடீஸ்வரர் நிலையை அடைவார்.
அதனால் இந்த ஜாதகர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளிநாடு செல்லலாம். அங்கு விசாவில் ஏற்படும் சிறிய குளறுபடியால் சிறைக்கு செல்லவேண்டிய நிலை வரும். மிக சுலபமாக வழக்கு முடிந்துவிடும். ஆரம்பத்தில் நல்ல வேலையும், அதன்பிறகு சொந்த தொழிலும் செய்து மிகவும் முன்னேற்ற நிலையை அடைவார்.