குருஜி அவர்களுக்கு வணக்கம். இரண்டுவாரங்களுக்கு முன்பு பேருந்தில் வரும்போது பத்தாயிரம் ரூபாயை தொலைத்து விட்டேன். அது தொலைந்ததா? அல்லது பையிலிருந்து யாராவது திருடிவிட்டார்களா? என்பது தெரியவில்லை. நான் பொருட்களை திருட்டு கொடுப்பதும், தொலைப்பதும் புதியதல்ல. நிறையமுறை என் வாழ்வில் இது நடந்திருக்கிறது சிறியதும் பெரியதுமாக சுமார் ஒருலட்சம் ரூபாய் வரை இந்த வகையில் இழந்திருப்பேன். பொருட்கள் களவுபோகாமல் இருக்கவும், தொலையாமல் இருக்கவும் ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? நீங்கள் சொன்னால் அது எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் பயனுடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்படிக்கு,
மாணிக்கவேல் கவுண்டர்,
கோபிசெட்டிபாளையம்.
கோபிசெட்டிபாளையம் நல்ல செழுமையான பூமி. வளமையான விளைச்சல் இதனால் கையில் அதிகமான பணம். அதனால் உங்களுக்கு பணத்தின் மீது பொறுப்பில்லை என்பது இந்த கேள்வியின் முதல் இரண்டு வரிகளிலிருந்து என்னால் யூகிக்க முடிகிறது. அசட்டையோடு பொருட்களை வைத்திருப்பவன் இன்றில்லை யென்றாலும் என்றாவது ஒருநாள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை வரும் ஜாக்கிரதை.
மாணிக்கவேல் அவர்களுக்கு நான் மேலே சொன்னபதில் போதுமென்று நினைக்கிறேன். ஆனாலும் சிலருக்கு எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் கண்ணயரும் நேரத்தில் பல பொருட்கள் களவு போய்விடுவது உண்டு யாருடைய ஜாதகத்தில் ஐந்தாம் பாவத்தில் ராகு இருக்கிறதோ, அவர்களின் பொருள் அடிக்கடி களவு போகும் என்பது விதி.
இப்படிப்பட்டவர்கள் வருடத்தில் ஒருமுறை திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை வழிபட்டு அவரது உண்டியலில் ஒருரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயங்கள் பதினொன்றை காணிக்கையாக செலுத்த வேண்டும். வருடம் தோறும் திருப்பதி செல்லமுடியாதவர்கள் நண்பர்கள் செல்லும் போது அவர்களிடம் கொடுத்தனுப்பலாம்.