Store
  Store
  Store
  Store
  Store
  Store

கல்வீசி தாக்கும் மந்திர சாத்தான்கள்


மாந்திரீகம்   - 3

    துப்பாக்கி குண்டு ஒரு மனிதனின் நெஞ்சை துளைக்கிறது அவனை குண்டடிப்பட்டு இறந்தவன் என்கிறோம். சாப்பாட்டு கடையில் மேஜைகளை சுத்தம் செய்பவனுக்கு பரிசுச்சீட்டில் பல லட்சம் கிடைக்கிறது அவனை அதிர்ஷ்டத்தால் பணக்காரன் ஆனவன் என்கிறோம். இப்படி நமது கண்ணுக்கு தெரிகின்ற நிகழ்வுகளுக்கான காரணங்களை மிக துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனிதனுக்கு வருகின்ற சவால்கள் கண்ணுக்கு தெரிந்ததாக மட்டுமல்ல. தெரியாததாகவும் வருகிறது. அப்படி வந்ததில் நல்லது இருந்தால் அது கடவுள் தந்தது என்கிறோம் கெட்டது இருந்தால் சாத்தானால் கொடுக்கப்பட்டது என்கிறோம். சாத்தான் கொடுத்த கொடைகளை மனிதன் வரிசைப்படுத்தி பேசுகிற போது பில்லி, சூன்யம் செய்து என்னை கெடுத்துவிட்டான். என் குடும்பத்தை அழித்து விட்டான் என்று புலம்புகிறவர்கள் ஏராளம்/ பில்லி, சூன்யம், ஏவல் என்ற மூன்று வார்த்தைகள் தீய மந்திரங்களால் ஏற்படும் பாதிப்பு என்று சொல்லி விடலாம். ஆனால் இந்த மூன்று வார்த்தைகளுக்கும் தனித்தனியான அர்த்தங்கள் பலருக்கு தெரிவதில்லை. அதில் முதலாவதாக வரும் பில்லி என்ற வார்த்தையின் பொருளே புரியவில்லை இதை எளிமையாக விளக்க முடியுமா?

எனக்கு தெரிந்த ஒரு மனிதர் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் பல கோடிகளை சம்பாதித்தவர். இன்றும் சம்பாதித்து வருபவர் உலக நாடுகளில் அவர் கால்படாத நாடுகள் மிகவும் குறைவு. ஒருநாள் தொலைபேசியில் அழைக்கும் போது நார்வேயில் இருந்து பேசுகிறேன் என்பார். அடுத்தநாளோ தென்னாப்பிரிக்காவில் இருப்பதாக கூறுவார் இப்படி ஒவ்வொரு நாளும் தொழில் நிமித்தமாக ஓடிக்கொண்டே இருப்பது தான் அவரது வேலை.

இவர் ஒருநாள் தனது குடும்பத்தாரோடு திருச்செந்தூர் சென்று முருகப்பெருமனை தரிசனம் செய்து வரும்போது மதுரைக்கு அருகில் இவர் பயணம் செய்த வாகனம் பழுதாகி விட்டது. அதை நிறுத்தி சரி செய்ய சொல்லிவிட்டு சாலை ஓரம் இருந்த ஒரு கல்லின் மீது சாய்ந்து நின்று ஓய்வு எடுத்திருக்கிறார் அப்போது எங்கிருந்தோ இருட்டுக்குள் இருந்து வந்த எலி ஒன்று இவர் கால் கட்டை விரலை சிறிது கடித்து விட்டு ஓடிவிட்டது எலி கடித்ததற்காக உடனடியாக தடுப்பூசி போட்டும் விட்டார்.

