குருஜி அவர்களுக்கு வணக்கம். சென்ற மாதம் நீங்கள் நடத்திய பித்ரு பூஜையில் எனது முன்னோர்களுக்கு, சாந்தி செய்ய வேண்டி உங்களிடம் விண்ணப்பித்திருந்தேன். எனது தந்தையார் நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போதே காலமாகி விட்டார். அதிகம் படிக்காத எனது தாயாருக்கு விபரங்கள் எதுவும் தெரியாததனால் முறைப்படியான திதி கொடுப்பது கூட கிடையாது. என் தகப்பனார் இறந்த நாளில் அவருக்கு பிரியமான உணவுகளை வைத்து அம்மா சாமி கும்பிடுவார். அதுவும் அவர் இறந்த தேதி தான் தெரியுமே தவிர எந்த திதியில் அவர் இறந்தார் என்று தெரியாது.
என்னோடு பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள். என்னையும், தம்பியும் சேர்த்து மொத்தம் ஆறு நபர்கள். நாங்கள் இதுவரை எங்கள் குடும்பத்தில் யாருக்குமே திருமணம் நடக்கவில்லை. அக்கா பேராசிரியராக நாகர்கோவிலில் வேலை பார்க்கிறார். அவருக்கு நாற்பது வயது ஆகப்போகிறது. அவருக்கு கீழே உள்ளவர்களும் படித்து நல்ல நிலையில் இருக்கிறார்களே தவிர யாருக்கும் திருமணம் ஆகாமலே இருந்தது. இதற்காக அம்மா வரன் தேடவில்லை, திருமணத்திற்காக முயற்சி எடுக்கவில்லை என்று கூற இயலாது. அவரால் முடிந்தவரை முயன்றார். எதோ ஒரு காரணத்தினால் தட்டிக்கொண்டே இருந்தது.
ஜாதகம் பார்க்கும் இடங்களிலும், அருள்வாக்கு கேட்கும் இடங்களிலும், உங்கள் குடும்பத்தில் முன்னோர் சாபம் இருக்கிறது அதை சரிசெய்தால் தான் நல்லது நடக்கும் என்று சொன்னார்கள். சிலர் அதற்கான பரிகாரங்களை செய்து தருவதாகவும் கூறினார்கள். நாங்களும் நல்லது நடந்தால் போதும் என்ற எண்ணத்தில் யார் யார் என்னென்ன பரிகாரங்களை சொன்னார்களோ அத்தனையும் செய்தோம். பரிகாரங்கள் செய்தே சில லட்சங்கள் செலவாகி இருக்கும். பணம் போனது கூட கஷ்டமாக தெரியவில்லை. எதுவும் நடக்கவில்லையே என்கிற போது எதன் பெயரிலும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது.
ராமேஸ்வரம் சென்று புரட்டாசி அமாவாசையில் யாகம் செய்ய சொன்னார்கள் செய்தோம். பவானி கூடுதுறை சென்று தர்ப்பணம் செய்ய சொன்னார்கள் செய்தோம். சிலர் குலதேவதைக்கு பூஜைகள் செய்ய சொன்னார்கள் அதையும் செய்தோம். எதுவுமே எங்களுக்கு பலன் தரவில்லை. ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறந்து வைப்பார் கடவுள் என்று சொல்வார்கள் ஆனால் எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை திறந்திருந்த ஒவ்வொரு கதவையுமே கடவுள் மூடினார் என்று சொல்லலாம் .
இனி கொடுத்து வைத்தது அவ்வளவு தான் காலம் முழுவதும் இப்படியே வாழ்ந்து விடுவோம் என்று நாங்கள் அனைவரும் முடிவெடுத்து சந்தோஷமாக வாழ்க்கையை எதிர்கொள்ள துவங்கினோம். இந்த நேரத்தில் நீங்கள் செய்ய போகும் பித்ரு சாந்தி பூஜையை பற்றி என் நண்பன் சொன்னான். உங்கள் பதிவையும் படித்துக்காட்டினான் கண்டிப்பாக சொல்கிறேன் எனக்கு அப்போது நம்பிக்கை வரவில்லை. என் நண்பன் சொன்னதற்காக விபரங்களை உங்களுக்கு அனுப்பி வைத்தேன்.
உங்கள் உதவியாளரிடம் இருந்து தொலைபேசி வாயிலாக எனக்கு அழைப்பு வந்தது. எங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் சாந்தி செய்ததை சொல்லி பிரசாதம் அனுப்பி வைப்பதாக கூறினார்கள். இது வழக்கமான சம்பிரதாயம் என்று நான் அசட்டையாக இருந்தேன். எங்களுக்காக நீங்கள் பூஜை செய்த நான்காவது நாள் என் மூத்த தமக்கையாருக்கு ஒரு மாப்பிள்ளை நிச்சயமானது. என்னால் நம்பவே முடியவில்லை இது எப்படி சாத்தியமாயிற்று என்று நான் இன்றுவரை வியந்த வண்ணம் இருக்கிறேன்.
என் அக்காவிற்கு வரும் வைகாசி திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் மாப்பிள்ளை ஐம்பது வயதை தொட்டவர் என்றாலும், இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை குடும்ப பொறுப்பிற்காக திருமணத்தை தள்ளி போட்ட அவர் என் அக்காவை பார்த்தவுடன் சம்மதித்து விட்டார். நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்.
சுயநலம் இல்லாத உங்களது பிரார்த்தனையாலும், எங்கள் முன்னோர்களின் அனுக்கிரஹத்தாலும், இறைவனின் தயவால் இந்த காரியம் கைகூடி வந்திருப்பதாக எங்கள் குடும்பத்தார் நம்புகிறார்கள். எனது தாயார் கண்ணீரோடு உங்களை தினம் தினம் நன்றியுடன் வணங்குகிறார். நாங்கள் அனைவருமே உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறோம். எங்களைப்போன்ற திக்கற்றவர்களுக்கு நீங்கள் தான் சரியான புகலிடம். இறைவன் அருளால் நீங்கள் பலகாலம் நலமோடு வாழவேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன் என்றென்றும் உங்களது உண்மை தொண்டனாக இருந்து வாழ்வதற்கு விரும்புகிறேன் எங்களை தொடர்ந்து ஆசிர்வாதம் செய்யுங்கள்.
இப்படிக்கு,
உங்கள் பக்தன் ,
நரேந்திரகுமார் ,
கன்னியாகுமரி .
இந்த வாசகரின் தமக்கையாரின் இல்லற வாழ்கை நல்லறமாக அமைய எல்லாம் வல்ல ஸ்ரீ கிருஷ்ணனை வேண்டுகிறேன்.
குருஜி.
முக்கிய அறிவிப்பு:-
பித்ரு பூஜையில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பூஜைக்கான பிரசாதம் பலருக்கும் அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதுவரையில் பிரசாதம் கிடைக்க பெறாதவர்கள் உடனடியாக கீழ்க்காணும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.