Store
  Store
  Store
  Store
  Store
  Store

உயிரை பதப்படுத்தும் சித்தர்கள் !


சித்தர் ரகசியம் - 9


   ண்ணே மாடசாமி அண்ணே! வீட்டுக்குள்ள என்ன செய்றீங்க? கொஞ்சம் வெளியில வாங்க. 

யாரு ராமசாமி பேரனா? இப்போதான் ஒரு பிணத்தை அறுத்து, குடலை சுத்தப்படுத்தி விட்டு, சாதம் வடிக்க அரிசி கழுவுறேன் எதற்கு அவசரமாக கூப்பிடுற?

ஒன்னும் இல்ல அண்ணே! இன்னைக்கு காலையில எங்க ராமசாமி தாத்தா செத்து போயிட்டாரு, அவரை சுத்தப்படுத்ததான் கொண்டு வந்திருக்கிறேன். 

வீடு முழுக்க கும்பலா பிணம் கிடக்கிறது. ஒன்னொன்னா வேலை முடிப்பதற்கு நிறைய நேரமாகும். உன் தாத்தா பிணத்தை திண்ணையில் போட்டுவிட்டு போ முடிந்தால் நாளை .சுத்தப்படுத்துறேன். 

இப்படி ஒரு உரையாடலை நீங்கள் கேட்டால் எப்படி இருக்கும்? ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள். பிணத்தை அறுத்து குடலை எடுத்த கையோடு சாதம் வடிப்பது. வீடு முழுவதும் பிணமாக கிடக்கிறது என்று அலுத்துக்கொள்வது இது ஒரு விசித்திரமான கற்பனை. மிக தீவிரமான மனநோயின் வெளிப்பாடு என்று தானே உங்களுக்கு தோன்றும். இதில் உண்மை இல்லை இப்படி ஒருபோதும் உலகத்தில் நடந்திருக்காது என்று தானே நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் உண்மையில் இது நடக்காத கற்பனை அல்ல. நடந்து இருக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் இன்றல்ல ஏசுநாதர் பிறப்பதற்கு நூறு வருடத்திற்கு முன்பு வரையில் இந்த பூமியில் ஒரு பகுதியில் நடந்த உண்மையான சரித்திரம். 

எகிப்து நாட்டில் மிக பிரம்மாண்டமான பிரமிடுகள் இருப்பதும் அவைகளுக்குள் பதப்படுத்தபட்ட மனித உடல்கள், “மம்மி” என்ற பெயரில் இருப்பதும் நீங்கள் அறியாதது அல்ல. பிரமிடுகளின் ரகசியங்களை பற்றி, அமானுஷ்யங்களை பற்றி நிறைய படித்திருப்பீர்கள். பதப்படுத்தபட்ட எகிப்து "பாரோ" மன்னர்களின் மம்மி சடலங்கள் ஆங்கில திரைப்படங்களில் பேய்களாக நடமாடுவதை கண்டும் மெய் சிலிர்த்திருப்பீர்கள்.  ஆனால் ஒருமுறையாவது இந்த மம்மிகள் ஏன் உருவாக்கப்படுகிறது? எதற்காக உருவாக்கப்பட்டது? எப்படி உருவாக்கினார்கள்? ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் இந்த உடல்கள் எப்படி கெட்டுப்போகாமல் இருக்கிறது? என்பதை நீங்கள் சிந்தித்து இருப்பீர்களா? 

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் மனிதர்கள் மரணத்திற்கு பிறகு தங்களது கல்லறைகளில் அமைதியாக உறங்கி கொண்டிருப்பார்கள். இறுதி தீர்ப்பு வழங்குவதற்காக இறைவன் பூமிக்கு வருவான் அப்போது அவர்கள் அதாவது கல்லறையில் உறங்கி கொண்டிருப்பவர்கள், தங்களது நல்வினைக்கேற்ற சன்மானத்தையும், தீவினைக்கேற்ற தண்டனையும் பெறுவார்கள் என்று நம்புகிறார்கள். இவர்களது நம்பிக்கைக்கு முன்பு எகிப்தியர்களும், யூதர்களும் வேறு மாதிரியான நம்பிக்கைகளை கொண்டிருந்தார்கள். 