ஆனால் பதினைந்து நாளில் உடம்பு முழுவதும் தடிப்பு தடிப்பாக வந்து ரத்தம் கட்டி மிகவும் அவதிபட்டார். சென்னையில் உள்ள மிக பிரபலமான மருத்துவமனையில் மாதக்கணக்காக சிகிச்சை எடுத்தார். நாளுக்கு நாள் வியாதி அதிகரித்ததே தவிர குறையவில்லை இப்படி சித்திரவதைப்பட்டு வாழ்வதை விட தற்கொலை செய்து கொண்டால் நல்லது என்ற முடிவை பல நேரம் எடுத்து, எதோ ஒரு காரணத்தால் தள்ளி போட்டுக்கொண்டே வந்து விட்டார்.

ஒருநாள் மருத்துவரிடம் இந்த நோய்க்கு உலகத்தில் இருக்கிற மிக அதிகபட்சமான சிகிச்சை எது? அது எந்த நாட்டில் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார் அதற்கு அந்த மனசாட்சி உள்ள மருத்துவர் தலைக்கு மேல் மாட்டி இருந்த வெங்கடாஜலபதி படத்தை காட்டி அவர் தான் ஒரே மருத்துவர் என்று சொல்லி இருக்கிறார். இந்த நண்பர் வெறுப்பின் உச்சகட்டத்திற்கே போய்விட்டார். அதன்பிறகு எனது நினைவு வந்து என்னிடம் தொலைபேசியில் விஷயத்தை சொன்னார். நான் அவருக்கு இருப்பது நோய் அல்ல, நோய் போல இருக்கின்ற தீய மந்திர பாதிப்பு என்பதை அறிந்து அதற்கான நிவாரணம் செய்து இன்று நன்றாக இருக்கிறார்.

இவருக்கு எலி வடிவத்தில் வந்து கடித்ததே அந்த மந்திர சக்தியின் பெயர் தான் பில்லி என்பது. அதாவது பில்லி என்ற வடமொழி சொல்லுக்கு பூனை என்ற ஒரு பொருளும் உண்டு. விலங்குகளின் மீது தீய மந்திரங்களை பிரயோகம் செய்து அதை வைத்து எதிரிகளை தாக்க செய்வதே பில்லி என்ற வார்த்தையின் செயல்முறை விளக்கமாகும். இதே போன்று மந்திரங்களை பயன்படுத்தி இதனால் தான் கேடு வந்தது என்பதை எதிராளிகள் உணர்ந்து கொள்ளாமலே அவதிபடுத்துகிற பல மந்திரவாதிகள் அன்றும் இருந்தார்கள் இன்றும் இருக்கிறார்கள்.

பில்லி என்ற ஒரு வார்த்தைக்கான பொருளே இவ்வளவு பயங்கரமான நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருக்கிற போது சூன்யம் என்ற வார்த்தைக்கு இதை விட கொடிய பொருள் இருக்கும் அல்லவா? அதையும் கூறுங்கள்.

உழைக்காமல், வேலை செய்ய நினைக்காமல் ஊரை சுற்றிக்கொண்டு வம்புகளை வாங்கி கொண்டு, தான்தோன்றித்தனமாக அலைகின்ற விடலைகளை பார்த்து கழுதை கெட்டால் குட்டிச்சுவரு என்று சொல்வார்கள் கிராமங்களில். கழுதைகள் தங்கி இருக்கும் பகுதிகளை பார்த்தாலே அவைகள் ஒருகாலத்தில் வாழ்ந்து பிறகு வாழ முடியாமல் குட்டிச்சுவராக விட்டு விட்டு போன வீடுகளாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட வீடுகளில் வாழ்ந்தவர்களின் கதையை சற்று அலசி பார்த்தாலே இனம்புரியாத பல புதிர்கள் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்று அவர்களுக்கு நிறைய எதிரிகள் இருக்க வேண்டும். அல்லது இவர்கள் அதிகமான எதிரிகளை சம்பாதித்து அவர்களுக்கு தீராத தொல்லைகளை கொடுத்திருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு தான் சூன்யம் என்பது அதிகமாக வைக்கப்பட்டிருக்கும். சூன்யம் என்றால் ஒன்றுமே இல்லாதது, எல்லாமே அழிந்து போனது, வெறும் பூஜ்யம் என்றும் எல்லோருக்கும் தெரியும். சூன்யம் வைக்கப்பட்ட பகுதியும் இருந்த சுவடுகள் கூட தெரியாமல் அழிந்து போகும்.