இறந்துபோன உயிர் சரீரத்தை விட்டுவிட்டு மேலுலகம் செல்கிறது. அங்கே கடவுளின் சபையில் தண்டனையோ, பரிசோ பெற்று பூமிக்கு மீண்டும் திரும்பி வரும். அப்படி திரும்பி வரும் நாளில் அதனுடைய பழைய உடம்பு அப்படியே பாதுகாக்கப்பட்டு உருக்குலையாமல் இருந்தால் அந்த உடம்பிற்குள் சென்று பழையபடி மனித வாழ்க்கையை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு உடம்பு இல்லாமல் போய்விட்டால், பேயாக அலைந்து பெரிய தீங்கு செய்வார்கள் என்று நம்பினார்கள். இதனால் இறந்த உடம்பை பாதுகாப்பதற்கு மிகவும் பாடுபட்டார்கள். 

துணியில் சுற்றப்பட்ட உடம்பு, பிரமிடுகளுக்குள் அடைக்கப்பட்ட உடம்பு, தங்கத்தால் ஆன பேழைகளுக்குள் பாதுகாக்கப்பட்ட உடம்பு, இவைகளை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். அருங்காட்சியகங்களில் மம்மிகளை பார்த்துவிட்டு உறக்கம் இல்லாமல் பயந்துபோன அவர்கள் நம்மில் எத்தனையோ பேர் உண்டு. திரைப்படங்களில் நடந்து வருகிற பதப்படுத்தபட்ட மனித வடிவங்கள் ஆயிரம் தான் தைரியசாலியாக இருந்தாலும் நம்மையும் கூட மிரட்டுவதை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட மம்மிகள் உருவாகும் விதத்தை பார்த்தோம் என்றால் அச்சமும், அறுவறுப்பும், வியப்பும் ஒருங்கே நமக்கு ஏற்படும். 

பொதுவாக மம்மிகள் மூன்று வகைகளாக உருவாக்கப்படுகிறது. முதல்வகை அரசர்களும், பெரிய பணக்காரர்களும் இறந்து போனால் அவர்களது உடம்பு அதிகப்படியான செலவில் பதப்படுத்தபடுகிறது. சாதாரண ஜனங்களுக்கு மிதமான செலவும், ஏழைகளுக்கு மிகக்குறைவான செலவும் செய்து சடல பாதுகாப்பை அந்த காலத்தில் செய்திருக்கிறார்கள். வாழும் காலத்தில் தான் பணமும், அதிகாரமும் மனிதர்களை கூறு போட்டிருக்கிறது என்றால் இறந்த பிறகும் பணதகுதியை வைத்தே ஒருவனின் பிணதகுதி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 

ஓர் அரசர் இறந்துவிட்டால் சடலத்தின் மூக்கு வழியாக இரும்பு கொக்கிகள் நுழைக்கப்பட்டு மூளையின் எல்லா பகுதிகளும் சுரண்டி எடுக்கப்பட்டுவிடும். அப்படி எடுக்க முடியாமல் சில துணுக்குகள் உள்ளே ஒட்டி இருந்தால் சில மருந்துகளை உள்ளே செலுத்தி அவைகளை வெளியில் எடுத்து விடுவார்கள். அதன் பிறகு பிணத்தின் வயிற்றை உலோக கத்திகளை பயன்படுத்தாமல் ஏரிகல் கொண்டு கிழித்து குடலை சுத்தமாக வெளியில் எடுத்து விடுவார்கள். அதன்பிறகு தென்னை மரத்திலோ, பனைமரத்தில் இருந்தோ எடுக்கபட்ட சாராயத்தை கொண்டு உள் உறுப்புகளை சுத்தம் செய்வார்கள். 

இங்கே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். எகிப்து நாட்டில் தென்னைமரமும் கிடையாது. பனைமரமும் கிடையாது. அவர்களுக்கு இம் மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கள்வகைகள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்தே சென்றிருக்கிறது. இன்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் நாடுகடந்து மருந்திற்காக மது விற்பனையை நடத்தி இருக்கிறான். ஆனால் இன்றோ தமிழனை குடிகாரனாக மாற்ற அயல்நாடுகளிலிருந்து மது கொண்டு வந்து விற்கப்படுகிறது. இது தான் காலத்தின் கொடுமையோ? சரி நம் விஷயத்திற்கு வருவோம். 