சூன்யத்தால் தாக்கப்பட்ட நபர்களும், எவ்வளவு முயற்சி செய்தாலும் மேன்மைக்கு வரமுடியாமல் படிப்படியாக காற்றில் கரைந்து போகும் கற்பூரம் போல கரைந்து போவார்கள். இதற்கு உதாரணமாக நிறையபேருடைய வாழ்க்கையை என்னால் காட்ட முடியும். பெருந்துறைக்கு அருகில் ஊத்துக்குளி என்ற ஊர் இருப்பது நிறையபேருக்கு தெரியும். அந்த ஊரில் மழையும் அரிது, பச்சைப்புல்லும் அரிது. திருப்பூரின் சாயப்பட்டறை தண்ணீர் நிலத்தடியில் புகுந்து குடிக்கும் நீர் கூட கெட்டுப்போய் விட்டது. அப்படிப்பட்ட அந்த ஊரில் நிறைய பசுமாடுகள் இருக்கின்றன தமிழ்நாட்டிலே வெண்ணை உற்பத்தியில் ஊத்துக்குளிதான் முன்னணியில் இருக்கிறது.

அந்த ஊரில், ஒருகாலத்தில் செல்வாக்கு மிக்க குடும்பமாக இருந்த ஒருவர் என்னை காணவந்தார். பரம்பரையாக விவசாயம் தான் அவர்களின் தொழில். பலநூறு ஏக்கர்கள் அவருக்கு இருந்திருக்கிறது. வீடுநிறைய பசுமாடும், வேலையாட்களும் நிறைந்திருப்பார்களாம். உறவினர்களின் வருகை, நண்பர்களின் முற்றுகை என்று தினசரி தீபாவளி போலவே அவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்குமாம். இவருடைய அப்பா பண்ணையார்களுக்கே உடைய ஜபர்தஸ் உடையவராம். வெற்றிலை பாக்கில் கூட வாசனை பொருட்களை சேர்த்துக்கொள்ளும் அவர் ஒழுக்கத்தில் மட்டும் நாற்றம் அடிக்கும் படி நடந்து கொள்வாராம்.

மது, மாது, சூது என்று கும்மாளமாக அவரது தினசரி வாழ்க்கை ஓடுமாம். ஒரு பெண்ணை அடைவது என்று தீர்மானித்து விட்டால், எந்த வகையிலாவது அதை நிறைவேற்றாமல் இருக்க மாட்டாராம். அப்படி ஒரு பெண்ணை தவறான முறையில் இவர் அணுகிய போது அவள் மறுத்திருக்கிறாள் இவர் விடவில்லை அவளும் விட்டு கொடுக்காமல் போராடி இருக்கிறார். கடைசியில் இவரது தொல்லை தாங்க முடியாமல் அந்த பெண்ணின் தகப்பனார் இவருக்கு சூன்யம் வைத்து விட்டாராம். அந்த ஆள் மந்திர, தந்திரங்களில் கைதேர்ந்த நபராம். என் பெண்ணை வாழ முடியாமல் தொல்லை கொடுத்த நீயும், உன் குடும்பமும் இருந்த இடம் தெரியாமல் மண்ணாக போகும்பார். அதை உன் கண்ணால் கண்டபிறகே சாவாய் என்று சாபம் வேறு கொடுத்தாராம்.

அந்த சம்பவம் நடந்த ஆறு மாதத்தில் இவர் தந்தை காலில் ஆணி குத்தி நடக்க முடியாமல் படுத்து விட்டார். அதன்பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை. கால்புண் பெருசாகி, காலையும் வெட்டி எடுத்துவிட்டார்களாம். படிப்படியாக சொத்து சுகங்களை கவனிக்க முடியாமல் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். குத்தகைக்கு எடுத்தவர்கள் யாரும் நிலத்தை திருப்பி தரவில்லையாம். ஏறக்குறைய பத்து வருடத்தில் நிலம் வீடு, கையிருப்பு எல்லாமே கரைந்து போய் நடுத்தெருவிற்கு வந்து விட்டார்களாம். இவர் தந்தையார் அதன் பிறகு தான் காலமானாராம். ஆனாலும் அந்த சூன்யத்தின் தாக்கம் இவரையும் விடாமல் துரத்தி கொண்டிருந்தது. முறைப்படியான பரிகாரங்களுக்கு பிறகு இன்று ஓரளவு தெளிவான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார். சூன்யம் என்பதன் தாக்கம் இந்தஅளவு மட்டுமல்ல இதைவிடவும் அதிகமாக இருக்கும்.

தப்பு செய்தவர்களை சூன்யம் வைத்து தண்டிப்பது முறையற்ற செயல் என்றாலும் அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தவறே செய்யாதவர்களை நாமாக எதிரிகளாக கற்பித்துக்கொண்டு சிறிய சிறிய குற்றங்களுக்காக அவர்களது குடும்பங்களையே கருவறுக்க நினைத்து சூன்யம் வைப்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அடுத்தவர் சொத்தை அபகரிப்பதற்காக, அடுத்தவர் உறவை கெடுப்பதற்காக, தொழிலை பொசுக்குவதற்காக சூன்யம் வைக்கின்ற கயவர்கள் நிறையப்பேர் உண்டு. மருமகளை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சொந்த மகனுக்கே சூன்யம் வைக்கும் பெண்மணிகளை நான் பார்த்திருக்கிறேன்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். கொலை செய்வதை விட, மகாபாவம் ஒருவருக்கு சூன்யம் வைப்பது. இன்று ஒருவரை அழிப்பதற்காக நாம் சூன்யம் வைக்கலாம். அதில் வெற்றியும் பெறலாம் இந்த சந்தோசமும், வெற்றியும் நிரந்தரமானது அல்ல. காலம் ஒருநாள் மாறி நாம் வைத்த சூன்யமே நம்மை திருப்பி தாக்கும் அன்று வேரும் வேரடி மண்ணும் அடையாளத்திற்கு கூட இல்லாமல் நாம் அழிந்து போவோம். இதை மனதில் வைத்தால் கனவில் கூட மற்றவர்களை அழிப்பதற்கு நினைக்க மாட்டோம்.

ஏவல் என்பது என்ன?

துஷ்ட தேவதைகளையும், துஷ்ட ஆவிகளையும் ஒரு குடும்பத்தின் மீது அல்லது ஒரு தனிமனிதர் மீது ஏவி விடுவதே ஏவல் எனப்படும். பொதுவாக நாம் சொல்கின்ற வேலையை செய்பவர்களை ஏவலாள் என்று அழைப்பது வழக்கம். அதாவது இந்த ஏவலாள் ஏன்? எதற்கு என்ற கேள்வியே கேட்கக்கூடாது. சொன்ன வேலையை கண்ணை மூடிக்கொண்டு செய்ய வேண்டும்.

ஏவலில் மந்திரத்தால் ஏவப்படும் துஷ்டசக்திகளும், தன்னை அனுப்பும் மந்திரவாதியிடம் கேள்விகள் கேட்பது இல்லை. அவன் கொடுத்த சிறிய பலி பொருளுக்காக எதிராளியை இரக்கமே இல்லாமல் கொடுமைப்படுத்தும். இனம் புரியாத நோய்களை தருவது, விபத்துகளை ஏற்படுத்துவது, மரணங்களை உண்டாக்குவது, பெண்களை, குழந்தைகளை மனநிலை பாதிப்படையச்செய்வது, சொத்து சுகங்களை இழக்க வைத்து ஓட்டாண்டி ஆக்குவது என்று கஷ்டங்களில் என்னென்ன வகை உண்டோ அத்தனையையும் ஏவல் தரும்.