பிணத்தின் வயிறு சுத்தப்படுத்தபட்ட பிறகு கரியபோளம், லவங்கம், லாவங்கபத்திரி, சாம்பிராணி, குங்கிலியம், போன்றவைகளால் நிரப்பி பலவித வாசனை பொருட்களை தூவி தைத்து விடுவார்கள். அதன்பிறகு உடம்பு முழுக்க சந்தன எண்ணெயில் வெள்ளை போளத்தை கலந்து பூசுவார்கள். இப்படி பூசி இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்த பிறகு ஒருவித மருந்து எண்ணெயில் எழுபது நாட்கள் ஊற வைப்பார்கள். அதன்பிறகு லினன் துணிகளில் சுற்றி அலங்காரமான பெட்டிகளில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். இது பணக்கார பிணங்களின் நிலை. 

இனி நடுத்தர பிணங்களின் கதையை பாப்போம். இந்த பிணங்களுக்கு மூளை வழியாக கொக்கி போடும் கதையெல்லாம் கிடையாது. பிணத்தின் ஆசனவாய் வழியாக தேவதாரு மரத்திலிருந்து எடுக்கப்படும் செவ்வகில் எண்ணெயை உடம்பிற்குள் செலுத்தி அரக்கு வைத்து துவாரத்தை மூடி விடுவார்கள். இருபது நாட்கள் மூலிகை எண்ணெயில் ஊற வைத்த பிறகு, பிணத்தை எடுத்து உள்ளே செலுத்தப்பட்ட செவ்வகில் எண்ணெய் வெளியில் போகுமாறு செய்துவிடுவார்கள். இந்த எண்ணையின் விசேஷம் என்னவென்றால் மூளை மற்றும் உடல் கொழுப்புகள் எல்லாவற்றையும் இது உருக்கி வெளியில் கொண்டுவந்து விடும். எலும்பும், தோலும் மட்டுமே மீதம் இருக்கும். 

ஏழைகளின் கதை செத்தவுடன் வயிற்றை கிழித்துக்குடலை எடுத்துவிடுவார்கள். அதன்பிறகு வயிற்றுக்குள் வரகு என்ற தானியத்தை வைத்து, உடலை சிலமணிநேரம் எண்ணெயில் ஊறவைத்து கொடுத்துவிடுவார்கள். பிணத்தை வாங்கிச்சென்று ஆகவேண்டிய காரியத்தை உறவினர்கள் பார்க்க வேண்டியது தான். இந்த விபரங்களை மிக தெளிவாக கிறிஸ்து பிறப்பதற்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஹிராட்டஸ் என்ற அறிஞர் எகிப்தில் உட்கார்ந்து தான் கண்ணால் பார்த்ததை ஒன்றுகூட விடாமல் எழுதி வைத்திருக்கிறார். இவைகளை படிக்கும் போது நமக்கு வியப்பாக மட்டுமல்ல, அக்கால மனிதர்கள் தங்களது நம்பிக்கைக்களுக்காக எந்த அளவு அறிவைக்கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. 

சித்தர்களின் ரகசியம் அவர்கள் மனித உடம்பை பற்றி கூறுகிற தத்துவம் இவைகளை பேசிவந்த நான் திடீரென்று எகிப்துக்கு சென்று மம்மிகளை உருவாக்குவது எப்படி? சமையல் குறிப்பு கூறுவதை போல கூறி இருப்பது ஏன்? என்ற கேள்வி உங்களில் சிலருக்கு வரலாம். காரணம் இல்லாமல் இதை நான் கூறவில்லை. இறந்து போன உயிர் இல்லாத சடலத்தை, பல்லாண்டுகள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்கு இவ்வளவு கஷ்டங்களை தாண்டி வரவேண்டும் என்றால், இந்த உடம்பை உயிர் பிரியாமல் ஜீவனோடு வாழ வைக்க எத்தனை பாடுபட்டிருக்க வேண்டும்? அதற்கு சித்தர்கள் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்? தங்களது அறிவை எந்தெந்த வகையில் உருக்கி இருக்க வேண்டும்? என்பதை நினைத்து பார்க்க தான் மம்மியின் கதையை சொன்னேன். இனி நமது சித்தர்கள் ஜீவனோடு வாழ்வதற்கு வாழ்விலே இறைவனை காண்பதற்கு கூறிய ரகசிய வழியை தெரிந்து கொள்ள படிப்படியாக பயணம் செய்வோம். 


Contact Form

Name

Email *

Message *