இந்த ஏவல் சம்மந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் நேரடியாக சந்தித்த அனுபவங்கள் ஏதாவது இருக்கிறதா?

இப்போது பத்து வருடங்களுக்கு முன்பு குற்றாலத்தில் உள்ள ஒரு ஆன்மீக நிறுவனம் ஒன்றிலிருந்து தலைமை துறவி ஒருவர் எனது தொலைபேசி நம்பரை கண்டுபிடித்து என்னோடு பேசினார். அவருக்கு வேண்டப்பட்ட நண்பர் ஒருவருக்கு யாரோ ஒருவர் ஏவல் செய்துவிட்டார்களாம். அதனால் அவர் துன்பப்படுகிறார் உங்களிடம் அவரை அனுப்பி வைக்கிறேன். உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று சொன்னார். சரி வரச்சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கூறினேன் சரியாக ஒருவாரம் கழித்து அந்த துறவி சொன்ன நண்பர் வந்து என்னை பார்த்தார்.

ஐயா எனக்கு ஒரே மகள் அவளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். புகுந்த வீட்டுக்கு சென்ற அவள் அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவள் போல ஆகிவிட்டாள். வீட்டுக்கு அழைத்து வந்து வைத்தியம் செய்து வந்தோம். அப்போது ஒருவர், ஒருவேளை உங்கள் மகளுக்கு காத்து கருப்பு சேட்டையால் இப்படி இருக்கலாம் எனக்கு தெரிந்த ஒரு மந்திரவாதி இருக்கிறார் அவரிடம் கூட்டிப்போகிறேன் வருகிறீர்களா என்று கேட்டார். எந்த வகையிலாவது என் மகள் குணமடைய வேண்டும் என்ற வெறியில் இருந்த நான் மகளை அழைத்து கொண்டு அந்த மந்திராவாதியிடம் சென்றேன்

அவரும் அவளை பார்த்துவிட்டு ஒரு தாயத்து கொடுத்து இதை கட்டிக்கொள்ளுங்கள்  மூன்று நாளில் சரியாகிவிடும் என்றார். அவர் சொன்னதை போல் செய்தோம் அதிசயமாக மூன்றே நாளில் அவள் சரியாகி விட்டாள். முன்பு எப்படி சுறுசுறுப்பாக இருந்தாளோ அதே போலவே பழைய வேலைகளை கவனிக்க துவங்கி விட்டாள் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அந்த மந்திரவாதியை பார்த்து நன்றி சொல்வதற்காக சென்றோம். அவரும் நாங்கள் சொன்ன நன்றியை ஏற்றுக்கொண்டு ஒரு பெரிய தொகையை தனக்கு காணிக்கையாக தரும்படி கேட்டார். நான் மலைத்துவிட்டேன். இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது? என்னால் அவ்வளவு முடியாது கருணை வைத்து குறைத்து கேளுங்கள் என்றேன்.

அவர் முடியாது. மிக கண்டிப்பாக இவ்வளவு பணம் வேண்டும் இதை தரவில்லை என்றால் பல விபரீதங்கள் நடக்கும் என்றார். நானும் கடவுள் விட்ட வழி என்று திரும்பி வந்துவிட்டேன் அதன் பிறகு என் மகள் இரண்டொரு நாளில் பழையபடி ஆகிவிட்டாள். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. மீண்டும் அவரிடமே சென்று கத்தி கதறி பார்த்தேன் அவர் மனம் இறங்கவில்லை கடைசியாக அவர் கால்களிலேயே விழுந்து கெஞ்சினேன். அப்போது அவர் கேட்கக்கூடாத ஒன்றை என்னிடம் கேட்டார் அப்படி செய்வதற்கு பதிலாக என் மகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிடுவது சிறந்தது என்று கூறி திரும்பி வந்துவிட்டேன். அன்றுமுதல் எங்களுக்கு இன்னொரு சோதனை ஆரம்பித்தது.

எங்கள் வீட்டின் கூரையில் எங்கிருந்தோ கற்கள் வந்து விழும். வாசல் கதவில் பெரிய பெரிய கற்கள் கதவை உடைத்து விடுவதை போல யாரோ எறிவார்கள். யாராக இருக்கும் என்று வெளியில் வந்து பார்த்தால் யாருமே இருக்க மாட்டார்கள். ஒருநாள் என் மனைவி மற்றும் மகளையும் வீட்டில் தனியாக வைத்துவிட்டு நான் வெளியில் பதுங்கி இருந்து பார்த்தேன் இருட்டிலிருந்து கல்வந்து விழுகிறதே தவிர யார் எறிகிறார் என்று என்னாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஊர்மக்கள் எல்லாம் கூட காவலுக்கு சுற்றி வந்தார்கள் அப்படி இருந்தும் கண்ணுக்கு தெரியாத யாரோ கல்லை எடுத்து வீசி கொண்டே இருக்கிறார்கள். இது அன்றாடம் நடக்கும் கதையாகி விட்டது. ஊர் மக்களும் சலித்து விட்டார்கள் நானும் ஓய்ந்து விட்டேன் எப்படியாவது எங்களுக்கு கதிமோட்சம் வேண்டும் என்றும் விண்ணப்பித்தார்

தாந்த்ரீக சாஸ்திரத்தில் இந்தமாதிரியான நிகழ்வுகளை நடத்துவதற்கு சில வகையான சாத்தான்களை பயன்படுத்துவார்கள். இவைகள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு கல், மரத்துண்டு சிலநேரம் மலத்தை கூட எடுத்து வீசும். அவைகளை கட்டுப்படுத்துவதற்கு என்று தனி மந்திரங்கள் உண்டு. முறைப்படி பயிற்சி செய்யாதவர்கள், முன்பின் அனுபவம் இல்லாதவர்கள் அந்த மந்திரங்களை தவறுதலாக பிரயோகம் செய்து விட்டால் பல விபரீதமான நிகழ்வுகள், அழிவுகள் கூட நடக்கும். நன்கு மந்திரங்களை கற்றுத்தேர்ந்தவர்கள் மட்டுமே இப்படி கல்வீசி தாக்கும் சாத்தான்களை கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள்.

சிலர் செய்வினை கோளாறு வைப்பு என்று கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன? அவைகளுக்கும் இந்த சூன்யங்களுக்கும் சம்மந்தம் உண்டா?

மாயாஜால திரைப்படங்களிலும், மாந்திரீக நாவல்களிலும் ஒரு உருவ பொம்மை செய்து அதன் மீது ஊசியால் குத்துவது, விஷத்தை பாய்ச்சுவது என்று மந்திரவாதிகள் செய்வதை அறிந்திருப்பீர்கள். உதாரணமாக அந்த பொம்மையின் வயிற்றில் குத்தினால் யாருக்காக பொம்மை செய்யப்பட்டு தீய மந்திரங்கள் சொல்லபடுகிறதோ அந்த நபருக்கு வயிற்றில் அளவிட முடியாத வலி ஏற்படும், நோய் ஏற்படும் துன்பத்தால் துடிப்பார்கள்.இப்படி மந்திரங்களால் செய்வதற்கு பெயர் தான் செய்வினை என்பது.

செய்வினை என்பதில் புற்று செய்வினை என்ற ஒன்று இருக்கிறது. இது மகாகொடுமையானது. ஒரு பொம்மை செய்து அதில் எதிரியின் பெயரை உச்சாடனம் செய்து பொம்மைக்கு இரத்த பலி கொடுத்து அதை பாம்பு இருக்கும் புற்றில் தூக்கி போட்டுவிட வேண்டும். ஒருபுறம் கறையானும் இன்னொருபுறமும் பாம்பும் இந்த பொம்மையை தீண்ட தீண்ட யார் பெயர் இணைக்கப்பட்டிருக்கிறதோ அந்த மனிதனும், அவனது குடும்பமும் செல்லரித்து போன மரக்கட்டை போல நோயாலும், வறுமையாலும் வாடி வதங்கி முடிந்தே போவார்கள்.தண்ணீரில் கரைத்த செய்வினையை எப்படி எடுப்பது மகாசிரமமோ அதைவிட சிரமமானது புற்று செய்வினை என்பது. இதை எதிரிகளுக்கு கூட செய்வதற்கு அஞ்சுவார்கள். ஆனால் அதையும் செய்யும் வக்கரித்து போன மனிதர்கள் பலர் இருக்கிறார்கள்.

வைப்பு என்பது மந்திர தகடுகள் எழுதி அதை எதிரியின் வீட்டில் புதைத்து வைப்பதோ அல்லது வேறு எதிலாவதோ மறைத்து வைப்பதோ ஆகும். இப்படி செய்தால் எதிரி பல வகையிலும் துன்பத்தை அனுபவிப்பார். ஆனால் இந்த வைப்பு என்பதை மிக சுலபமாக, சாதாரணமாக ஒன்றிரண்டு மந்திரங்கள் தெரிந்தவர்கள் கூட எடுத்துவிட முடியும். அதை போல சுலபமாக ஒருவருக்கு வைக்கவும் முடியும்.

பில்லி, சூன்யம், ஏவல் என்ற மூன்று வார்த்தைகளும் சங்கலித்தொடர் போல வந்தாலும் ஏறக்குறைய தீய மந்திரங்களால் ஏற்படுத்தப்படும் தீமைகள் என்ற ஒரே பொருளுக்குள் வந்துவிடும். ஒருகாலத்தில் இதற்கான மந்திரங்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு சில பொது நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த பட்டு வந்தது. இன்று நிலைமை சற்று வணிகமயமாக மாறி விட்டது அதனால் பாதிப்புகளும் அதிகரித்து விட்டது.

இந்த தீய மந்திரங்களிலிருந்து' நம்மை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

முதலில் யாருக்கு வேண்டுமானாலும் விருப்பபடி சூன்யம் வைத்து விடலாம் என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. சில கிரகநிலைகளின் அமைப்பை பொறுத்து நூறுக்கு இரண்டு பேருக்கு வேண்டுமானால் சூன்யம் வைக்கலாம். மற்றவர்களுக்கு வைக்க முடியாது. அதுவும் யார் அபிசார பிரயோகத்தால் கஷ்டப்பட வேண்டுமென்று கர்மம் இருக்கிறதோ அவர்களுக்கு தான் சூன்யத்தால் பாதிப்பு வரும்.

அப்படி வந்துவிட்டால் என்ன செய்வது? வாழ்க்கையே அவ்வளவு தானா? என்று யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. வேப்பங்காய் கசக்கிறது என்றால் மாற்றாக சர்க்கரை சாப்பிட்டால் இனிப்பு வந்துவிடும் அல்லவா? அதேபோல தீய மந்திரத்தை அழிப்பதற்க்கான நல்ல மந்திரமும் இருக்கிறது. அதை பயன்படுத்தி நாம் விடுதலை பெறலாம்.

கடவுளை விட உயர்ந்த சக்தி எதுவும் கிடையாது. எனவே தினசரி இறைவழிபாட்டை தவறாது நம்பிக்கையோடு பக்திப்பூர்வமாக செய்து வந்தால் சூன்யம் நம்மை ஒன்றும் செய்யாது. மேலும் ஒருவருக்கு சூன்யம் வைக்க வேண்டுமானால் அவரது குலதேவதையை மந்திரப்படி கட்டிய பிறகே சூன்யம் வைக்க இயலும். நாம் குலதேவதை வழிபாட்டை முறைப்படி செய்தால் தெய்வத்தை கட்டுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடியமானவரை கடவுளிடம் பக்தியும், மனிதர்களிடம் அன்பும் இருந்தாலே சூன்யத்தால் பாதிப்பு வராது.






Contact Form

Name

Email *

Message *